Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 36 - சரோஜா ராமமூர்த்தி
2.36. நம்பிக்கை
நல்ல மனசுடன் அன்று சுவாமிநாதன் செய்த ஆசியிலே அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடைய பிரம்புப் பெட்டி ராமாயணப்புத்தகம் மூக்குக் கண்ணாடி விபூதிப்பை யாவும் அவருடைய அறையிலே வைக்கப்பட்டன. அந்தக் கிழவர் எப்பொழுதோ தெரியாமல் காமிராவின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட போது எடுத்த போட்டோவைப் பெரிதாக்கி அறையில் மாட்டி வைத்தார்கள்.
ஸ்ரீதரனின் உள்ளமும் இனி மூர்த்தி விடுதலை அடைந்து வந்து விட்டால் திருத்தி விடுவான் என்று சொல்லியது. ராதாவும் அவ்விதமே நம்பினாள்.
ஒரு நாள் மாலை பவானி டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்கு வந்தாள். சமீபத்தில் அவள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டாள். அதை ஸ்ரீதரனிடம் கூறி ஏதாவது ஆலோசனை கேட்டுப் போகலாம் என்று வந்திருந்தாள் பவானி.
இடையில் அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் அறிந்தவள் அவள். எதிலும் அக்கறை காண்பித்துக் கொள்ளாத அவள் தமையன் நாகராஜன், திடும் என்று மூர்த்தியைப் பற்றி வீட்டில் வந்து கூறியதும் பவானிக்குப் பெரிதும் வருத்தம் ஏற்பட்டது. மூர்த்தியின் குணங்களைப் பற்றிப் படிப்படியாக அவள் நினைத்துப் பார்த்தாள். ஒருத்தியை மணந்து கொண்ட பிறகும் மாறாதவன். அன்று அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டான்.
”கோவிலுக்கா போகிறீர்கள்?' என்று அவன் கேட்டுச் சிரித்ததும், தன்னையும் பாலுவையும் தொடர்ந்து டவுன் பஸ்ஸில் அவன் வந்ததும் பிறகு ஒரு நாள் சேஷாத்ரியுடன் அவன் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் 'வாங்கிக் கட்டிக்' கொண்டதையும், கடைசியாக ரயிலடிக்குவந்து தன்னிடம் நயவஞ்சகமாக விலாசம் கேட்டதையும் நினைத்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் பவானி.
இப்படிப்பட்டவனிடம் ஓர் அணுவளவு தான் பிசகி நடந்திருந்தாலும், என்னவெல்லாம் நேர்ந்திருக்குமோ என்கிற கலக்கம் அவள் மனத்தில் ஏற்பட்டது . ராதாவிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நாடகத்துக்கு அவள் டிக்கட் விற்க வந்தபோது இருந்த நிலைமையை