Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 31 - சு. சமுத்திரம்
அந்த ஆட்டோ அதுபாட்டுக்கு ஓடியது. முனியம்மா தனது அண்ணன் - போலீசிடம் சரோசாவைப் பற்றி தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டே வந்தாள். “பாவமண்ணா... என்ன மாதிரி கேஷுவல். அடுத்தவங்க கஷ்டப்பட பொறுக்காதவள். இவளோட குடும்ப நிலமை எனக்குத் தெரியும். கொலை செய்யக்கூடியவள் இல்லண்ணா. அவளோட முகத்தை உத்துப்பாரு, உனக்கே தெரியும்!”
‘அதனாலதான் சொல்றேன், நீ இதுல தலையிடாதேன்னு. அதோட, பெரிய பெரிய ஆளுங்க கிட்ட இருந்து போன் மேல போனா வருது. இவள் ஸ்டேஷன்ல கொண்டு ஒப்படைக்கதுதான் என்னோட வேலை."
சரோசா, அவர்கள் பேசுவதை காதில் வாங்காமலும், கண்ணில் விழும்படி ஏறெடுத்துப் பார்க்காமலும் ஆட்டோவுக்குப் பின்புறமாக இரண்டு கைகளையும் நீட்டியபடி அப்படியே கிடந்தாள். இதற்குள் அந்த ஆட்டோ கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும், மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிவிட்டது. இடது பக்க ஒரு மாடிக் கட்டிடத்தைப் பார்த்த முனியம்மா, அதை அந்த ஆட்டோ சிறிது கடந்த பிறகு, ஆட்டோவை நிறுத்தும்படி டிரைவரின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அது நின்றதும், போலீஸ் அண்ணனிடம் முறையிட்டாள் : “என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியுமுண்; தலையை அடகு வச்சாவது சொல்லுற சொல்லைக் காப்பாத்துறவள். இந்தப் பொண்ணு அதோ அந்த வீட்டில் ஐநூறு ரூபாய் கடன் வாங்குனாள். இவளுக்கு நான்தான் ஜாமீன் போட்டேன். ஜெயிலுக்குப் போற இவளோட கடன கொஞ்சம் கொஞ்சமா அடைக்கேன்னு கடங்காரம்மாகிட்டே சொல்லணும். அதுக்கு இந்தப் பொண்ணு என்னோட வரணும். வேனுமுன்னா நீயும் வா, அஞ்சே நிமிஷம்தான். ஒருவேளை அந்த அம்மா இல்லாட்டி ரெண்டே ரெண்டு நிமிஷம்தான். குளிச்சிட்டுகிளிச்சிட்டு இருந்தால் பத்து நிமிஷம்; ஒன் தங்கச்சி மேல நம்பிக்கை இருந்தா விடு."
அந்த போலீஸ்காரர் பதில் பேச முடியாமல் வாய் மட்டும் திறந்து காட்டினார். முனியம்மாவைப் பற்றித் தெரியும். அவளால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படாது. ஆனால், இவள் அவளைத் தட்டிவிட்டுப் போயிட்டா?
"நான் பிள்ளை குட்டிக்காரன் தங்கச்சி. நீ ஆயிரம் சொல்லு கேப்பேன், ஆனா. இந்த விஷயத்துல என் போக்குல விட்டுடு. யூனிபாரம் போயிட்டா கோமணம் கூட கெடையாது.