அவனோ, எவரையும் பார்க்காமல், தன்னைத்தானே உள்நோக்கிப் பார்ப்பதுபோல் நின்றான். பிடரி வரை நீண்ட முடி. காதுகளில் பாதியை மூடி அவற்றை உருமாற்றிக் காட்டிய கேசம். புதர்போல் மண்டிய உச்சி. நீளவாக்கில் போகாமலும், உருண்டு திரளாமலும் அவை இரண்டும் கலந்த முகம். செம்மண் நிறம். சிமெண்ட் நிற பாண்ட். அதற்குள் சொருகப்பட்டாலும், வெளியே இடுப்புச் சதையைக் காட்டும் நீலச்சட்டை. பதினெட்டு வயதைக் காட்டும் உடல். உச்சி முதல் பாதம் வரை ஒரு குழைவு. விகிதாச்சாரத்திற்கு சற்று அதிகமான பிட்டம். பால் வடியும் முகம். ஆனால் அது கள்ளிப் பாலோ என்று சந்தேகிக்கும் அளவிற்கான மாறாட்டம். சில சில்லறைக் குறைகளுடன் கூடிய அழகுப் பையன் தான். அவன் அழுவது, அழகே அழுவது போலிருந்தது. இப்போது அடித்தவன் கூடப் பேசாமலிருந்தான். ஆனால், அங்குமிங்குமாய்க் கிடந்த சில தனிக்கட்டைகள் ஆஜராயின.
"போலீஸ் ஸ்டேஷன் இதோ வரப்போகுது... இவன ஒப்படைச்சிட்டு போயிடலாம்."
போலீஸ் என்றதும், அந்தப் பேருந்து ‘சடன் பிரேக்கோடு’ நின்றது. ஓட்டுநர் இருக்கையிலிருந்தபடியே திரும்பி “ஏன்யா... நீ கண்டக்டர் வேலை செய்ய வந்தியா? இல்ல கள்ளக்காதலை ரசிக்க வந்தியா?" என்றார். அதற்குப் பிறகுதான், கண்டக்டருக்கும் சுரணை வந்தது. முடங்கிக் கிடக்கும் பறவையைப் பார்த்து, நிதானமாகவும் நம்பிக்கையோடும் நடக்கும் பூனை போல் நடந்தார். சுயம்புவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இழுத்த இழுப்பிற்கு வந்ததில், அவருக்கு பயம் கலைந்தது. அதற்காக ஒரு சலுகை காட்டுவது போல, அவன் பெட்டியாகத்தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டதைத் தூக்கி அவன் கையில் திணித்தார். அவன் முதுகில் கை வைத்தபடியே அவனை நடத்தினார். பின் வாசலுக்குக் கொண்டு வந்து, ஒவ்வொரு படியாய் இறங்கி, இறங்கி, அவனையும் இறக்கி விட்டார். அவன் காட்டிய பார்வை தாங்க மாட்டாது மீண்டும் அவனை ஏற்றிவிடலாமா என்பது போல் விசிலை ஊதாமலேயே விட்டு வைத்தார். இதற்குள் பாதிப் பயணிகள் மிச்சம் மீதிகளின் மௌனச் சம்மதத்தோடு “சே... சே... நல்ல பஸ்ஸுய்யா..." என்று முணுமுணுத்தார்கள். நடத்துநர் விசிலடித்தார். மனசாட்சியை பலவீனப்படுத்திக் கொண்டு பலமாகவே விசிலடித்தார். பேருந்து பேரிரைச்சலோடு பாய்ந்தது.
தரையில் கால் தட்ட நின்ற அவன் - அந்தச் சுயம்பு, கையிலிருந்த சூட்கேஸை வீசியடித்தான்.