“நான் வளைக்கலை மாமா. அது தானா வளையுது.”
“என்ன புள்ள அப்படிப் பாக்கே. உன் மருமகனுக்கு மொதல்ல மோர் கொண்டுவா.”
அந்தம்மா, உள்ளே போய்விட்டாள். சுயம்பு தன் பக்கம் உள்ள நாற்காலியில் இருக்கும் ‘கரி மூஞ்சியையும்’ எதிர்பக்கத்து ‘சிடு மூஞ்சியையும்’ சகிப்புத்தன்மையோடு பார்த்துக் கொண்டு அதே சமயம் எரிச்சலாய்க் கேட்டான்.
“இவங்களுல எவரு மாப்பிள்ளை...”
பிள்ளைத்தாய்ச்சி, அப்போதே அவன் மைத்துனனாய் ஆகிவிட்டதாய் நினைத்துக் கிண்டலும் கேலியுமாய்க் கேட்டாள்.
“நீங்களே கண்டுபிடிங்க...”
சுயம்பு, எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தான். எவரும் பிடிக்கவில்லை. ஒருத்தன் கூட ‘ஆம்புளையாய்’த் தெரியவில்லை. ‘எக்கா எக்கா இந்தக் கல்யாணம் நடக்காதுக்கா. நடந்தால் கிளி வளர்த்து பூனை கிட்ட கொடுக்கதுக்கு சமானம். ஆலம்பழத்தை அண்டங்காக்கா கொத்திட்டுப் போறது மாதிரி... பூனையாயிருந்தா கல்லடிப்பேன். காக்காவா இருந்தால் கையை ஓங்குவேன். ரெண்டுல எதையுமே ஒன்கிட்ட அண்ட விடமாட்டேன்.’
சுயம்பு, தன்னிடமே பேசுவதுபோல் முனங்கியதை பிள்ளைத்தாய்ச்சி ரசித்தாள். அவளும் அப்படித்தான். மாப்பிள்ளை பிடிக்கவில்லையென்று தனக்குள்ளேயே முன்பெல்லாம் முணுமுணுத்தவள். இதற்குள் அந்த இளைஞர்கள் இருவரும் அழகுப் பரிட்சைக்கு அவனிடம் மார்க் வாங்க ஆசைப் பட்டவர்களாய் லேசாய்ச் சிரித்தார்கள். வாயும் வயிறும் புதிரவிழ்த்தாள்.
“ஓங்க பக்கத்தில இருக்கவன் என் சின்ன அண்ணன். இவரு எங்க வீட்டுக்காரரு. அவரு...”
“ஒங்க அப்பாவா இருக்கணும். இல்ல மாமனாரா இருக்கணும். அப்போ மாப்பிள்ளை யாரு...”