இருந்த பச்சையம்மா, அந்த நிகழ்ச்சி பற்றி விளக்கப் போனாள். பச்சைக் கரை போட்ட, வெளிர் மஞ்சள் சேலையில், வெள்ளை வளையல்களில், பச்சை மதலைபோல் அனைவரையும் ஊடுருவிப் பார்த்த சுயம்புவை, முட்டியில் செல்லமாய் தட்டியபடியே, மெதுவான குரலில், பச்சையம்மா விளக்கினாள். எவளாவது, ஒரு லோலாயி தன்னோட விளக்கம் சரியில்லை என்று தட்டிக் கேட்டுவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த மாதிரி சமாசாரங்களை இப்படித்தான் ரகசியமாய் பேச வேண்டும் என்பது போல் பேசினாள்.
“அதோ படத்துல இருக்கவள்தான் ஒன்னோட, என்னோட, நம்மோட லோகமாதா... இந்த மாதா மூலம் தான் மகளே நாம் உற்பத்தியானோம். அந்தக் கதைய சொல்றேன் கேள். அதோ... மாதா படத்துல. மேலே ஒரு கோட்டை தெரியுது பாரு. அந்தக் கோட்டையில் இருந்து ஒரு காலத்துல அரசாண்ட மவராசா காட்டுக்கு வேட்டையாடப் போயிருக்கான். அங்கே, துர்க்காதேவி தன் தம்பியோட ஏதோ பேசிட்டு இருந்திருக்காள். மவராசா பார்த்துட்டான். தேவிகிட்ட போயி ‘ஒன்னோட நான் சேரணும். சாயங்காலம் வருவேன். தயாரா இரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அரசனாச்சே... தடுக்க முடியுமோ... இப்போ நமக்கு எப்படி போலீசோ அப்படி அப்போ அவங்களுக்கு மவராசா. துர்க்கா தேவி, தவியாய் தவிச்சாள். உடனே, தம்பிக்காரன் அக்கா சேலையை உடுத்துக்கிட்டு அவள மாதிரியே வேசம் போட்டான், அக்காவுக்கு தன்னோட துணியக் கொடுத்து, அவளுக்கு ஆம்பளை வேஷம் போட்டு வாசல்ல உட்கார வச்சுட்டு இவன் குடிசைக்குள்ள போயிட்டான். சொன்ன நேரத்துக்கு வந்த மவராசா, குடிசைக்குள் போய், பொம்பளை வேடம் போட்டவனை ஏதோ பண்ணிட்டுப் போயிட்டான். வெளியே வந்த தம்பி, துர்க்காதேவியைப் பார்த்தான். பக்கத்துல வந்த ஒரு நாயை கீழே வெட்ட வேண்டியதை வெட்டிட்டு, தம்பிக்கும் அப்படி வெட்டிட்டாள். தம்பிகிட்ட சொல்லிட்டாள். இனிமேல் நீ அலியப்பா. ஒனக்குன்னு தனி ஒலகத்தை நான் தாறேன்! நீ அலி அவதாரமாக பக்ராஜி என்கிற இடத்துக்குப் போ... அங்க ஒனக்கு கோயில் கட்டிக் கும்பிடுவாங்க... ஒன்னத் தேடி வார அலிகள் காலுலயும், எல்லோரும் விழுந்து கும்பிடுவாங்க... நீயோ ஒன் வம்சாவளியில யாரோ ஒருத்தரைப் பார்த்து பொட்டையா போன்னு சொன்னால் சொன்னதுதான். நிச்சயமா பலிக்கும்... இது, நான் ஒனக்கு கொடுக்கிற வரம் என்று துர்கா சொல்லிவிட்டாள். இதுதான் நம்ம வரலாறு. அதனாலதான் ‘அறுத்துப் போட்ட’ ஒவ்வொரு பொட்டையும், முதல்ல நாய்கிட்ட காட்டணும். அப்புறம் நாற்பது நாள் விரதம் இருக்கணும். அதற்குப் பிறகு இந்த பாத்திமாவுக்கு நடக்கிறது மாதிரி பூஜை நடக்கும். அப்புறம்தான் அதெல்லாம்.”