ஒரு பறவைப் பார்வையாய் பார்த்துவிட்டு லேசாய் சிரித்தபடியே சொன்னாள்.
“இந்த ரெண்டு நாளுலயே, என் மகளையும் உங்களையும் பார்க்காமல், என்னால இருக்க முடியல. செத்துப்போனால் எப்படித்தான் இருப்பேனோ...”
மேகலை, அப்படிப் பேசக்கூடாது என்பதுபோல் அம்மாவின் வாயைப் பொத்தினாள். பிறகு அவள் பாதங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அழப் போனாள். கங்கா தேவி அவள் கண்களைத் துடைத்து விட்டபடியே பேசினாள்.
“நீ அழுகுறதுக்காக பிறக்கலடி, மகளே. நீ வாழ வைக்க வந்தவள். ஒரு அப்பாவி சர்தார்ஜிய நீ காப்பாத்துன விதத்தைக் கேள்விப்பட்டேன் மகளே. இதுக்காக நான் ரொம்ப ரொம்ப பெருமைப்படறேன்... மகளே. அந்த சர்தார்ஜி எங்க இருக்கார்? சரி சரி இருக்கட்டும், வெளில வரவேண்டாம்னு சொல்லுங்க. பேய் கொண்ட ஜனங்கள். வேலி பயிரை மேயுது. பயிறு நஞ்சை துப்புது... கவலைப்படாத என் மகளே! நீ முழுசா பக்குவப்படுறது வரைக்கும், இந்த அம்மாவுக்குக் கல்லைத் தூக்கிப் போட்டாலும் சாவு வராது. ஏண்டி உங்களத்தான், என்னையும் என் பொண்ணையும், கொஞ்சநேரம் தனியா இருக்க விடுறீங்களா...”
கூட்டம், மெல்ல மெல்ல கரைந்தது. ‘வெந்நீர் வெச்சு ஒத்தடம் போடட்டுமா...’ என்று கேட்ட லட்சுமியையும், கங்காதேவி கண்களால் போகச் சொல்லிவிட்டாள். பிறகு மேகலையின் தோளைப் பற்றியபடியே கட்டிலில் உட்கார்ந்தாள். மேகலை கீழே இருந்தபடியே அவளை அண்ணாந்து பார்த்தாள். ஒருவரின் அருகாமை, இன்னொருவருக்கு சுகம் கொடுத்திருக்க வேண்டும். பேச்சற்ற பெரும் சுகத்தில், ஒருவரையொருவர் ஈர்த்தபடியே இருந்தார்கள். பிறகு கங்காதேவி வழியெங்கும் தான் கண்ட கோரக் காட்சிகளை, மனிதர் உயிரை மனிதர் பறித்த கொடுரக் காட்சிகளை விவரித்தாள்.
“எதிரும் புதிருமா வருகிற ரெண்டு நாய்கள்ல ஒரு நாய் கடிக்கப் போகுதுன்னு வச்சுக்கோ, அப்போ... எதிர்ல வருகிற நாய் பதிலுக்குக் குலைக்காம வாலை பின்னங்கால்களுக்குள்ள சொருகிக்கிட்டா, கடிக்கப் போற ரெளடி நாய் அதைக் கடிக்காது. ஆனால் மனுஷன் அப்படியா...? கும்பிடக் கும்பிட வெட்டுறானம்மா... எந்தக் காலுல சரணாகதியா விழுறானோ அந்தக் காலாலயே விழுந்தவன் தலைய மிதிக்கானம்மா... மனுஷனை மிருகம்னு சொல்றது