Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 36 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 36
லட்சுமி மேகலையை வீட்டுக்குள்ளேயே பிடித்து வைத்துக் கொண்டாள். அறைக்கதவைப் பூட்டிவிட்டு, டி.வி. ஸ்விட்சைப் போட்டுப் பார்த்தாள். ஒரு அலை வரிசையல்ல, பல அலை வரிசைகள். லட்சுமி, தொலைக்காட்சியைத் திட்டித் தீர்த்தாள். அந்தப் பெட்டியைக் கையால் குத்தப்போன மேகலையைத் தடுத்துக் கொண்டாள். மேகலைக்கு ஒரே அழுகை. என்னைக்கு அவளுக்கு ஒரு நல்ல நாள் வந்ததோ, அதுவே கெட்டநாளாகும்படி இப்படி நடந்திட்டே. கங்காதேவி அம்மா பொறி கலங்கி போகும்படி ஆயிட்டே...!
மேகலை, லட்சுமியிடம் இதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். அவள்தான் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதடி... எப்படியோ உனக்கு எல்லாம் முடிஞ்சபிறகு இது தெரிஞ்சுதேன்னு ஆறுதல் படுடி...” என்றாள். மேகலை தன்னைப் பற்றி மேற்கொண்டு நினைக்க மறுத்தாள். அன்னை இந்திரா கொலையுண்ட நிகழ்ச்சியைத் தனக்குள்ளேயே சுற்றவிடுவது அசிங்கம் என்பதைப் புரிந்து கொண்டவள் போல், லட்சுமியின் தோளில் கைபோட்டு முடங்கிக் கிடந்தாள். ஜன்னலைத் திறந்துவிட்டாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சோகமாய் சோகத்தைப் பகிர்ந்து முடங்கிக் கிடந்தனர். குப்புறப் படுத்தும் தூங்கினர். அன்னை இந்திராவின் சோகமும், கடந்த பத்து நாட்களாக பட்ட பாடும் தூக்கமாய் வந்தது. என்றாலும் சிறிது நேரத்தில், பயங்கரமான சத்தங்கள். அவர்கள், ஒரே சமயத்தில் எழுந்தார்கள்.
எங்கும் காரிருள். மின்சாரக் கம்பங்கள், பல்புகள் இல்லாமல் கிடந்தன. அதில் ஒட்டியிருந்த கண்ணாடிச் சிதறல்கள்தான் மின்மினியாய் மின்னின. மற்றெல்லாம் காரிருள், காட்டிருள். மேகலை சுயம்புவாக, மாணவனாக இருந்தபோது, அந்த தார்ச்சலையைப் பிடித்ததே இருள் அதைவிட அதிகப் பிடிப்பான இருள். இருளுக்குப் பின்னே எல்லாம் என்பதுபோல, விதவிதமான சத்தங்கள். எவையோ நொறுக்கப்படுவது போன்ற சத்தம். வெடிப்பது போன்ற சத்தம், வெட்டு மாதிரியான சத்தம். அடிப்பது போன்ற சத்தம். ‘மா, மா’ என்று மருவும் சத்தம். எவையெவையோ கீழே விழுந்து சிதறுவதுபோன்ற சத்தம் முஜே... சோடுதோ... முஜே... பச்சாவோ என்ற சத்தம். சிறுவரும் மகளிரும் கெஞ்சி அழும் சத்தம். அதுவே தானாய் அடங்கி, நிசப்தமாக மாறும்போது, இன்னொரு பகுதியில் இதேமாதிரியான சத்தங்கள். கங்காதேவி விறுவிறுவென்று டோலக்கை சட்டென்று நிறுத்துவாளே, அப்படிப்பட்ட நிசப்தம். மீண்டும்