அடிப்பாளே அப்படிப்பட்ட ஓலச் சத்தம். ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்தால், ஆங்காங்கே தீப்பந்தங்கள். சாலைகளில் பலரை எரியூட்டுவதற்குப் போதுமான ஜுவாலைகள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கதவுகள் தலையிலடிப்பதுபோல் சாத்தப்படுகின்றன. மனிதர்கள் சிதறி ஓடுகிறார்கள். மனிதர்களை, மனிதர் துரத்துகிறார்கள். கண் தெரியாமல் ஓடும் கூட்டம். அவர்களைத் தீப்பந்தத்தால் தேடும் கூட்டம். நாலுபேர் ஒரு ஜுவாலைக்குள் தூக்கிப் போடப் படுகிறார்கள். வெந்ததும் வேகாததுமாய்த் துடிக்கிறார்கள். அவர்களின் சுடலை ஒளியிலேயே இன்னொருத்தரின் நீண்ட கொண்டையில் ஒரு திரவம் தெளிக்கப்படுகிறது. ஒரு குச்சி உரசப்படுகிறது. ஒரு மனிதனே தீப்பந்தமாய் எரிகிறான். கும்பிட்ட கைகளுக்கு வெட்டு. காலில் விழுந்த தலைகளுக்குக் காலாலேயே மோட்சம் கொடுக்கப் படுதிறது. மாடியில் இருந்து பலர் கீழே தூக்கிப் போடப்படுகிறார்கள். அய்யோ. இது என்ன கொடுமை. எய்தவன் இருக்க அம்பை நோவானேன். அம்பை எரித்தால் கூட பரவாயில்லை. இவைகூட அம்புகளாகலாம் என்று ஒவ்வொரு மரத்தையும் செடி கொடியையும், சின்னஞ்சிறு மலர்களையும் தீயிட்டுப் பொசுக்கினால் எப்படி?
மேகலை, கண்ணை மூடிக்கொள்கிறாள். அவளின் தானாய்க் கதறிய வாயை லட்சுமி மூடுகிறாள். இரும்படிக் கொலையில் இந்த ஈக்களும் சிக்கிக் கொள்ளலாம் என்ற பயம். அந்தப் பயத்திற்கு ஏற்ப, கண்ணுக்குத் தெரிந்த பல இடங்களில் பலர் கும்பல் கும்பலாய் வந்து டி.வி. பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள். பீரோக்களை தூக்கிக்கொண்டு போகிறார்கள். லட்சுமி சுதாரித்தாள். மேகலையைத் தோளில் சாய்த்தபடி ஜன்னல்களைக் கொக்கிப் போடப் போனபோது -
அந்த வெட்ட வெளியில், ஒரு உருவம், ஒட்டுமொத்தமான கருப்பு இருளில் வெள்ளைக் கோட்டு போட்டு இருப்பது போன்ற தோற்றம். பிடரியிலும் மோவாய்க்குப் பின்னாலும் இருளின் அடர்த்திகள். ஐயாம் இன்னொசென்ட் மைனே நிராபராத் ஹும்... என்று தன்னைக் காப்பாற்றச் சொல்லி, ஒரேயடியாய் அலறும் அவலக்குரல். அந்த உருவத்திலிருந்து வெளிப்படுகிறது. அபயம் கொடுக்க ஆளிருக்கா என்பதுபோல் அங்குமிங்கும் பார்க்கிறது. அந்த உருவத்திற்குச் சிறிது பின்னால் ஒரு தீப்பந்தக்கூட்டம். அரிவாள், கம்புகளோடு அது துரத்துகிறது. அந்த உருவமோ, தனது சிவப்பு டர்பனை கீழே போட்டுவிட்டுத் தலைவிரி கோலமாய் அங்குமிங்குமாய் ஓடுகிறது. முட்டிக்கால்களில் சிக்கிக்கொள்ளும் அளவிற்கான முடி. உருளைக்கட்டை மாதிரியான உடம்பு. ஒத்தைக்கு ஒத்தையாய், எவரையும் சமாளிக்கும் அந்த உருவம், இப்போது ஓடி, ஓடி ஒவ்வொரு வீட்டு முன்னாலும் நிற்கிறது. நிற்கும்