வீடெல்லாம் மூடிக் கொள்கின்றன. கேட்கும் காதுகளெல்லாம் செவிடாகின்றன. இதற்குள் ஒரு தீப்பந்தம் முன்னோக்கி தனித்து நகர்கிறது. ஒரு அரிவாள், அதன் பிடறியிலிருந்து சிறிது குறி விலகி கீழே விழுகிறது. அந்த ஒற்றைத் தரப்பிற்கும், தீப்பந்தத் தரப்பிற்கும் இடைவெளி குறைகிறது. உடனே அங்கே காட்டுக் கத்தல்கள். இங்கே கத்தமுடியாத ஓட்டம். குதிகால் ஓட்டம். ஜன்னலுக்கு அருகே நின்ற லட்சுமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறது. அவள் அதற்குப் பதிலாகக் கதவைச் சாத்த முற்படுகிறாள். உடனே, மேகலை அவளைப் பின்னால் தள்ளிவிட்டு, முன்னால் வந்து ஜன்னல் கம்பியில் முகம் பதிக்கிறாள். ‘பீச்சே ஆவோ’ என்று சொல்லிவிட்டு, ஓடிப்போய் அறைக் கதவைத் திறக்கிறாள். பிறகு கையை இழுத்துப் பிடித்த லட்சுமியை கீழே தள்ளிவிட்டு ஓடுகிறாள். பின்புறக் கதவருகே போகிறாள். கதவைச் சத்தம் போடாமலும் திறக்க வேண்டும். அந்த உருவம் அதற்குள் வெட்டுப்படாமலும் இருக்க வேண்டும். கதவு மெள்ளத் திறக்கப்படுகிறது. இதற்கு மேல் ஓட முடியாது என்பது போல் வெளியே பம்மி நின்ற உருவத்தை, மேகலை தலையைப் பிடித்தோ, தாடியைப் பிடித்தோ உள்ளே இழுத்துப் போடுகிறாள். பிறகு கதவை இழுத்துச் சாத்துகிறாள். அந்த உருவம் மூச்சு விடுவது நன்றாகவே கேட்கிறது. புயல் மாதிரியான மூச்சு. அவசர அவசரமாய் அவள் காட்டிய சமையலறைக்குள் போகிறது.
இதற்குள், தீப்பந்தக் கும்பல் முன்பக்கக் கதவைத் தட்டுகிறது. எரியும் பந்தங்களின் அடிக்கட்டைகளால் கதவை இடிக்கிறது. லட்சுமி அரற்றுகிறாள். ஆனால், மேகலை அந்த லட்சுமியையும் இழுத்துக்கொண்டு முன்பக்கம் வருகிறாள். கதவைத் திறந்து அகலப்படுத்தி வைத்துக்கொண்டு என்ன வேண்டும் என்று கேட்கிறாள். அந்த சர்தார்ஜியை அதற்குள் சமயலறைக்குள் நகர்த்தி விட்ட தைரியத்தோடும் சமர்த்தோடும் கேட்கிறாள். அந்தக் கூட்டம் அவளை மேலும் கீழுமாகப் பார்க்கிறது. ஆம்பளைகளே சர்தார்ஜி நண்பர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடியாதபோது, இந்த அலியால் முடியுமா என்று தன்னைத்தானே மார்தட்டிக் கொண்டு ஒரு மனிதன் போலான அந்தக் கும்பல் புறப்படுகிறது. மேகலை கதவைத் திறந்தபடியே வைத்திருந்தாள். அங்கே ஆடிய கூட்டம், வேறு பக்கம் ஆடப்போன போதுதான் கதவைப் பூட்டினாள். அந்தச் சமையலறைக்குள் போய் அந்த உருவத்தை முதுகைத் தட்டி நிமிர்த்தி விட்டாள். அதன் கையைப் பிடித்து எந்த நிர்வாண அறைக்குள் வெட்டுப் பட்டாளோ அங்கே கொண்டு போனாள். மெழுகு வர்த்தியைப் பொருத்தினாள். அது அணையப் போவதுபோல் சுருண்டு, பிறகு வீறிட்டது. அறுபது வயதான சர்தார்ஜி. சொட்டை சொடக்கு இல்லாத கருமுடி சிக்கல் சிடுக்கல் இல்லாத தாடி. ஆனாலும் அந்த ஒவ்வொரு முடியும் தனித்து ஆடியது. இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டது. அதில் கண்கள் தாரைதாரையாக