Flexi Classics தொடர்கதை - வேருக்கு நீர் - 04 - ராஜம் கிருஷ்ணன்
விடியும் நேரத்திலேயே உறங்கினாலும், கண் விழிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. படுக்கையில் கமலம்மாவைக் காணவில்லை. யமுனா குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து, இதமான வெந்நீரில் நீராடிய பின், சேலையைச் சோப்புப் போட்டுக் கசக்கி வெளியே உலர்த்தப் போகிறாள். முதல் நாள் பெய்த மழை ஈரத்தில் பசுமை மின்னுகிறது. விண்மணி பளிச்சென்று முகம்காட்டி அந்தப் பசுமை கண்டு பூரிக்கிறது. அவள் பின்வாயில் வழியாக உள்ளே கூடத்துக்கு வரும்போதுதான் மலையாளம் கலந்த அம்மாவனின் மழலைத் தமிழ் செவிகளில் விழுகிறது. தம் கதர் சால்வையுடன் அவர் உட்கார்ந்திருக்கிறார். சுதீர் பைஜாமாவும் சிகரெட் புகையுமாகச் செட்டில் சாய்ந்து மலையாளத்தில் பேசுகிறான்? ஆம், மலையாளத்தில் "சமரத்திண்டே ஃபர்ஸ்ட் காஷுவாலிட்டி" என்று ஏதோ செவிகளில் விழுகின்றன.
"குட் மோர்னிங், எந்தா யமு, சுகமில்லையோ?" என்று கேட்கிறார் கையில் ஆவி பறக்கும் தேநீர் கிண்ணத்துடன்.
"ஒன்றுமில்லையே?"
"பின்ன கண்ணெல்லாம் சிவந்து இடுங்கி..."
சுதீர் எங்கோ பார்த்துப் புகை விட்டுக் கொண்டிருக்கிறான்.
"எப்போது வந்தீர்கள்!"
"குஞ்ஞம்மையும் கமலம்மையும் ஒருபாடு நேரம் கண் முழிச்சு சம்சாரிச்சதாக்கும்!"
அவள் அதற்கு மறுமொழி கூறாமல் சுதீரை உறுத்துப் பார்க்கிறாள். அவன் காலை மடக்கிக் கொண்டு புகையை விட்டுக் கொண்டிருக்கிறான். இந்த சுதீர் முன்பு எத்தனை மரியாதையுள்ள நாகரிக மனிதனாக நடந்து கொண்டிருந்திருக்கிறான்? நீதிபதி வீட்டுக் குழந்தைகளின் செல்லப் பிராணியாகச் சொகுசாக வளர்ந்த நகரத்து நாகரிக நாய், பொன்னைத் தேடிப் பனிக்கண்டத்துக்குச் சென்ற பேராசை மனிதனுக்குத் துணை போக, கொஞ்சம் கொஞ்சமாக நாடு நகர வாசனைகளை எல்லாம் உதிர்த்து, நள்ளிரவில் குந்தியிருந்து ஊளையிடக்