(Reading time: 13 - 25 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

திரும்புகிறார்கள்.

   

யமுனாவும் ஜோசஃபும் வரும்போது பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் நேராக அந்த வழியில் செல்லாது. எனினும் காத்திருந்து அதில் ஏறுகின்றனர். பிற்பகல் இரண்டரை மணிக்கு அது மஞ்சூரில் வந்து நிற்கிறது. அணைக்கட்டும் மின்நிலையமும் வந்த பிறகு பெருத்த ஊர். பஸ் நிற்குமிடம் வழக்கம் போல் கசமுசவென்றிருக்கிறது. மழை பெய்திருப்பதால் சரிவுகளில் பெண்கள் மண்வெட்டியும், கொத்தும், கூடையுமாகச் சளைக்காமல் வேலைக்கு இறங்கி விட்டனர். படுகப் பெண்டிர் மண்ணின் செவ்வியர்.

   

சரிவில் கொத்திக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், யமுனாவின் முகத்தில் ஏக்கத்தின் சாயல் படருகிறது. "அந்தப் பெண்ணைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அரசியலின் அவலங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் காலமறிந்து உழைத்து விளைவு காண்பதற்காக வாழ்கிறாள். அறிவு வளர வளரப் பிரச்னைகளும் சங்கடங்களும் தான் வளருகின்றன. அறியாமை போற்றக் கூடியதொன்றாகிறது."

   

"அறியாமை - அறிவு, இரண்டையும் சரியான பொருளில் கண்டு நீ சொல்லவில்லை. வெறும் ஏட்டுக் கல்வியினால் அறிவு கூடிவிட்டதாகவும், பத்திரிகை படித்து அரசியல் அக்கப்போர்களை விவரிக்காததனால் அறியாமை நிறைந்தவளென்றோ ஏன் எடைபோடுகிறாய்? ஆனால் யமு, இப்பப் பாரு. உன்னைப் பார்த்துக் கொண்டு அவள் வேலை மறந்து நிற்கிறாள்?" இது ஜோசஃப்.

   

உண்மைதான். அந்த நங்கை இவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். யமுனா சிரிக்கையில் அவளும் புன்னகை பூக்கிறாள்.

   

"இது எந்தொரு சல்யம் பிடிச்ச வாழ்வு. அந்தப் பெண் எத்தனை அழகு! எத்ர பாக்யசாலி! ஒருபாடு படுச்சு, டீச்சர் உத்தியோகம் பார்ப்பது எத்ர கேமன்மை யானு! 'இப்படி வெயிலும் பனியும் கொண்டு, மழயும் சகிச்சி, மானத்தையும் மண்ணையும் பார்த்து வாழ்வதொரு வாழ்வா!'ன்னு நினைச்சிருக்கும் யமு. மனுஷ மனசுக்குத் திருப்தி ஒருபோதும் கிடையாது. தியாகத்திலே ஆரம்பிச்சு அஞ்சு ஏக்கரும் பத்து ஏக்கரும் வாங்கினவர்கள், பொது வாழ்வில் சுயநலப்பசை ஒட்டி ஒட்டிப் பதவிப் பித்தாகி விட்டதைக் கண்ணால் பார்க்கலே? கிடச்சதைச் செம்மையாக்கிக் கொள்ள அறிவு வேணும். ஒரு செரட்டைச் சில்லுகிட்டியெங்கிலும் அதையும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்துவாக ஆக்குவதுபோல் வாழ்க்கையை வாழணும் குஞ்ஞே. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.