(Reading time: 5 - 10 minutes)

கருத்துக் கதைகள் – 36. பாவத்தின் வேர் - ஜான்சி

Sin

னைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

ஒரு கிராமத்தில ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் நேர்மையானவனும், நல்லவனுமாக இருந்தான். பிறரோடு அன்பாக பழகுவது, பெண்களிடம் கண்ணியமாக நடந்துக் கொள்வது என்று அவனுடைய நற்குணங்களைக் குறித்து அனைவரும் பெருமிதம் கொள்ளும் விதமாக வாழ்ந்து வந்தான். அவனுடய வறுமை நிலை எப்படிப் பட்டது என்றால் பெரும்பாலான நாட்களில் மதிய உணவிற்கு கொண்டுச் செல்ல அவனிடம் இரண்டு ரொட்டிகள் மட்டுமே இருக்கும். கடும் உழைப்பிற்கு பின்னர் அந்த இரண்டு ரொட்டிகளை மட்டும் மதியம் உண்பவனுக்கு பல நேரம் இரவில் சாப்பிட உணவு இருக்காது.ஆனாலும், ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்பாக இறைவனுக்கு நன்றிச் சொல்லி செபிப்பான்.அவன் தன்னிடம் இருப்பவற்றிலேயே மிகுந்த மனநிறைவுக் கொண்டவனாக இருந்தான். 

ஒரு நாள் சாத்தான் இந்த விவசாயியின் நற்குணங்களைக் கண்டு இவனை எப்படியாவது பாவத்தில் வீழ்த்த வேண்டும் என்று முடிவுச் செய்துக் கொண்டு அன்று அவனுடய 2 ரொட்டிகளினின்று1 ரொட்டியை எடுத்துக் கொண்டது.வயலில் வேலைச் செய்து விட்டு சாப்பிட வந்த விவசாயி தன்னுடைய உணவுண்ண அமர்ந்தான்.

சாத்தான் தனக்குள்,

" இதோ இப்போது இவன் தன்னுடைய ரொட்டியை எடுத்துக் கொண்டுச் சென்றவனைப் பற்றி மோசமான வார்த்தைகளைக் கொண்டு திட்டப் போகிறான், அதைப் பார்த்து நான் மகிழப் போகிறேன். இவன் ஒரு முறை திட்டி விட்டாலும் கூட இவனைப் பாவம் செய்ய வைக்கும் என்னுடைய வேலை முடிந்து விடும்" என்றெண்ணி காத்திருந்தது.

அவனோ இருந்த ஒரு ரொட்டிக்காக இறைவனுக்கு நன்றிச் சொல்லி,

"இறைவா இன்று யாரோ ஒருவர் என் ஒரு ரொட்டியை எடுத்து இருக்கிறார்கள், அவருக்காகவும் நான் உமக்கு நன்றிச் சொல்கிறேன்."என்றுக் கூறி உண்ண ஆரம்பித்தான்.

சாத்தானுக்கு மனது பொறுக்கவில்லை,

"வந்த வேலை முடியாமல் போவதா? இந்த மனிதனை பாவம் செய்ய வைக்காமல் இருக்க விடுவதாக இல்லை"என்றுச் சொல்லி அடுத்த நாளுக்காக காத்திருந்தது.

இரண்டாம் நாள் விவசாயியின் 2 ரொட்டிகளையுமே அது எடுத்துக் கொண்டு, இப்போது அவன் என்னச் செய்வான் என்றுப் பார்க்க காத்துக் கொண்டிருந்தது.

விவசாயி வந்து தன் உணவைக் காணாமல் திகைத்தாலும்,

"இறைவா, இன்று யாரோ ஒருவருக்கு மிகவும் பசித்து இருக்கிறது போல என்னுடைய உணவு முழுவதுமே எடுத்துக் கொண்டார்கள். சரி பரவாயில்லை, என் மூலமாக அவரது பசி போக்க வழி செய்ததற்காக உமக்கு நன்றிச் செலுத்துகிறேன்" என்றுச் சொல்லி தண்ணீரை அருந்தி விட்டு வேலைச் செய்ய திரும்பிச் சென்றான்.

சாத்தானுக்கு இப்பொழுது அந்த விவசாயியை பாவத்தில் விழ வைத்தே ஆக வேண்டும், இது தனக்கு விடப் பட்ட சவால் என்றுத் தோன்றி விட்டது.எத்தனை நாட்களானாலும் சரிதான் நான் இவனை பாவம் செய்ய வைப்பேன் என்று தீர்மானித்தது.

தான் ஒரு மனிதனைப் போல வந்து விவசாயியின் நண்பனாக மாறியது. விவசாயியும் சாத்தானை தன்னுடைய உற்ற தோழனாக பாவித்தான். இந்த முறை விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன்னதாக,

"நீ உன்னுடைய நிலத்தினில் மேடான நிலத்தில் மட்டுமே பயிர் செய்"என்று சாத்தான் விவசாயிக்கு ஆலோசனைக் கூறியது.

விவசாயியும் அதே போல் செய்தான்.அந்த வருடம் மழை மிகவும் அதிகமாக பெய்தது. அவனின் நிலம் மேடான பகுதியில் இருந்ததால் எளிதில் மழைத் தண்ணீர் வடிந்து விட்டது, பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தண்ணீர் தேங்கி நின்றதால் தாழ்வான பகுதியில் பயிர் செய்த பலருக்கும் அவ்வருடம் மிகவும் நஷ்டம் ஏற்பட்டது.

இப்போது சாத்தான் மீது விவசாயிக்கு மிகுந்த நம்பிக்கை வந்து விட்டது.சாத்தானின் அறிவுரைகளையே அவன் மிகவும் நாடினான். அடுத்த வருடம் பயிர் செய்யும் போது சாத்தான் ,

" நீ இந்த வருடம் தாழ்வான பகுதியில் பயிர் செய்" என்றுக் கூறியது. விவசாயியும் அவ்வாறே செய்தான்.

கடந்த வருடம் வந்த பெரு மழையால் பலரும் பயந்து இம்முறை மேடான பகுதியில் பயிர் செய்தனர். ஆனால், இம்முறை மழை குறைவாக பெய்தது. மேடான பகுதியிலிருந்து தண்ணீர் உடனே வடிந்து விட்ட காரணத்தால் அப்பயிர்கள் வாடின. இந்த விவசாயி மட்டும் தாழ்வானப் பகுதியில் வடிந்து வந்த தண்ணீரின் காரணமாக பயிர்களுக்கு போதிய நீர் கிடக்கப் பெற்று நல்ல விளைச்சலைப் பெற்றான்.

இப்படி தொடர்ந்த வருடங்களில் சாத்தானின் ஆலோசனைகளால் விவசாயி மிகவும் பணக்காரன் ஆனான். சாத்தான் இப்போதும் விவசாயியிடம் பாவத்தை தேடினான்.

"பணத்தால் வரும் அகந்தை ஒன்றுப் போதுமே, இவன் பாவம் செய்தால் தானே நான் இவனை விட்டு போக முடியும், கட்டாயமாக இவன் இப்போது பாவம் செய்வான்" என்று நம்பியது.

 விவசாயியோ செல்வ நிலையிலும் எளிமையான குணத்தோடு நடந்துக் கொண்டான். இம்முறையும் ஏமாற்றமடைந்த சாத்தான் மறுபடியும் புது திட்டத்தோடு காத்திருந்தது.

ருடங்கள் பலச் செல்ல செல்ல விவசாயி இன்னும் அதிகமான நிலங்களை வாங்கி பயிர் செய்ய மிகவும் செல்வந்தனாக மாறினான். அந்த வருடம் கோதுமை விளைச்சல் மிகவும் அபரிமிதமாக இருந்தது. தானியங்களை வைக்க இடமே போதாமல் ஆயிற்று. மீதி தானியங்களை என்னச் செய்வது என்றே அவனுக்கு புரியவில்லை.

வழக்கம் போல தன் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். சாத்தானோ இது தான் தக்க தருணம் என்று அறிந்து,

"நீ கவலைப் படாதே நண்பா, நாம் இந்த மிகுதியான தானியங்களைக் கொண்டு வோட்கா என்னும் மது பானம் தயாரிக்க முடியும். உன்னுடைய தானியங்கள் வீணாகாமல் நாம் பார்த்துக் கொள்வோம்" என்று ஆலோசனைக் கூறினான்.

தன் நண்பனின் அறிவுரைப் படியே மதுபானம் தயாரித்த விவசாயி சற்று நாட்களில் அதனைக் குடிக்கவும் ஆரம்பித்தான். கொஞ்ச நாட்களிலேயே அவன் குடிப்பழக்கத்திற்கு மிகவும் அடிமை ஆகி விட்டிருந்தான்.குடிப் பழக்கத்தின் காரணமாக எல்லோரையும் தரக் குறைவாக பேசவும், அடி தடியென்று பிரச்சினைகளில் ஈடுபடவும், தான் சம்பாதித்த சொத்துக்களை தன்னுடைய குடிப் பழக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கவும் ஆரம்பித்தான்.

அதைப் பார்த்து மகிழ்ந்த சாத்தான் நான் இவனை ஒரு பாவம் செய்ய வைக்க எவ்வளவோ கஷ்டப் பட்டடேன். ஆனால், இந்த மதுபானமோ எவ்வளவு எளிதாக இவனை எத்தனையோ பாவங்களைச் செய்ய வைத்து விட்டது !. இது முன்பே எனக்கு தெரியாமல் போயிற்றே?!... எப்படியோ நான் வந்த வேலை முடிந்தது என்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

 

கதை சொல்லும் கருத்து:

குடிப் பழக்கம் அழிவைத் தரும்.

 

Story # 35 - Aganthai azhivai tharum

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.