(Reading time: 13 - 25 minutes)

சரி! வா நடக்கலாம்!

நீ நல்லா படிப்ப போலயே மாரி!

ம், ஆமா தாரிணி. உன் அளவுக்கு இல்லை, நீ மருத்துவம் படிக்கிறே, அதுக்கு தான் இன்னும் கஷ்டப்பட்டு படிக்கணும். எனக்கும் மருத்துவம் படிக்க ஆசை இருந்தது. ஆனால் நீட் அது இதுன்னு கஷ்டமான நுழைவுத்தேர்வு இருக்குன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப விவரம் தெரியல. ஆனால், எங்க ஊர்ல இருந்து சென்னைல வேலை பார்க்கிற ஒரு அக்கா தான் என் மதிப்பெண்ணுக்கு அண்ணா பல்கலையில் இந்தப்படிப்பு உதவித்தொகையோட கிடைக்கும்னு சொன்னாங்க. குடும்ப நிலைமைக்கு ஏத்த மாதிரி இருந்தது. சரின்னு சேர்ந்துட்டேன்.

நான் உன் அளவுக்கு புத்திசாலி இல்லை மாரி. தனியார் கல்லூரில நிறைய நன்கொடை கொடுத்து தான் சேர்ந்தேன். பதினோராம் வகுப்பில் இருந்தே நீட் பயிற்சி தனியா கட்டணம் கட்டிப் படிச்சும், எனக்குத் தனியார் கல்லூரில சேர்ற அளவுக்குத் தான் படிப்புத்திறமை இருந்தது. உனக்கும் எனக்குக் கிடைச்ச வசதி இருந்தால், நீ அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இருப்ப!

சாதி அடிப்படைல கொடுக்குறத விட, பொருளாதார அடிப்படைல உயர்கல்விக்கேற்ற கட்டணம் வகுத்தால் எவ்வளவோ நல்லது என்றாள் மாரி.

நீ சொல்றதும் சரிதான்! என்ற தாரிணி, கல்லூரி வாழ்க்கை எப்படிப் போகுது? என்று கேட்டாள்.

சில ஆசிரியர்கள் அரசுப்பள்ளில படிச்சவ தானே, கோட்டால சேர்ந்தவ தானே, தமிழ் மீடியம் ஸ்டூடண்ட் தானே என்று மட்டப்படுத்திப் பேசுறதும் உண்டு. சிலர் அப்படியே இதற்கு மாற்றா ஊக்கப்படுத்தி உதவி செய்றதும் உண்டு.  உடன் படிக்கிற மாணவ, மாணவிகள் இந்த மாதிரி வித்தியாசம் பார்த்து நடத்துறது இல்லை.  நல்லா பழகுறாங்க.!" என்றாள் மாரி.

"என் கல்லூரியில் நிறைய சட்டதிட்டங்கள் உண்டு, வகுப்பில் காமிராக்கள் உண்டு, தூங்கினால் பைன் , தமிழ்ல வகுப்பில் பேசினால் பைன், மாணவ, மாணவிகள் செல்ல தனித்தனி வழி, வழி மாற்றி சென்றால் பைன், பையனும் பொண்ணும் பேசினால் பைன், நின்னால் பைன், உக்கார்ந்தா பைன், நடந்தா பைன், இப்படி அபராதத்தில் தான் கல்லூரியே நடக்குது!"

"அடக்கடவுளே!" என்று வியந்தாள் மாரி.

"ஊர்ல சாதிப் பிரிவினை, கல்லூரில ஆண்,பெண் பிரிவினை, ச்சே! ச்சே! இதெல்லாம் ஒழிஞ்சாத்தான்  இந்த நாடு உருப்புடும்!” சலித்துக் கொண்டாள் தாரிணி!

இருவரும் தங்கள் வயதொத்த விசயங்களை பேசிக் கொண்டே நடந்தனர், ஊர் எல்லை தொடங்குவது தெரிந்தது.

இரு மாரி! முதலில் ஒரு இடத்தை உனக்குக் காட்டுறேன்.

அது ஒரு தென்னந்தோப்பு. அங்கே அழகான பூந்தோட்டம் இருந்தது. அங்கே ஒரு குட்டி நாயின் முகம் போல் புல் செதுக்கப் பட்டு இருப்பதைப் பார்த்து, “இது என்ன இங்கே நாய்க்குட்டி மாதிரி புல் மேல் கல்லைப் பதிச்சி இருக்காங்க!” என்று கேட்டாள் மாரி.

"அதுவா அது என் செல்ல நாய் மிக்கியைப் புதைச்ச இடம்!

"அச்சச்சோ.. அது இறந்து போச்சா? பாவம்!

ஆமா, இறந்து போச்சு..நான் காலேஜ் போக ஆரம்பிச்சதும், சரியாவே சாப்பிடாமல் இருந்துச்சாம். நான் ஊருக்கு வந்த சமயம் உடம்பு சரியில்லாமல் இருந்தது. நான் திரும்ப கிளம்பறதுக்குள் இறந்துபோச்சு. அது நினைவா நான் தான் இப்படிக் கல்லைப் பதிச்சு வச்சேன்.

ஹ்ம்ம். பாவம். என்றாள் மாரி உண்மையான வருத்தத்துடன்.

வாயில்லா ஜீவன்கள் மனிதன் மேல வைக்கிற பாசத்தை மனிதன் சகமனிதன் மேல காட்டுவது இல்லை. இப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா இருந்தால், இப்படி சண்டை நடக்குமா என்றாள் தாரிணி ஆதங்கத்துடன்.

இன்னும் கொஞ்ச நேரத்துல விடியப் போகுது. வழியில் தான் எங்க வயல் இருக்கு. பம்ப்செட்ல குளிக்கலாமா?நீ பையில மாத்துத் துணி வச்சிருக்கியா மாரி?

வச்சிருக்கேன் தாரிணி.. ஆனால் நான் வீட்டுலே குளிச்சிக்கிறேன்

என்கிட்ட மாத்துத் துணி இல்ல!என் பை பஸ்சுடன் எரிந்து விட்டது. ஆனால் எனக்கு உடம்பெல்லாம் எரிச்சலா இருக்கிற மாதிரி இருக்குது. நான் குளிக்கிறேன், உன்னோட டிரஸ் எதாச்சும் தர்றியா போட்டுக்குறேன். இங்கே தைரியமா  குளிக்கலாம். யாரும் இந்நேரம் இங்கே வரமாட்டாங்க.

தண்ணீரில் இறங்கிக் குளித்தாள் தாரிணி. மாரியின் உடையை வாங்கிப் பார்த்து விட்டு, இது எனக்குப் பத்தாது, நீ ஒல்லியா இருக்க! நான் என்னோட டிரஸ்ஸயே  போட்டுக்குறேன்!" சொன்னவாறே வேகமாக உடை மாற்றிக் கொண்டாள்.

நாம நடந்து ஊர் போய் சேருறதுக்குள்ள ஈரம் வேகமா காஞ்சிடும்!" என்ற தாரிணி நடக்கத் தொடங்கினாள்

சற்று தூரம் சென்றதும் அந்த ஊரின் துவக்கப் பள்ளியைப் பார்த்தனர்.

இந்தப் பள்ளியில் தான் நீ படிச்சியா தாரிணி?

ஆமா மாரி! இங்கே தான் படிச்சேன்.உனக்கொன்னு தெரியுமா? இந்த பள்ளிக்கூட கட்டிடத்தைத் தானமா கொடுத்தது எங்க கொள்ளுத் தாத்தா தான். அதனால் தான் அப்பா என்னை இந்தப் பள்ளியில் படிக்கணும்னு இங்கே சேர்த்தாங்க!"

அப்படியா? ரொம்ப நல்ல விஷயம். உங்க தாத்தாவிற்கு நல்ல மனசு தாரிணி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.