(Reading time: 13 - 25 minutes)

பள்ளிக்கூடம் திறந்து தான் இருக்கு. நீயும் உள்ள வாயேன்.  எனக்கு இந்தப் பள்ளியை ரொம்பப் பிடிக்கும். இங்கே நவராத்திரி கொலுவெச்சுக் கொண்டாட மரத்தால் செய்த அழகான படிகள் எல்லாம் இருக்கும். நீயும் வாயேன், அதைப் பார்க்கலாம்.

இருவரும் உள்ளே சென்றார்கள். அங்கே, சின்ன மேசையில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து அதன் முன்னால் பூக்கள் பரப்பி இருந்தனர்.

“யார் இவங்க? உனக்குத் தெரியுமா?” என்று மாரி கேட்கவும்,

"இவங்களா? இந்த பள்ளியில இவங்க தான் பாட்டு டீச்சர். போன வாரம், கேன்சர் நோயால் இறந்துட்டாங்கன்னு அம்மா போன்ல சொன்னாங்க. அவங்க நினைவு அஞ்சலிக்கு வைத்த புகைப்படம்னு நினைக்கிறேன். லட்சத்துல ஒருத்தர்க்கு வந்த கேன்சர் இப்போ என்னடான்னா, வீதிக்கு ரெண்டு பேருக்குன்னு காய்ச்சல், தலைவலி மாதிரி கேன்சர் நோய் வருது. நமக்கு வர உணவே நச்சுக் கலந்து தான் வருது, அப்புறம் மக்கள்  என்ன தான் பண்றது?பாவம் பாட்டு டீச்சர், அவங்களுக்கு கேன்சர் வரும்னு நினைச்சுக்கூட பார்க்க முடியல.அவங்க சொல்லிக் குடுக்கிற "வரவீணா" என்ற கீர்த்தனையைத் தான் பிள்ளைக காலையில் பிரார்த்தனைப் பாட்டுப் பாடுவாங்க. இப்போ பக்கத்து ஊர்ல இருக்கிற மிஷனரி நடத்தும் ஆங்கிலப் பள்ளியில் தான் எல்லாரும் சேர்றாங்க. அங்கே 'இங்கிலீஷ் பிரேயர்' தான். ஏற்கனவே படிக்கப் பிள்ளைகள் இல்லைன்னு அரசுப் பள்ளிகளை மூடிட்டு இருக்காங்க. தனியார் பள்ளிகள் வாசலில் என்னடான்னா பெற்றோர் பிள்ளைங்கள சேர்க்கத் தவங்கிடக்காங்க.! என்ன சொல்றது! தாய்மொழிக்கும் மரியாதையைத் தரவேண்டாமா! மதுக்கடையைப் புதுபுதுசா தொறக்கிறதுக்குப் பதிலா பள்ளியையும் நூலகங்களையும் தொறந்தா நாடு முன்னேறும்! யாரு இதெல்லாம் கேட்கபோறா!" தாரிணிப் பேசிக்கொண்டே போக,

"உனக்கு நிறைய விஷயம் தெரியுதே தாரிணி!" என்று இடையிட்டாள் மாரி.

"ஊர் உலக விஷயம் தெரியலேன்னா என்ன பண்றது.  உலகம் வேகமாக போய்க்கிட்டு இருக்கே!. " தாரிணி சொல்லவும், அதுவும் சரிதான்! என்று ஒப்புக்கொண்டாள் மாரி.

திடீரென்று பள்ளிக்கு வெளியே பல பேர் ஓடி வரும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வெளியில் வந்தாள் மாரி.

தாரிணி! தாரிணி! வா! எல்லாரும் ஓடுறாங்க. என்னனு தெரியல? வா நாமளும் போவோம்!

சரி போவோம் வா மாரி!. தாரிணியும், மாரியும் ஊருக்குள் சென்றனர்.

ஒரு பெரிய வீட்டின் முன்னால் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. கூட்டத்தில் ஒருவரிடம் விசாரித்தாள், என்ன ஆச்சு?

"பண்ணையார் பொண்ணு நேத்து நடந்த கலவரத்துல பஸ்ல எரிந்து சாம்பலாகி விட்டது. அந்த பொண்ணு ஊருக்கு வந்த விசயமே யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கு!" இப்போ தான் விவரம் தெரிஞ்சது. ஐயோ பாவம்!

நமக்கு இதே கதியல்லவா ஆகி இருக்கும். தாரிணி அல்லவா காப்பற்றினாள். அவளுக்கு மீண்டும் நன்றி சொல்லத் திரும்பினாள் மாரி. தாரிணியைக் காணவில்லை.

"மருத்துவம் படிச்சு எல்லா உசுரையும் காப்பாத்தப் போறேன்னு சொன்னியே தாரிணி! உன் உசுரை யாரும் காப்பாத்தலையே!" என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சாதி என்னும் வெறியால், வானுயரம் பறக்க நினைத்த ஒரு இளம்பறவையின் சிறகுகள் உதிர்ந்தது. எனினும் தனது உதிர்ந்த சிறகுகளின் உள்ளே மற்றோர் கனவின் உயிரைக் காத்தது.

15 ஆகஸ்ட்  2040 (இன்று)

இந்த சம்பவத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து வாசித்து முடித்த அவளின் கண்களில் நீர் வழிந்தது. பரணில் இருந்த பெட்டியில், அம்மாவின் காமிக்ஸ் சேகரிப்பைத் தேடிப் பார்க்கையில், எதேச்சையாகக் கிடைத்த  அம்மாவின் டைரியை ஆர்வத்துடன் எடுத்தவள் தான் வாசித்த விஷயத்தை எண்ணியவாறே சோகத்துடன்  மூடினாள்.

பத்தாம் வகுப்பு விடுமுறையில் இருந்த அவளிடம், எல்லாரும் கேட்கும் கேள்வி, அடுத்து பயாலஜி குரூப் எடுக்கப் போறியா, கம்ப்யூட்டர் குரூப் எடுக்கப் போறியா?அக்கவுண்டிங் குரூப் எடுக்கப் போறியா? என்ற கேள்விதான். அப்பாவோ அவள் விருப்பம் என்று சொல்லிவிட்டார். அம்மா தான் அவர் கணிணித்துறையில் இருந்தாலும் அவளை பயாலஜி குரூப் எடுக்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார். உயிரியல் பிரிவில் சேர்ந்து பின்னர் பட்டப்படிப்பில் உயிர் காக்கும் மருத்துவம் அவள் கற்கவேண்டும் என்பது அம்மாவின் விருப்பம்.  அம்மாவின் டைரியை வாசித்து முடித்தவுடன் அவளின் மனதும் தான் என்ன படிப்பது என்ற  ஒரு முடிவை எடுத்துவிட்டது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முன்னறையில் கணினி முன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் சென்று,  "அம்மா நான் பயாலஜி குரூப் எடுத்துப் படிச்சு டாக்டர் ஆகப் போறேன். நான் டாக்டர் ஆகி உயிர் காக்கும் சேவை செய்வேன்மா!"

ஆச்சரியத்துடன், மகளைப் பார்த்தவர் "என்னடா திடீர்னு இந்த முடிவு?" என்று கேட்க,

"இப்போலாம் நீங்க படிக்கும் பொழுது இருந்த மாதிரி, நீட் தேர்வு, தனியார் கல்லூரி என்று  இப்போ மருத்துவம் படிக்க எந்த பிரச்சினையும் இல்லைலம்மா!. அனைத்து கல்லூரிகளும்  நம்ம அரசாங்கமே நிர்வகிக்கிறது. மதிப்பெண், பொருளாதாரம் பார்த்து, அரசு மருத்துவம் படிக்க தகுதியான மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கொடுக்குது. அதனால் மருத்துவம் சேர வேண்டும் என்று முடிவெடுத்தேன்!" என்றாள் அவள்.

“உண்மையாவே சொல்றியம்மா? அம்மாவோட கட்டாயப்படுத்துதல்னு நீ இந்த முடிவை எடுக்கலையே? உன் விருப்பத்தை மீறி உன்னைப் படிக்க வைக்க நான் விரும்பலம்மா!”

"நிச்சயமா அம்மா! எனக்கும் மருத்துவம் படிக்க விருப்பம் உண்டு, கொஞ்சம் கடினமோன்னு ஒரு தயக்கம்தான் இருந்தது அம்மா!” என்றவள் ஒரு நிமிட தயக்கத்திற்குப் பின்,

“எல்லாத்தையும் விட முக்கியமான காரணம், நான் உங்க டைரியைப் படிச்சிட்டேன்! அதனாலேயே கண்டிப்பாக டாக்டர் ஆகணும்னு முடிவெடுத்துட்டேன்!"

"ரொம்ப ரொம்ப நன்றிம்மா தாரிணி!" என்றவாறே தன் மகள் தாரிணியை அணைத்துக் கொண்டாள் சந்தனமாரி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.