(Reading time: 4 - 8 minutes)

சிறுகதை - யாருக்கும் வெட்கமில்லை! - ரவை

judicial

இந்தக் கதை உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து வழங்கப்பட்டுள்ளது.

ந்த சின்ன ஊர் காவல் நிலயத்துக்குள்ளே, கமிஷனரே கோபத்துடன் நுழைந்ததும், அவர் பின்னாலேயே மற்ற காவல் துறை அதிகாரிகளும் பின்தொடரவே, சப் இன்ஸ்பெக்டர் ஆடிப்போய்விட்டார்.

 " என்னய்யா பண்றே இங்க உட்கார்ந்துகிட்டு? அங்கே சட்டசபையிலே எதிர்க்கட்சிக்காரங்க, உள்துறை அமைச்சரை கன்னாபின்னான்னு கேள்விகேட்டு மடக்கறாங்க! அவர் உடனே என்மேலே பாயறாரூ, எனக்குத் தெரியாது, இன்னும் ரெண்டே நாளிலே, அந்த ஐந்துபேர் குடும்பத்தைக் கொன்ன ஆறுபேர் கும்பலை கைதுசெய்து ஒப்புதல் வாக்குமூலமும் வாங்கி எனக்கு அனுப்பணும், பாவிங்க! கொலை செய்ததோட, கொலைக்கு முன்னாலே, தாயையும் பதினைந்து வயது மகளையும் கற்பழிச்சிட்டாங்களாமே, ஊரே பற்றி எரியுது, இருபத்துநான்கு மணி நேரத்திலே அந்த ஆறுபேர் கும்பலை பிடிக்கலேன்னா, நீ வேலைலே இருக்கமாட்டே......"

 என்று சத்தமிட்டுவிட்டு, காரில் ஏறிச் சென்றுவிட்டார்!

 ஆனால், மற்ற அதிகாரிகள் நெடுநேரம் சப்-இன்ஸ்பெக்டருடன் பேசினர்.

 " அந்த ஆறுபேரும், நம்ம டிபார்ட்மெண்டுக்கு நிறைய உதவி செய்திருக்காங்க, அவங்களை கைது செய்தா, பல அரசாங்க ரகசியத்தை அவங்க வெளியிட்டு நம்ம ஆட்சியே கவிழ்ந்திடும்..........."

 " அதுக்காக, ஒருத்தரையும் பிடிக்காம இருந்தாலும், கவிழுமே! இத பாருய்யா! ரகசியமா ஒரு காரியம் செய்! இந்தப் பக்கம் நிறைய நாடோடிங்க நடமாடறாங்க, அவங்களிலே, ஒரே குரூப்பைச் சேர்ந்த ஆறுபேரை கைதுபண்ணி, எப்ஐஆர் போட்டுவிடு, மற்றதை நாங்க பார்த்துக்கிறோம்..........."

 பதினாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!

 ஏற்பாட்டின்படியே கச்சிதமாக, ஒரு நாடோடி குரூப் ஆறுபேரை கைது செய்து, (அதில் ஒருவர் பதினான்கு வயது சிறுவன்), சாட்சிகளாக நான்குபேரையும் தயார் செய்து, வழக்குப் பதிவாகி, நீதிமன்றம் விசாரித்தபோது, நான்கு சாட்சிகளில் இரண்டு பேர் பல்டி அடித்து, காவல்துறை கிரிமினல்களின் போட்டோ ஆல்பத்திலிருந்த வேறு நான்குபேரை குற்றவாளிகளாக அடையாளம் காட்டினர்!

 அதை அலட்சியப்படுத்திவிட்டு, காவல்துறை வழக்கை மூன்று ஆண்டுகள் நடத்தி கீழ் கோர்ட்டில், ஆறுபேரில் மூன்றுபேருக்கு மரணதண்டனையும் மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 இந்த கீழ் கோர்ட்டு தண்டனை மூன்று ஆண்டுகள் கழித்து உச்சநீதி மன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.

 பாவம்! அந்த எழுத்தறிவில்லாத ஆறு நாடோடிகளும் சிறையில் அனுபவித்த சித்திரவதையை சொல்லிமாளாது!

 பயங்கர கிரிமினல்களாக கருதப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டு, வேறு எவருடனும் பேசமுடியாமலும், பார்க்கமுடியாமலும், ஆறுபேரும் பயத்திலும் கொடூரத்திலும் மூளை செயற்படாமல் சவமாக துவண்டனர்.

 கொடுமையின் உச்சமாக, அவர்களின் வயதான தாய் அவர்களை வந்து பார்க்கக்கூட அனுமதி வழங்க இழுத்தடித்தனர்!

 மலஜலம் கழிப்பது, உண்பது, உறங்குவது, எல்லாமே அந்த இருட்டறையில்தான்!

 அவர்கள் தண்டனை உறுதிப்படுத்த, பத்து ஆண்டுகள் முன்பு, உச்சநீதி மன்றத்தில் மூன்றுநீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு அனுப்பப்பட்டது!

 அவர்கள் தற்போது தீர்ப்பு அளித்துள்ளார்கள். நாடே பேச்சுமூச்சின்றி வாய் பிளந்து கிடக்கிறது!

 " காவல்துறையினர், இரண்டு சாட்சிகள் வேறு நான்குபேரை குற்றவாளிகளாக அடையாளம் காட்டியும், அதை அலட்சியப்படுத்திவிட்டு எந்தக் குற்றமும் செய்யாத இந்த ஆறுபேரை பதினாறு ஆண்டுகள் மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் நடத்திய காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும்!"

 பொதுமக்களின் மனதில் எழுந்த வினாக்கள்:

1.இந்த ஆறு நபர்களின் பதினாறு ஆண்டு வாழ்வை மீட்டுத்தர முடியுமா?

2. மூவர் பெஞ்சு நீதிபதிகள் கண்டுபிடித்த உண்மைகள், எப்படி பத்து ஆண்டுகள் முன்பு விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பார்வையில் தப்பியது? அதுவும், அதிகபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்கப்பட்ட வழக்கில்!

3. இதுபோல, இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்கள் ஊசலாடுகிறதோ!

4. கடமைகளை சரிவர செய்யாத காவல்துறை ஊழியர்களுக்கு தண்டனை கிடையாதா?

5. நீதித்துறை, காவல்துறை, நிர்வாகத்திறமையுடனும் நேர்மையுடனும் இனியாவது நடக்க திட்டங்கள் உண்டா?

6. பல ஆண்டுகளாக, நாட்டின் பல பகுதிகளில், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுகிறார்களே, இந்த அநீதிக்கு முடிவுகாலம் உண்டா?

 இதுபோன்ற நிலை, நாடு சுதந்திரம் பெற்று, எழுபத்திரண்டு ஆண்டுகளாகியும் நீடிப்பதில், இங்கு யாருக்கும் வெட்கமில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.