(Reading time: 7 - 14 minutes)

சிறுகதை - யாருக்கு அந்த சீட்? - ரவை

who

"ழிலன்! நீங்க நம்ம கட்சிக்கு நிறைய சேவை செய்திருக்கீங்க! அதனாலே, உங்களுக்கு இந்த தேர்தல்லே போட்டியிட, ஒரு தொகுதி ஒதுக்கியிருக்கிறோம். அது, நீங்க கடந்த ஏழுமுறையா வெற்றி பெற்ற அதே தொகுதி! மகிழ்ச்சியா?"

" மிக்க மகிழ்ச்சி! ஆனா, செலவுக்கு கட்சிதான் பணம் தரணும், என்னிடம் இல்லை............."

" கவலைப்படாதீங்க! எல்லா செலவையும் கட்சியே செய்யும்! நீங்க வேட்புமனுவிலே கையெழுத்து போட்டா போதும்! சரியா?"

" தலைவரே! ஒரு சின்ன விண்ணப்பம்!"

" சொல்லுங்க!"

" எனக்கு ரொம்ப வயசாயிடுத்து! தள்ளாமை வந்திடிச்சி! அதனாலே, இந்த முறை எனக்குப் பதிலா, என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தரை வேட்பாளரா நிறுத்தறேன், அதுக்கு நீங்க சம்மதிக்கணும்........"

அந்த சீட் நம்ம கட்சியைவிட்டுப் போயிடக்கூடாது, அதுக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கறதாயிருந்தா, எங்களுக்கு ஆட்சேபணையில்லை."

" நான் பொறுப்பு ஏத்துக்கிறேன்."

"ஒரு விஷயம், எழிலன்! நாளைக்கு நல்ல நாள்! நம்ம கட்சி வேட்பாளர்கள் எல்லா தொகுதியிலும் நாளைக்கு வேட்புமனு தாக்கல் செய்யணும். அதனாலே, இன்னிக்கே யாரை நிக்கவைக்கப்போறீங்கன்னு முடிவு பண்ணி சொல்லிடுங்க, நாங்க வேட்புமனு தயார் பண்ணிடறோம், நாளைக்கு தாக்கல் செய்திடலாம்."

" கட்சி முடிவுக்கு நான் கட்டுப்படறேன்."

 எழிலன், அவசரமாக வீடு வந்து சேர்ந்து, குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் அழைத்தார். நடந்ததைச் சொல்லி, உடனடியாக, தனக்குப் பதிலாக, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று யோசனை கேட்டார்.

 சில நிமிடங்கள் மௌனமாயிருந்தது, குடும்பம்.

 " அப்பா! இந்த குடும்பத்திலே, உன்னைத் தவிர, வேறு யாருக்கும் அரசியலிலே அனுபவம் கிடையாது. அதனாலே............"

 " தமிழ்! அப்பாதான் தள்ளாமை வந்துடிச்சி, முடியலேன்னு சொல்றாரில்லே, நம்மிலே யாராவது ஒருத்தர் வேட்பாளரா இருக்க முன்வந்துதான் ஆகணும்."

 " அண்ணா! இந்தக் குடும்பத்திலே, ஆண்களிலே, அப்பாவுக்கு அடுத்தபடியா, நீதான் மூத்தவன். அதனாலே............"

 அதை கேட்டதும், அண்ணி விரைந்து தலையிட்டாள்.

 " தமிழ்! அவருக்கு வியாபாரத்தை கவனிக்கவே நேரமில்லே, எல்லா வேலைகளையும் அவரே செய்யவேண்டியிருக்கு, இப்பவே தினமும் அவர் ராத்திரி வீடு திரும்பறபோது, களைத்துப்போய் பாதிமனுசனாத்தான் வருகிறார், அதனாலே.............."

 " மரகதம்! நீதான் குடும்பத் தலைவி! என் இடத்தை நீ நிரப்பறதுதான் பொருத்தமாயிருக்கும். மக்களும் அதை ஏத்துப்பாங்க! என்ன சொல்றே?"

 " ஆமாம்மா! நீ நில்லும்மா!" என்று கோரஸாக, அண்ணன், தம்பி, தங்கை, அண்ணி நால்வரும் ஆமோதித்தனர்.

 " என்ன, என்னைப் பார்த்தா, உங்களுக்கு கிண்டலா இருக்கா? நில்லும்மா, நில்லும்மாங்கிறீங்களே, இரண்டு கால் முட்டியும் தேய்ந்து மூணு வருஷமா, நடக்கமுடியாம, எழுந்திருக்கமுடியாம, நிக்கமுடியாம தவிக்கிறேன், என்னைப் பார்த்து நில்லும்மான்னு சொல்றீங்களே, மூளையிருக்கா?"

 "சரி, சரி, கோவிச்சுக்காதே! இப்ப அம்மா, அண்ணன், ரெண்டுபேரும் மாட்டேன்னு மறுத்துட்டாங்க, அடுத்தது, அண்ணி! நீங்க என்ன சொல்றீங்க?"

 " எனக்கு முக்கியமான வேலை, வயசான மாமா, வயசான அத்தை, கடுமையா உழைக்கிற என் புருஷன், நண்டும் சிண்டுமா இருக்கிற என் குழந்தைங்க இவங்களை கவனிச்சுக்கறதுதான்.........தம்பீ! உனக்கு இருபத்தெட்டு வயசாயிடுத்து, நிறைய படிச்சிருக்கே! நல்லா மேடையேறி பேசறே! நீ நில்லு!"

 " ஐயையோ! ஆளை விடுங்க! அப்பாவின் வயசுக்கு மதிப்பு தந்து, அவரை தலைவர் மரியாதையா நடத்தினாரு, என்னைப் போல, இளவட்டங்களை ஏறிமிதிப்பாரு, மத்தவங்களை கலாய்ச்சிகிட்டு இப்படியே ஜாலியா இருந்துடறேன்!"

 " உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தறேன், நம்ம முதுகுக்குப் பின்னாலே, திட்டினாலும், சனங்க, ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வைப் பார்த்தா, மரியாதையா கும்பிடு போடுவாங்க, சொன்னதை செய்வாங்க, அவங்களுக்கு தேவையான உதவி செய்ய என்ன வேணுன்னாலும் செய்வாங்க, தருவாங்க........."

 " அப்பா! அதெல்லாம் நமக்கில்லே, லஞ்சம் வாங்கறவங்க, அடாவடி பண்றவங்க, அதிகாரத்தை தப்பா பயன்படுத்தறவங்களுக்குத் தான்! நாம சுத்த சுயம்பிரகாச காந்தீயவாதி! நம்மைப் பார்த்தா, 'பிழைக்கத் தெரியாதவங்க'ன்னு சிரிப்பாங்க!"

 " ஆமாமாம்! சரி, இப்பவே போய் தலைவரிடம் போய் வேற யாருக்காவது சீட் கொடுங்க, நாங்க உதவி செய்யறோம்னு சொல்லிட்டு வந்துடறேன்............"

 " போவதற்கு முன்பு, எனக்கு என்ன வயசாவுதுன்னு சொல்லிட்டுப் போங்க!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.