அவருக்கு அதிக பிரியம்! ஆனா அவர் என்மேலே வைத்திருக்கிற பிரியத்தைவிட, நானும் அத்தையும், எங்க நிலத்தின்மேலேயும் இந்த ஊர் சனங்கமேலேயும் வைத்திருக்கோம்....எங்க மூச்சே, இந்த நிலமும் இந்த சனமும்தான்! எங்களுக்கு நூறு கோடி தேவையே இல்லை! அந்தப் பணத்தினாலே, எங்களுக்கு அதை என்ன செய்வது, எதிலே முதலீடு செய்வதுன்னு தலைவலிதானே தவிர, சந்தோஷம் கிடைக்காது, அதையெல்லாம்விட, முக்கியமா நாங்க ரெண்டுபேரும் எந்தக் காரணத்துக்காகவும், பொங்கலின்போது இந்த சனங்களைவிட்டு வரமாட்டோம். இதை உங்கப்பாவிடம் பக்குவமா சொல்லிடு! கிளம்பு!"
" மாமா! நூறு கோடி ரூபாயை முதலீடு செய்கிற பொறுப்பையெல்லாம் அப்பா கவனிச்சிப்பார்! நீங்களும் அத்தையும் எத்தனை நாள் இப்படி விவசாயத்திலே உழைத்துக் கொண்டிருக்க முடியும், உங்களுக்கும் வயசாகுதில்லே! தவிர, மாமா! உங்களுக்கோ வாரிசில்லே, உங்களுக்குப் பிறகு, உங்க நிலங்களை கவனிச்சிக்க யார் இருக்கா? யோசியுங்க! அப்பா இதையெல்லாம் யோசித்துத்தான், என்னை அனுப்பியிருக்காரு......"
கங்காதரன் பதில் சொல்வதற்குமுன், அவர் மனைவி யோகம் முந்திக்கொண்டாள்.
" யார் சொன்னா, எங்களுக்கு வாரிசு இல்லேன்னு? இந்த ஊர் அப்பாவி மக்களும் அவங்க குடும்பங்க அத்தனையும் எங்க வாரிசுதான்! அவங்களுக்கு நிலத்தை சொந்தமாக்கினபிறகுதான், கண்களை மூடுவோம்......"
கங்காதரன், தன் மனைவி யோகத்தை, அன்புடன் அணைத்துக்கொண்டு பேசினார்.
" கஸ்தூரி! இதையும் உங்கப்பாவிடம் தெரிவி!
நஞ்சை, புஞ்சை நிலங்கள் எங்களுக்கும் இந்த ஊர் சனங்களுக்கும் பரம்பரையா சோறு போட்டு வளர்க்கிற வற்றாத செல்வம்! இது, இதில் பாடுபடுகின்ற உழவர்களுக்கு சொந்தம்!இதை சொந்தம் கொண்டாட எந்த தனிமனிதனுக்கும் உரிமை கிடையாது!
அவர் எங்கள்மீது வைத்திருக்கிற அன்புக்கு நாங்க கொடுத்து வைத்திருக்கோம்! ஆனா, எங்க முடிவிலே எந்த மாற்றமும் என்றுமே இருக்காதுன்னு அப்பாவிடம் தெரிவி!"
கஸ்தூரி கிளம்பியதும், இவ்வளவு நேரம் வீட்டில் கூடவே இருக்கும் ஊழியர்கள் நால்வரும், இவர்கள் சொன்னதிலே உணர்ச்சிவசப்பட்டு, ஓடிவந்து இருவர் காலிலும் விழுந்து கண்ணீர் விட்டனர்.
செய்தி கேட்டு ஊர் சனங்க அனைவரும் ஓடிவந்து கைகூப்பி நின்றனர்!
கங்காதரனும் யோகமும் கண்களில் நீர் மல்க, உயரே நோக்கி ஆண்டவனுக்கு நன்றி செலுத்தினர்.
மாறுதலே, உலகில் மாறாத, ஒன்று!