பர்வதம்! எப்படியாவது, அவர்கள் சம்மதம் பெற்று வா!"
பர்வதம் துள்ளிக் குதித்துச் சென்றாள்.
தன்னைப்பற்றி, தன் விளையாட்டுத் திறன்பற்றி, செய்திகளில் வந்திருந்த பிரஸ் கட்டிங்களுடன், வீடு சேர்ந்து, அப்பாவிடம் பெருமையுடன் விஷயத்தை தெரிவித்தாள்.
அடுத்த விநாடி, 'பளார்'!
சத்தம் கேட்டு, சமையலறையிலிருந்து, நிர்மலா ஓடிவந்தாள்.
" என்னாச்சு? ஏன் பர்வதம் அழறா? அவளை அடிச்சீங்களா?"
" அடிக்காமல், அவ செய்திருக்கிற காரியத்துக்கு கொஞ்சவா முடியும்? நமக்கு தெரியாமல், கிரிக்கெட் விளையாடறா, ரெண்டு வருஷமா? பொம்பளை விளையாடற ஆட்டமா அது? நீயே கேள், அவளை!"
நிர்மலாவும் மகளை தனியே அழைத்துச் சென்று பேசினாள்.
பர்வதம் அழுதுகொண்டே நடந்தவைகளைக்கூறி, தனக்கு அந்த விளையாட்டில் தேசிய அளவில் சிறந்த எதிர்காலம் உள்ளதாக தான் நம்புவதையும் தெரிவித்தாள்.
" பர்வதம்! நீ சின்ன பொண்ணு! விவரம் தெரியாம, ஆசைப்படறே? உனக்கு சொன்னாலும் புரியாது, எங்களை நம்பு! நம்ம குடும்பத்துக்கு பெண்கள் இது விளையாடுவது ஒத்துவராது.
ஆனது ஆகிவிட்டது, அப்பாவை நான் சமாதானப் படுத்தறேன். இனிமேல், நீ விளையாடாதே, என்ன?
வேண்டுமானால், கேரம் போர்ட் விளையாடு! அதிக பட்சமா ஷட்டில் காக் விளையாடு! உனக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கு, அந்த விளையாட்டுகளிலே திறமையை வெளிப்படுத்தி புகழ் பெறு! சரியா?"
கூடவே நின்றுகொண்டிருந்த கபில்தேவ், கோபமாக தாயிடம் கேட்டான்.
" ஏன் அக்காவை கிரிக்கெட் ஆடக்கூடாதுங்கறே, நிறைய பெண்கள் ஆடறாங்களே, தேசிய அளவிலே போட்டிகளே நடத்தப் போறாங்களே.......!"
" போடா! உனக்கொண்ணும் புரியாதுடா! நம்ம மாதிரி குடும்பங்களுக்கு சரிவராது, உங்க அக்காவை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கடா!
கபில்! தவிர, அவளுக்கு விளையாடறபோது உடம்பிலே காயம் ஏற்பட்டா, அவ உயிருக்கே ஆபத்து வரும்டா!"
" அதெப்படி பெண்களுக்கு மட்டும் தான் காயம் பட்டு உயிருக்கு ஆபத்து வருமா? ஆண்களுக்கு வராதா? என்னை மட்டும் தீவிரமா கற்றுக்கொண்டு பெரிய மேட்ச் எல்லாம் ஆடணும்னு அப்பா ஆசைப்படறாரு, எனக்கு அடிபட்டா பரவாயில்லையா? நோ! அம்மா!