அம்மா! இந்த மாதிரி கூப்பிடவும், பேசவும், சிரிக்கவும், கூடிவாழவும் ஒரு ஜீவன் இல்லாமல், நான் தவியாய் தவித்தது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!"
உமா, உணர்ச்சிவசப்பட்டு, கன்னங்களில் நீர் வழிய, தன்னை பார்த்தபோது, கோதையின் அடிவயிற்றிலும் பாசம் சுரந்தது!
அருகே வந்து, அமர்ந்து, உமாவை ஆதரவாக
முதுகில் தடவிக் கொடுத்தாள்.
கோதையின் மடியில் முகம் புதைத்து உமா அழுது ஓய்ந்தான்.
வாசற்கதவை யாரோ தட்டுவது கேட்டு, ரத்தினம் கதவை திறந்தான்.
பூமியும் அவன் மனைவியும்!
உமா எழுந்திருந்து நண்பனையும் அவன் மனைவியையும் அன்புடன் வரவேற்றான்.
" உமா! என் மனைவி ரம்பா உங்க எல்லாரையும் பார்த்துப் பேசணும்னு ஆசைப்பட்டாள், உடனே அழைத்து வந்தேன்........"
" வாங்க, ரம்பா! நானே உங்க ரெண்டு பேரையும் அழைத்து இவங்களுக்கு அறிமுகப்படுத்தணும்னு ஆசைப்பட்டேன்.
இவங்கதான் என் அம்மா! பெயர் கோதை! இவன்தான் என் ஒரே தம்பி ரத்தினம், எம்.ஏ. பட்டதாரி. இவள்தான் மை ஒன்லி சிஸ்டர், பாப்பா!"
" உமாண்ணா! பல மாதங்களுக்குப் பிறகு, உங்க முகத்திலே நிரம்பி வழியற சந்தோஷத்தைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு."
" ஆமாம், ரம்பா! நூற்றுக்கு நூறு உண்மை! அழுது வடிஞ்சிண்டிருந்த வீடு, இப்ப ஜகஜோதியா கலகலன்னு இருக்குல்லே! ரம்பா! கிருபா போய் சேர்ந்தபிறகு, நீயும் பூமியும் இல்லேன்னா, நானும் என் கிருபாவை தேடிண்டு போய் சேர்ந்திருப்பேன். இப்ப ஏற்பட்டிருக்கிற மாறுதலுக்குக்கூட பூமிதான் காரணம்! அவன்தான் ரத்தினத்திடம் பேசி இரவோடு இரவா, இந்த குடும்பத்தை என்னோட சேர்த்துவைச்சான், இல்லையா, ரத்தினம்?"
" ஆமாண்ணா! அவர்தான் அன்னிக்கி என்னிடம் ஆதரவா பேசி நம்பிக்கை தந்து, உற்சாகப்படுத்தினாரு..........
அவரே எனக்கு ஒரு நல்ல வேலையையும் சீக்கிரமே வாங்கித் தருவாருங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!"
" உமா! உன் தம்பி, ரொம்ப கெட்டிக்காரன்டா! எப்படி பேச்சோடு பேச்சா, என் தலையிலே பெரிய சுமையை ஏத்திட்டான், பார்த்தியா?"