(Reading time: 7 - 14 minutes)

மனசுக்குள் வேறு விதமான பயம் வந்து அமர்ந்து கொண்டு அவனை குலை நடுங்கச் செய்தது.  “நிச்சயமா இது அந்த மோடி மஸ்தான் வேலையாய்த்தான் இருக்கும்!...எப்படியாச்சும் என் கிட்டே இருக்கற நம்பூதிரியோட குட்டிச்சாத்தானை அபகரிச்சிடணும்!னு அவன்தான் கங்கணம் கட்டிக்கிட்டுத் திரியறான். “அய்யோ…அது மட்டும் அவன் கைக்குப் போயிடுச்சுன்னா…நான் ரத்த வாந்திதான்!” நினைக்கும் போதே வாந்தி வரும் போலிருந்தது அவனுக்கு.

 மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் “பாம்ம்ம்ம்ம்ம்” என்று அசுரத்தனமாய்க் கூவியபடி ஓடி, அவன் எரிச்சலை அதிகமாக்கியது.  பல்லைக் கடித்துக் கொண்டான்.

நேரம் ஆக, ஆக…முற்றிலுமாய் மனாம் சோர்ந்தான்.

தன் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது என்று தீர்மானமாய் முடிவு செய்தவன், வறண்ட உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு சுடுகாட்டை விட்டு வெளியேறி, நடு ரோட்டில் வந்து நின்று இரு புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.

நீ….ண்ட காம்பௌண்டு சுவற்றின் வெளிப்புறம், சற்றுத் தள்ளி ஒரு சிறிய உருவம் உட்கார்ந்திருப்பது தெரிய, கத்த வாயெடுத்த கோடாங்கி அப்படியே நிறுத்திக் கொண்டான். “உருவத்தைப் பார்த்தா ரொம்பச் சின்னதா இருக்கு!...அந்த மோடி மஸ்தானோட குட்டிச் சாத்தான் கூட இந்த சைஸ்தான்!...ஒருவேளை…என் கைவசமிருந்த என்னோட குட்டிச் சாத்தானையும் திருடிக்கிட்டு,  என்னைக் கொல்ல அவனோட குட்டிச் சாத்தானையும் ஏவி விட்டுட்டானோ?...அய்யோ…இப்ப என்ன பண்றது?”

கோடாங்கியின் கால்கள் நடுங்கின.  மரண பயம் உள்ளுக்குள் உலையாய்க் கொதித்தது.

அந்தச் சிறிய உருவம் “பர…பர”வென்று எதையோ பறித்து, நாலாப்புறமும் விசிறிக் கொண்டிருக்க, கூர்ந்து பார்த்தான் கோடாங்கி.  “அட…அது…அது…என்னோட துணி மூட்டையாச்சே…அதை எதுக்கு இப்படிப் பறிக்குது அந்தக் குட்டிச் சாத்தான்?”

ஒரு குருட்டி தைரியத்தில் அந்த உருவத்தை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான் கோடாங்கி.  அவன் காலடியில் மிதிபட்ட சருகுகள் சப்தமிட, அந்த சப்தத்தில் உருவம் திரும்பிப் பார்த்தது.

கோடாங்கி அப்படியே ஆணியடித்தாற் போல் நின்றான்.  முகம் வியர்த்துக் கொட்டியது.

அப்போது, அந்தச் சிறிய உருவம் வேகமாய் எழுந்து “வீல்” எனக் கத்தலாய் அழத் தொடங்க,

மிரண்டு போன கோடாங்கி திரும்பி தலை தெறிக்க ஓடினான்.

அந்த உருவமும் அதே அழுகுரலுடன் அவனைத் துரத்தியது.  ஓடிக் கொண்டேயிருந்த கோடாங்கியின் மனதில் சின்ன நெருடல், “இந்தக் குரல் குட்டிச் சாத்தானின் கத்தல் போல் இல்லாமல்…ஏதோ குழந்தையின் அழுகுரல் போலல்ல இருக்கின்றது?...ஆஹா…இது குட்டியல்ல…நிச்சயம் மனிதன்தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.