(Reading time: 16 - 31 minutes)
இறுதி வார்த்தை - தாரா சங்கர் பந்த்யோபாத்தியாய் (சு.கிருஷ்ணமூர்த்தி)

கிழவனின் இந்த ஆஷாடபூதித்தனத்தைப் பார்த்து உடம்பெல்லாம் எரிந்தது நாயபுக்கு. ஆனால் கிழவன் கௌரவப் பட்டவன். ஆகையால் நாயப் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகச் சொன்னான், "உம், புரியுது. அவங்க ரத்தம் சிந்துமேன்னு உன் கண்ணிலே தண்ணி வருது. எல்லாம் புரியுது எனக்கு!" என்று சொல்லிவிட்டுக் காகிதத்தில் சில வரிகள் எழுதினான். பிறகு தொடர்ந்து சொன்னான், "அவங்க நம்ம ஆளுங்களை அடிச்சு ரத்த விளாறா ஆக்கிட்டாங்களே, அது..."

  

கிழவனின் உதடுகள் துடித்தன. கண்ணீர் இருமடங்கு பெருகியது. "அடக் கடவுளே! அதைக் கேட்டதிலேருந்து அழுதுக் கிட்டே இருக்கேன் நாயப் பாபு... ஐயோ, ஐயோ! அவங்களுக்கு அடிபட்டதை நெனச்சுப் பார்த்தா அந்த அடியெல்லாம் என் மாரிலே விழுந்தமாதிரி இருக்குங்க...!"

  

நாயப் கிழவனை உற்றுப் பார்த்தான். கிழவன் வெறும் பாசாங்குக்காரனா அல்லது உண்மையிலேயே நல்ல மனிதன்தானா? செம்மறியாட்டின் கொம்போடு மோதிக்கொண்டால் வைரத்தின் கூர்மையும் மழுங்கிப் போகும். அதுபோல் நாயபின் கூரிய அறிவால் கிழவனின் மழுங்கிய அறிவைத் துளைக்க முடியவில்லை. நாயப் வெகுநேரம் கிழவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "அப்படீன்னா என்ன செய்யணும்?" என்று கேட்டான்.

  

"அதுதான் உங்ககிட்டே சொல்றேன்..." கண்ணீருக்கிடையே சிரித்துக்கொண்டு சொன்னான் கிழவன்.

  

"என்ன சொல்றே?"

  

"நெலத்துலே எங்க உரிமையை நீங்க ஒப்புத்துக்கங்க, உங்க அடியாளுங்களைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க... நாங்க சாயிங்களை எதுத்து நிக்கறோம்..."

  

"எதுத்து நிப்பீங்களா...? அடிதடி, கிரிமினல் கேஸ்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? வயலை உழுது சாப்பிடறவங்க நீங்க. தடிபிடிக்கத் தெரியுமா உங்களுக்கு? ஈட்டி எறியத் தெரியுமா?"

  

கிழவன் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.