சிறுகதை - துன்பம் போக்கும் அன்பர் (அசோகர் கதைகள்) - பாவலர் நாரா. நாச்சியப்பன்
மாமன்னர் அசோகர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அசோகர் இனிமேல் போரே நடத்துவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தார். போரினால் மக்கள் அடையும் துன்பங்களை நேரில் கண்டறிந்து மனம் மாறிய பின் அவர் இவ்வாறு உறுதி செய்துகொண்டார். இந்தச் செய்தி பரத கண்டம் முழுவதும் பரவியது.
ஒரு சிற்றுாரிலே இருந்த பெரியவர்கள் ஒருநாள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"துன்பம் அடைந்தவர்களைக் கண்டால் அரசர் அப்படியே கண்ணிர் விட்டு விடுகிறாராம்! யாராவது ஏதாவது கவலை என்று சொன்னல் அதை உடனே தீர்ப்பதற்கு வழி செய்கிறாராம்!அரசர் அடியோடு மாறிவிட்டார்" என்றார் ஒரு பெரியார்.
"உண்மைதான். மற்ற உயிர்களைத் தம் உயிர்போல் மதிக்கும் மனப்பான்மை ஒருவருக்கு வந்துவிட்டால், அவர் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே பாடுபடுவார். புத்த பெருமானின் வழியில் திரும்பிய அசோக மன்னர், இரக்கம் கொண்டவராக மாறியதில் வியப்பில்லை” என்றார் அவ்வூர்ப் பள்ளி ஆசிரியர்.
"கவிஞர் ஒருவர் சாப்பாட்டுக்கில்லாமல் பட்டினியாய்க் கிடக்கிறார் என்று யாரோ தெருவில் பேசிக்கொண்டார்களாம். மாறுவேடத்தில் சென்ற மாமன்னர் இதைக் கேள்விப்பட்டு, உடனே உண்மையை அறிந்து, கவிஞர் வீட்டுக்கு வண்டி வண்டியாய்த் தானியங்கள் அனுப்பி வைத்தாராம்!" என்று வெளியூரிலிருந்து வந்த ஒரு வணிகர் கூறினார்.
இப்படியே மாமன்னர் அசோகரைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டவற்றையும் அறிந்தவற்றையும் கூறிப் புகழ்ந்து பொழுது போக்கிக்கொண்டிருந்தார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள். அவர்கள் பேசியவற்றையெல்லாம் ஓர் இளைஞன் கவனித்துக் கொண்டிருந்தான்.
அந்த இளைஞனுடைய தந்தை ஒரு போர் வீரன். அந்தப் போர் வீரன், இளைஞன் சிறு பிள்ளையாய் இருந்த போதே ஒரு போரில் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்து போனான். அந்த இளைஞனை அவனுடைய தாய் தான் வளர்த்துவந்தாள். அவள் எப்படியோ பாடுபட்டு அவனைக் கவலையில்லாமல் வளர்த்துவந்தாள். ஒரே பிள்ளையாகையால் அவள் அவனை அடக்கி வளர்க்கவில்லை.