"சரிம்மா, எனக்குத் தெரியும்மா. நீங்க கவலப்படாதீங்க" என்றான் முத்தையா.
ஆனால் அப்புறமும் ஒரு நாள் அந்தக் கேசவனோடுதான் இவன் சுற்றுகிறான் என்று செய்தி வந்தது. பள்ளிக்கூட நேரத்தில் இருவரையும் கடைத்தெருவில் பார்த்ததாகச் சொன்னார்கள். பார்வதிக்கு வெறி வந்து விட்டது.
வீட்டுக்குத் திரும்பியவுடன் கேட்டுப் பார்த்தாள். இல்லை இல்லையென்று வழுக்கி வழுக்கி பதில் சொன்னான். பள்ளிக்கூட நேரத்தில் கடைத்தெருவில் இருந்ததற்கு ஏதோ பொய்யான காரணங்களைக் கற்பித்துச் சொன்னான். அவன் பொய்களை அவளால் ஊடுருவிப் பார்க்க முடிந்தது.
விறகுக் கட்டையை எடுத்தாள். அவன் முதுகிலும் கால்களிலும் தோள்பட்டையிலும் அடித்தாள். அவன் "வேணாம்மா, வேணாம்மா, இனிமே அவங்கூட சேர மாட்டேம்மா, விட்டும்மா!" என்று கெஞ்சக் கெஞ்ச அடித்தாள். அவன் கால்களிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியபோதுதான் அவள் கோபம் அடங்கியது.
அப்புறம் அவனைக் கட்டிப் பிடித்து அழுது காயங்களுக்கு மருந்து தடவி ஒரு மணி நேரம் அவனோடு பேசினாள். ஒருவேளை தன் பழைய கதையைச் சொன்னால் வயது வந்த பிள்ளைக்கு வாழ்க்கையின் வக்கிரங்கள் விளங்கலாம் என்று அதைச் சொன்னாள். தான் படிக்க வேண்டிய வயதில் அவனுடைய அப்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி படிப்பையும் குடும்பத்தையும் உதறிவிட்டு அவனோடு வீட்டை விட்டு ஓடிவந்த கதையைச் சொன்னாள். பின்னால் அவன் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பொருளாதாரச் சுகத்தையும் தராமல் இந்த இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுத் தந்து விட்டு, இன்னொரு இளம்பெண்ணை இழுத்துக் கொண்டு எங்கோ ஓடிவிட்ட கதையைச் சொன்னாள்.
"முத்தையா! அந்த ஓடுகாலித் தகப்பன் மாதிரி நீ ஆயிடக் கூடாதுன்னுதாம்பா நான் கவலப் பட்றேன். ஆத்திரப் பட்றேன். நீ படி. முன்னுக்கு வா. அதுக்குத்தான நான் ராத்திரியும் பகலுமா ஒழைக்கிறேன். நீ பெரிய மனுஷனா வா. அப்புறம் என்னைக்காவது உங்கப்பன் ஒன்னத் தேடி வந்தா அவனுக்கு நல்லா புத்தி சொல்லிக்குடு. அத நான் பாக்கணும்பா" என்று அழுதழுது