(Reading time: 23 - 45 minutes)

ரவு உணவுக்கு பின்பு ரூமிற்கு வந்த நந்தினியிடம் திரும்ப வருண் பேச ஆரம்பித்தான். ஆனால் அவளோ தனக்கு தலை வலிக்கிறது என்று கூறி படுக்க சென்று விட்டாள்.

சரியென்று வருணும் விட்டு விட்டான். ஆனால் அவனுக்கு ஏதோ மனது உறுத்த ஆரம்பித்தது. அவளுக்கு வெறும் தலைவலி தானா இல்லை ஏதாச்சும் நினைச்சி அவ வறுத்த படுராளா.

“எல்லாத்தையும் சரி பண்ணணும். முதல்ல அவளை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்” என்று எண்ணியவாறே உறங்கி போனான்.

அடுத்த நாள் வருண் ஆபிஸிலிருந்து நந்தினிக்கு போன் செய்தான்.

“நந்தினி. என் பிரண்ட் குழந்தைக்கு பர்ஸ்ட் பர்த்டே செலிப்ரேட் பண்றாங்க. நீயும் அதுக்கு என் கூட வரணும்”

“இல்லைங்க. நான் வரலை. எனக்கு ஒரு மாதிரி இருக்கு”

“என்னாச்சி. ஏதும் உடம்பு ஏதும் சரியில்லையா. பிவேர் ஏதும் இருக்கா”

“இல்லல்ல. பிவேர் எல்லாம் இல்லை. கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு. கொஞ்ச நேரத்துல சரியாகிடுவேன். இப்ப வெளியில வந்தாலும் யார் கிட்டவும் ஒழுங்கா பேச முடியாது. அதான்”

“சரி சரி. ஓகே. நீ உடம்பை பார்த்துக்கோ”

பங்ஷனில் எல்லோரும் வருணை புதிதாக கல்யாணம் ஆனவன் என்று ரொம்ப ஓட்டி விட்டார்கள். வருணால் ஓரளவுக்கு மேல் சமாளிக்கவே இயலவில்லை. ஆனால் அவனுக்கு அது மிகுந்த சந்தோசத்தையே தந்தது. வருண் அந்த கணத்தில் தான் தனக்கு நந்தினி மேல் இருந்த அன்பை புரிந்துக் கொண்டான்.

எப்போது வீட்டிற்கு செல்வோம் என எண்ணிக் கொண்டிருந்தான்.

எப்படியோ பங்ஷன் முடிந்து வீட்டிற்கு வந்து நேராக தன் அறைக்கு சென்றவன் நந்தினி “ஐயோ” என்று கத்திக் கொண்டு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

என்னவென்று பார்த்தால் பல்லியை பார்த்து அவள் அலறி இருக்கிறாள்.

அவளை அனைத்து ஆறுதல் கூறியவன் முதலில் ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால் அவளின் அருகாமை அவனை என்னவோ செய்தது.

நந்தினியும் பயத்தில் அவனுடன் ஒன்றியே இருந்தாள்.

முதலில் மென்மையாக அணைத்த அவன், அவளை மேலும் இறுகி அனைத்துக் கொண்டான்.

நந்தினிக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.

“என்ன இதெல்லாம். விடுங்க வருண்” என்றாள்.

ஆனால் அவனோ “அதெல்லாம் விட மாட்டேன். என் பொண்டாட்டியை நான் ஏன் விடணும் என்று கேள்வி வேறு கேட்டு விட்டு, நந்தினி நாளைக்கு உன் அம்மா வீட்டுக்கு போக போறோம், ஆனா அதுக்கு முன்னாடி இன்னைக்கு நாம பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு இன்னைக்கு நம்ம லைப் ஸ்டார்ட் பண்ண போறோம்” என்றான்.

நந்தினிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை எனலாம்.

“விடுங்க” என்று கோபத்தோட கத்திவிட்டு ஒரு வழியாக அவளை விடுவித்து கொண்டு அவன் முகத்தை பார்த்தாள்.

“என்ன நினைச்சிட்டிருக்கீங்க, பொம்பளைங்கன்னா உங்களுக்கு ஏதோ பொம்மை போல தெரியுதா”

“நந்தினி. என்ன இப்படி எல்லாம் பேசுற. என்னாச்சி. எனக்கு ஒன்னும் புரியலை”

“உங்களுக்கு ஏன் புரிய போகுது. பொண்டாட்டியை அடக்கி ஆளனும்ன்னு நினைக்கற உங்களை மாதிரி ஆம்பளைங்களுக்கு எல்லாம் எப்படி புரியும்”

“இங்க பாரு. நீ என்ன தான் பேசுற. எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியலை. முதல்ல ஒன்னு புரிஞ்சிக்க. நான் நீ சொல்ற மாதிரி பொண்டாட்டியை அடக்கி ஆளனும்ன்னு நினைக்கறவன் இல்ல” என்றான் கோபமாக.

“என்ன உங்களுக்கு புரியலை. அதுசரி என்ன சொன்னீங்க, நீங்க பொண்டாட்டியை அடக்கி ஆளனும்ன்னு நினைக்கலையா, கல்யாணம் ஆகி வந்த முதல் நாள்ல இருந்து உங்க பீலிங்க்ஸ் பத்தி மட்டும் தான் நினைக்கறீங்க. நீங்களே டெசிஷன் எடுக்கறீங்க. நானும் ஒரு மனுஷி தானே. எனக்கும் உயிர் இருக்கு இல்ல, இல்லை நான் நீங்க ஆட்டி வைக்கற மாதிரி ஆடுர பொம்மையா”

வருண் ஏதோ பேச முற்படுகையில் “இருங்க. நான் பேசி முடிச்சிடுறேன். அப்புறம் நீங்க பேசுங்க”

“நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்துச்சி. உங்களுக்கு நம்ம கல்யாணத்துல விருப்பம் இல்லை போல, எனக்கு அது அப்புறம் தான் தெரிஞ்சிது. நான் அதை கூட குறை சொல்லலை. உங்களுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம்ன்றதால என் விருப்பங்களுக்கு ஏன் நீங்க மதிப்பு குடுக்கலை. மறு வீட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னது, பர்ஸ்ட் நைட் ல நீங்க பிஹேவ் பண்ணது, அட்லீஸ்ட் ஒரு சினிமா அதுக்கு கூட உங்களுக்கு என் விருப்பம் பெருசாவே படலை”

நான் என் வீட்டுல எப்படி வளர்ந்தேன் தெரியுமா.  என் விருப்பம் இல்லாம என் வீட்டுல எதுவுமே செய்ய மாட்டாங்க. ஒரு ராஜகுமாரி மாதிரி இருந்தேன் என்று கூறி விட்டு விரக்தியாக சிரித்தாள்.

ம்ம்ம். நான் எப்படி இருந்து என்ன பிரயோஜனம். எப்படியும் என்னை இப்படி ஒரு பிடிக்காத கல்யாணத்துல தள்ளிட்டாங்க இல்ல.

நந்தினி இப்படி கூறியதும் வருண் மனம் ஏனோ மிகவும் வருந்தியது. பிடிக்காத திருமணமா. இவளுக்கும் அது தான் நடந்ததா. இவளும் யாரையாவது விரும்பினாளா. இவ்வாறு அவன் எண்ணும் போதே அவனால் இதை தாங்கிக் கொள்ள இயலவில்லை.

இருப்பினும் அவன் மனம் மனைவிக்காக இரக்கப் பட்டது. அவள் காதலை பிரித்து அவளுக்கு என்னை திருமணம் செய்திருப்பார்களா. நானாவது பரவாயில்லை. என் காதல் முறிந்து அதன் பிறகு இவளை திருமணம் செய்துள்ளேன் என்று அவன் மனம் ஏதேதோ எண்ணிக் கொண்டே சென்றது.

கடைசியில் தலையை குலுக்கியவாறு தன் குழப்பத்தை அவளிடமே கேட்டு தெளிய எண்ணி “உனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா, நீ யாரையாவது விரும்பினாயா” என்றான்.

நந்தினி அவனை முறைத்து விட்டு “தான் திருடன் பிறரை நம்பான்” என்றாள்.

“என்ன”

“பின்ன என்னவாம். நீங்க லவ் பண்ணீங்கன்னா நானும் அப்படி தான்னு முடிவு பண்ணிடுவீங்களா, நான் உங்களை மாதிரி எல்லாம் இல்லை. நான் படிக்கணும்ன்னு நினைச்சேன். வேற எதுவும் இல்லை. லாஸ்ட் இயரே நான் மாஸ்டர் டிகிரி சேர்ந்திருக்க வேண்டியது. ஆனா எனக்கு ஒரு சின்ன ஆக்சிடண்ட் ஆனதால சேர முடியாம போயிடுச்சி. இந்த இயர் ஜாய்ன் பண்ணலாம்ன்னு நினைச்சேன். ஆனா இப்படி ஆகும்ன்னு நினைக்கல” என்று அழுதாள்.

இதைக் கேட்ட பின்பு தான் வருணின் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.

அவள் அழுவதை பார்த்து தாங்க இயலாமல் “நந்தினி அழாத ப்ளீஸ், இப்ப இதுக்கு நான் என்ன பண்றதுன்னு தெரியலை. பட் நீ இதுல என்ன மட்டும் குத்தம் சொல்ல முடியாது. உன் பேரண்ட்ஸ் பண்ணதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்றான்.

“போதும். இதுக்கு மேல ஏதும் பேசாதீங்க. ஆமா நீங்க சொன்ன மாதிரி என் அப்பா அம்மா செஞ்சது தப்பு தான். ஆனா அதுனால உங்க மேல தப்பு இல்லைன்னு அர்த்தம் இல்லை. உங்களை கை பிடிச்சி கல்யாணம் பண்ணி வந்த என்னை, என்னோட பீலிங்க்ஸ் இதெல்லாம் நீங்க கொஞ்சமாச்சும் மதிச்சீங்களா. என்னை உங்க பொண்டாட்டியா ட்ரீட் பண்ண வேண்டாம். அட்லீஸ்ட் என்னை ஒரு பிரண்ட் மாதிரி ட்ரீட் பண்ணி இருக்கலாம் இல்ல, என் கிட்ட ஒரு வார்த்தை பேசல. இதுக்கெல்லாம் நான் எப்படி பீல் பண்ணுவேன்னு நினைச்சி பாத்தீங்களா.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.