(Reading time: 13 - 25 minutes)

தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன – புவனேஸ்வரி கலைசெல்வி

ந்த பிரம்மாண்டமான பங்களாவிற்குள் அதிவேகமாக நுழைந்தது ருத்ராவின் கார். கண்களில் மிடுக்கும் திமிரும்  போட்டியிட காரிலிருந்து இறங்கியவள், அதே தொனியில் அருகில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த சண்முகத்தை  கை தட்டி அழைத்தாள் ....

" கூப்பிட்டிங்களா அம்மா ...."

" ம்ம்ம்ம் அருள் வந்தாச்சா ? சாப்பிட்டானா ? "

Thedi parthen kanum unna

( பெற்ற மகன் சாப்பிட்டானா  என்பதை கூட பணியாளிடம்  கேட்டு தெரிந்து கொள்கிறாளே என்று நினைத்த ஷண்முகத்திற்கு தானாகவே அருள் என்கின்ற அருள்மொழிவர்மன் மீது இரக்கம் சுரந்தது. அருள் , ருத்ராவின்  ஒன்பது வயது மகன் .  ருத்ரா 21 வயதிலேயே காதல் என்ற பெயரில் பெற்றோரிடம் வாதிட்டு அவசர திருமணம் பண்ணிக்கொண்டாள். அவளின் கூடவே பிறந்த கர்வமும் திமிரும் அவளின் திருமணவாழ்க்கையை அசைத்து பார்த்தது. முடிவு???  விவாகரத்து.

எவ்வளவு சந்தோஷமான வாழ்கையை சீக்கிரம் அமைத்து கொண்டாளோ, அவ்வளவு சீக்கிரம் அவள் பிரிவையும் வேண்டினாள் . அவளின் திருமண வாழ்க்கையின் சின்னமே அவளின் மகன் அருள்மொழிவர்மன்.

 என்னதான் மகள் மீது அளவு கடந்த அன்பு இருந்தாலும் அவளின் தந்தை சிவராம் அவளை கண்டிக்காத நாள் இல்லை... தனிமையும் அனுபவுமுமே அவளை மாற்றும் என்று நம்பியவர் தன் தொழிலையும் சொத்தையும் அவளிடமே ஒப்படைத்து விட்டு தன மனைவியுடன் மலேசியாவிற்கு சென்றுவிட்டார்.

ஆனால் அவர் நினைத்தது போல் ருத்ரா மாறவில்லை. கேட்க ஆளில்லாமல் சுதந்திரமாய்  இருப்பவள், இரவுபகல் பாராமல் வேலை செய்வதும் சம்பாதித்தை நண்பர்களுடன் செலவளிப்பதுமே வாடிக்கை என்று கொண்டிருந்தாள்.. இதனால் போதிய பணம் இருந்த போதிலும் அன்பிற்கு வாடினான் அவளின் மகன் அருள் . )

ஒருகணம் இவை அனைத்தையும் யோசித்த ஷண்முகன் ...அருள் அங்கு இல்லை என்பதை எப்படி சொல்ல என்று பயத்துடன் நின்றிருந்தார்.

" அம்மா....அது வந்து "

" என்ன சொல்லுங்க? "

" சின்னய்யா வீட்டுக்கு வந்து டிரஸ் மாத்திட்டு விளையாட போய்ட்டாருங்க "

" விளையாட போய்ட்டானா ? பொய் சொல்லாதிங்க .... அந்த ஸ்வாகினி வீட்டுக்கு தானே போயிருக்கான்"

" ஆ .....ஆ ....ஆமாம் மா " என்று அவர் சொன்னதுதான் தாமதம், தன் எடுத்தவள் நேராய் அந்த ' ஸ்வாகினி' வீட்டுக்கு வந்தாள்.

தே நேரம் ஸ்வாகினியின் வீட்டில்,

" இன்னும் ஒரு வாய் சாப்பிடு கண்ணா "

" போதும் அம்மா"

" அம்மா செல்லம் இல்ல .... இன்னும் கொஞ்சம் கண்ணா "  என்று கொஞ்சிய ஸ்வாகினியை பார்த்து கண் கலங்கியபடி சாப்பிட்டான் அருள். அவனை போல் கண் கலங்காவிடினும் மனதிற்குள் ஆனந்த கண்ணீர் வடித்தாள் ஸ்வாகினி...

ஸ்வாகினி ..... அருளின் வீட்டின் அருகில் இருப்பவள்.... அவள் தேடி வரும், இதயம் கொண்ட ஒரே உயிர் அருள்மொழிவர்மன் தான் .. அவளுக்கு தெரியும் , அவள் காட்டும்  தாய்மையும் பாசமும் ஊரில் பல பேருக்கு கண்ணை உறுத்தும்...அதுவும் ருத்ராவிற்கு ஸ்வாகினியை கண்டாலே பிடிக்காது ..ஆனால் வெறுப்பு என்பது ஸ்வாகினியின் வாழ்வில் புதிதான ஒன்று அல்ல ... முடிந்த வாழ்கையை பற்றி நினைக்காமல், தனது மகனாய் நினைத்து அன்பு காட்டும் அருளிடம் பேசி கொண்டு இருந்தாள்...

" அருள் "

" சொல்லுங்கம்மா "

" ஏன் கண்ணா அழறே ? "

" நான் பேசாம உங்க கூடயே இருக்கவா அம்மா ? ..."

"  முடியாதுடா ... நம்மளை பிரிச்சிடுவாங்க "

" அப்போ நான் வரேன் ..நாம எங்கயாச்சும் போய்டலாம் அம்மா "

என்றவனின் கன்னத்தில் இடியாய் இறங்கியது ருத்ராவின் வலது கரம் ... பெற்ற மகன் என்றும் பார்க்காமல் ரௌத்திரத்தில் அறைந்தவள்...

" இவ உனக்கு அம்மாவாடா? பழகறதுக்கு கூட ஒரு தராதரம் வேணாம் ?  அதானே உன் அப்பா ரத்தம் தானே உடம்புல ஓடுது ... அதான் கண்டவ மேலயும் பாசம் வைக்கிற.... அடுத்த அறை விடுறதுக்குள்ள போயி காருக்குள்ள உட்காரு " என்று உருமியவள் ஸ்வாகினி பக்கம் திரும்பி

" உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா ? எத்தனை தடவை சொன்னாலும் உறைக்காதா ? இப்படி அடுத்தவங்களுக்கு சொந்தமானதொட ஒட்டி உறவாடுறதுக்கு பதிலா செத்து தொலையேன்டி " என்று திட்டிவிட்டு சென்றாள்...

அவளின் வார்த்தைகள் அனலாய் தகித்தாலும் தனக்கிது புதுசில்லை என்று உணர்ந்தவள் மௌனமாய் கண்ணீர் வடித்தாள்...

காலம் அசுர வேகத்தில் நகர்ந்தது.

காலேஜிற்கு அடி எடுத்து வைத்தான் அருள்மொழிவர்மன்... இந்த பத்து வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நடந்திருந்தன. அவனின் ஆடம்பரமான வீடு இன்னும் ஆடம்பரமானது. அவனும் வளர்ந்து வாலிபன் ஆகிவிட்டான். அவனின் தாய் ருத்ரா மட்டும் மாறவில்லை ... முன்பை விட இப்போது அவள் அருளின்மீது பாசம் காட்ட முற்பட்டாலும் அருள் அவளை நெருங்குவதே இல்லை... அவளை வெறுப்பதை முகத்துக்கு நேராக அவன் சொல்லவில்லை என்பது மட்டுமே மீதம் .. மற்றபடி அவன் அவள் இருக்கும் பக்கம் கூட இருப்பதில்லை ... ஒரே வீட்டில் இருவரும் வெவ்வேறு திசையில் இருந்தனர். இத்தனை மாற்றத்திலும் மாறாத ஒன்றே ஒன்று ...

ஸ்வாகினிக்கும் அருளுக்கும் இருந்த உறவு. ருத்ராவிற்கு இது எரிச்சல் மூட்டினாலும் ஒரு கட்டத்தில், 

" என் அம்மாவுக்கு ஏதும் பிரச்சனை தந்திங்க நான் செத்துடுவேன் " என்று அருள் மிரட்ட அமைதியாகி போனாள் ருத்ரா...

இப்படி நாட்கள் போய்கொண்டிருக்க, ஒரு நாள் மாலை மணி 7 ஆகியும் அருள் வீட்டிருக்கு வராத காரணத்தினால், அவனை தேடி ஸ்வாகினியின் வீட்டிற்கு சென்றாள் ருத்ரா.

" நெனச்சேண்டா நீ இங்கதான் இருப்ப நு "

" என்ன விஷயம் ? "

" மணி என்ன ஆச்சு "

" இதை கேக்கதான் வந்திங்களா ? "

" அருள் நான் உன் அம்மா!!! "

" ஹா ..... காலம் கடந்து வந்த ஞானம் .... அது எனக்கு தேவை இல்ல.,... நான் உங்களை அம்மான்னு கூப்பிடதும் இல்லை ... இங்க நின்னு எதுக்கு வாதம் பண்ணுரிங்க ? இது உங்க அரண்மனை  இல்ல ... என் அம்மாவுடைய குடில் ... இங்க சண்டை போட்டு உங்க தரத்தை நீங்க தாழ்த்திக்க வேணாம்"

அவன் எதிர்பார்த்தது போல் தான் நிற்கும் இடத்தை ஒருமுறை பார்த்தாள் ருத்ரா.... அவளின் குரலை கேட்டு அக்கம் பக்கத்தில் சிலர் எட்டி பார்க்க, சட்டென கோபத்துடன் தன் வீட்டிற்கு சென்றாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.