(Reading time: 9 - 17 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 04 - வத்சலா

இளஞ்சோலை பூத்ததா..........

கொஞ்சம் அதிர்ந்து ஆடித்தான் போனான் கண்ணன். பல நாட்களுக்கு பிறகு தன் ஊருக்கு வந்திருந்தான் கண்ணன்.  

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நண்பன் சுரேஷ் தான் சொன்னான் அந்த செய்தியை. சுரேஷ் கண்ணனின் கல்லூரி நண்பன்.

சுரேஷ் பேசிவிட்டு கிளம்பிய பின்பும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை கண்ணனால்.

அவளுக்கா? வர்ஷினிக்கா நிகழந்தது அது.? தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனால்.

Ilancholai pooththatha

வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ மூன்று பேர் சேர்ந்து அந்த பூவை கசக்கி சூறையாடி விட்டார்களாம்.

சக மனிதர்கள் மீது இன்னமும் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இது போன்ற அரக்கர்கள் தினம் தினம் அழித்துக்கொண்டிருக்கிறார்களே!!!.

இவர்களையெல்லாம் நடுத்தெருவில் நிற்க வைத்து சுட வேண்டும். அப்போதுதான் மற்ற அரக்கர்களுக்கும் பயம் இருக்கும். மனம் கொதித்தது அவனுக்கு.

அய்யோ! எப்படி துடித்திருப்பாள் அவள். நினைக்கும் போதே உடல் நடுங்கியது கண்ணனுக்கு. இரவு முழுதும் உறங்கவில்லை கண்ணன்.

றுநாள் காலை கிளம்பி விட்டிருந்தான் அவன். அவளை பார்த்தே ஆக வேண்டும்.

அவள் வர்ஷினி என்ற அம்ருதவர்ஷினி.! அந்த ராகம் பாடினால் மழை வரும் என்பார்கள். அப்படி ஒரு ராகம் தான் அவள். அன்பு மழை பொழியும் அம்ருதவர்ஷினி அவள்.

கல்லூரியில் அவளுடன் ஒன்றாய் படித்தவன் கண்ணன். அவர்கள் கல்லூரி முடித்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது. அவள் முகம் இன்னமும் அவன் நினைவில் அப்படியே....

அவள் வீட்டை அடைந்தான் கண்ணன். அவனை பலமுறை பார்த்திருக்கிறார் என்பதால் சட்டென அடையாளம் தெரிந்துக்கொண்டார் அவள் அப்பா.

இவன் வந்திருப்பது தெரிந்தும் வெளியிலேயே வரவில்லை அவள்.

‘அது நடந்து ஒரு வருஷம் ஆச்சு பா. அவளாலே இன்னமும் அதை மறக்க முடியலை. எங்களாலே அவளுக்கு எந்த ஆறுதலும் சொல்ல முடியலை. யாரோடையும், அவ அம்மாவோட கூட அவ பேசறது இல்லை. அந்த சம்பவம் நடந்து முடிஞ்சதுக்கப்புறம் மனசு விட்டு அழக்கூட இல்லை அவள்.

ஒரு பொம்மை மாதிரி தான் வாழ்ந்திட்டு இருக்கா. ஏதோ அவ தப்பா எந்த முடிவும் எடுக்காம எங்களோட இருக்காளே அந்த ஒரு சந்தோஷமே எங்களுக்கு போதும் ‘

நான் அவளை பார்க்கலாமா? கேட்டான் கண்ணன்.

வள் அறைக்குள் வந்தான் கண்ணன். இருட்டுக்குள் மறைந்திருக்கும் ஓவியமாய் அமர்ந்திருந்தாள் அவள்.

திரை சீலைகளை விலக்கியபடி ‘ குட் மார்னிங்’ புன்னகைத்தான் கண்ணன்.

அறைக்குள் பளீரென ஒளி பரவ பதிலுக்கு புன்னகைத்தாள் அவள்.

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட

சில மேகங்கள் நீரூற்ற

அவன் காதுகளுக்குள் அந்த பாடல் வரிகள் ஒலித்தது.

கல்லூரி நடன போட்டியில் அவள் இந்த பாடலுக்கு ஆடிய நடனம் இன்னமும் அவன் கண்களுக்குள்ளே.

பூந்தென்றலாய் தவழ்ந்து, குழைந்து, அசைந்து சிலிர்த்து அன்று எல்லார்  மனதை கொள்ளையடித்த அந்த தேவதை, இன்று இப்படி அமர்ந்திருக்கிறாளே! அவன் மனம் வெந்து போனது.

யாருடனும் பகிர்ந்துக்கொள்ள முடியாத கொடூரத்தை சந்தித்த வலி, நடந்த கொடுரத்தை எதிர்த்து போராட நினைத்தாலும் மனதை அறுத்தெறியும் கேள்விகளை சந்திக்க முடியாத பயம், வாழ்கையே தொலைந்து போன ஒரு உணர்வில் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள் வர்ஷினி.

அவளை அப்படியே அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு. இதுவரை அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியதே இல்லை.

அவனே எதிர்பார்க்காத அந்த நிமிடத்தில் அவன் மனதிற்குள் குடி ஏறி விட்டிருந்தாள் அவள். அந்த பூ அவனுக்குள்ளே எப்படி பூத்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

எந்த சொந்தங்கள் யாரோடு என்று

காலம்தான் சொல்லுமா?

பூக்கள் சொல்லாமல் பூத்துவும் மேகம்

தேதிதான் சொல்லுமா?

அந்த வரிகள் அவன் காதில் ஒலித்தது போல் இருக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன்

மனதிற்குள் இன்னொரு எண்ணமும் அழுத்தமாய் தோன்றியது. ஆறுதலான வார்த்தைகளோ, பரிதாபமோ அவள் காயத்திற்கு நிச்சியம் மருந்திட போவதில்லை.

சில நொடிகள் அவளையே பார்த்தவன் சட்டென கேட்டான் ‘ஆமாம். இப்போ உனக்கு என்ன நடந்து போச்சுன்னு இப்படி இருட்டிலே உட்கார்ந்து சீன் போட்டிட்டு இருக்கே?’

அப்படி ஒரு கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் போல் அவனும் ஏதாவது ஆறுதல் சொல்வான் என நினைத்திருந்தவள் அவன் கேள்வியில் திகைத்து போய் நிமிர்ந்தாள்.

சரி விடு. நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஊருக்கு போறோம் ரெடியாயிரு.

நான் எங்கேயும் வரலே.

நீ வரியா வரலையான்னு நான் கேட்கவே இல்லை. நீ வரே அவ்வளவுதான்.

‘என் வாழ்கை முடிஞ்சு போச்சு கண்ணா’ என்றாள் உடைந்து போன குரலில். என் மனசு உனக்கு புரியாது. எனக்கு எதிலேயுமே நாட்டம் இல்லை.

ஹேய்! லூசாடி நீ? ரோட்டிலே போகும் போது எவனாவது உன் மேலே சேத்தை வாரி அடிச்சிட்டு போயிட்டான்னா அதுக்காக கழுத்தை வெட்டிக்குவியா? அந்த துணியையெல்லாம் குப்பையிலே போட்டுட்டு, நல்லா வெந்நீர் வெச்சு தலை முழுகிட்டு அடுத்த வேலையை பார்க்க மாட்டியா? உனக்கு நடந்ததுக்கும் அவ்வளவுதான் மரியாதை கொடுக்கணும்.

அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி.

பேசாம நாளைக்கு என்னோட ஊருக்கு கிளம்பு. அவ்வளவுதான்.

நான் கிளம்பலேனா?

அவள் கண்களுக்குள் நேராக பார்த்து அழுத்தம் திருத்தமாய் பதில் சொன்னான் ‘நான் செத்திடுவேன்’

கண்ணா ப்ளீஸ்...

வர்ஷினி ப்ளீஸ்...... என்றான் அவன். நான் உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன், ஒரு வாரம் அங்கே இருந்து பார். அதுக்கப்புறமும் அந்த இடம் உனக்கு பிடிக்கலைன்னு நீ சொன்னேனா, உன் போக்கிலே உன்னை விட்டுடறேன். .சத்தியமா.

அவன் கண்கள் அவளை என்னவோ செய்தன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.