(Reading time: 7 - 13 minutes)

சங்கமம் - மது

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ் வழி அறிதும்?

செம் புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

(செம்புலப்பெயனீரார் ; குறுந்தொகை பா: 40)

(புகழ் பெற்ற இந்தக் குறுந்தொகை பாடலை அறியாதவர் இருக்க முடியாது. இந்த கவிதை சிறுகதை இந்த பாடலின் மீது நான் கொண்ட தீராத காதலின் வெளிப்பாடு)

 

Sangamam

மழை

கார்மேகம் பிரசவித்த மழலை

கடலரசனின் செல்லக் குழந்தை

இடியுடன் சேர்ந்து மிரட்டிடும் குறும்பு

மின்னலாய் கண் சிமிட்டி சிரித்திடும் அழகு (1)

 

மண்

பாரினில் மூன்றில் ஒரு பகுதி 

பெரும் ராஜ்யத்திற்கு இவன் அதிபதி

எல்லையில் தாக்கும் அலை படைகளை

எளிதாக திருப்பியடிக்கும் வீரத் தளபதி (2)

 

மழை

துள்ளி விளையாடும் தூறல்

தென்றலோடு கைகோர்க்கும் சாரல்

இவள் இசைப்பது - அது என்ன ராகம்

இவள் ஆடும் நடனம் - புதுவித தாளம் (3)

 

மண்

ஐம்பூதங்களில் இவனுக்கு தனியிடம்

ஐவகை தன்மைகள் இவனுக்குள் அடக்கம்

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்

அனைத்து வளங்களும் இவன்  நிலவறையில் வாசம் (4)

மழை

தூய்மை இவள் மனம்

குளுமை இவள் தேகம்

செழுமை  இவள் குணம்

சகலரும் இவளுக்கு சரி சமம் (5)

 

மண்

சடுதியில் கோபம் கொள்வான் 

சட்டென்று வடிந்து குளிர்ந்திடுவான் 

பாலைவனமும் பனிமலையும் பார்வைக்கு முரடன்

நிலத்திற்கு நிறம் மாறினும் உறுதியாய் நிலைத்து நிற்பவன் (6)

 

மழையழகி  - மண்னரசன்

தெய்வச் செயலோ!!- இவர்கள் முதல் சங்கமம் 

புதியதோர் உயிர் சுழற்சியின்  ஜனனம்

காதல் இலக்கியத்தின் இனிய ஆரம்பம் (7)

 

வர்ஷினி - ப்ரித்வி வாழ்விலும் தொடருமா???

இனி கதைக்குள் நாமும் சங்கமிப்போமா!! (8)

 

நேர்த்தியான புள்ளியாய் அவள்

கோலத்தின் இழையானான்

நெளிந்து வளைந்து சிறை செய்தான் (9)

 

கை விலங்குகளால் பூட்டப்பட்டும்

சிறகடித்தாள் சுதந்திரமாய்

காதல் வானிலே (10)

விடியவில்லையே இன்னும் - அதற்குள்

விலக்குகிறாயே என்ன அவசரம்

விளக்கம் கேட்டவனின் அழகு முகத்தை 

சுட்டு விரலால் அளந்தாள்- என்

சூரியன் இங்கிருக்க என் நாளில் 

சந்தியா வேளைக்கு இடமில்லை (11)

 

காலைக் கதிரவனுக்கு ப் பொறாமையோ

கதிர் கரத்தால் தட்டி எழுப்பி

கலைத்து விட்டான் வர்ஷினியின் கனவை. (12)

 

கனவு..

நித்திரைத் திரையரங்கில்

நித்தம் ஓர் புதுப்படம் (13)

 

ஆழ்மன ஆசைகளின் வெள்ளோட்டமா

வருங்கால நிகழ்வுகளின் முன்னோட்டமா (14)

 

கருப்பு வெள்ளையோ வண்ணக் கலவையோ

கனவில் அமிழ்வது தனி சுகம்

மாயை என்றாலும் மனதிற்கு இதம் – அந்த (15)

 

மயக்கத்தில் மூழ்கித் திளைத்திருந்தான்

மனத் திரைக்காட்சி ப்ரித்வி ரசித்திருந்தான் (16)

 

பாறையை தகர்த்தப் பூங்கொடியாள்

புலியைத் தாக்கிய மான்விழியாள் (17)

 

கண்ணாலே வலை வீசி  

கால் கொலுசில் சிக்க வைத்து

கொள்ளையடித்துச் சென்றாள் (18)

 

முரண்டு பிடிப்பாய் என நினைத்தால்

மண்டியிடுகிறாயே! அவன் உள்ளம்

கவர்ந்தவள் கொஞ்சி மொழிந்தாள்

மன்னவன் - ஆனாலும் உனக்கு அடிமை

முடி முதல் அடி வரை நான் உன் உடைமை

முத்திரை பதித்து பத்திரம் வாசித்தான். (19)

 

வாரிச் சுருட்டி எழுந்தாள் வர்ஷினி

வாடிப் போகும் என் செல்வங்களென தவித்தாள்

விரைந்து பின் கட்டிற்குச் சென்றாள்

வரவேற்ற தன் மழலைகளை வருடிக் கொடுத்தாள் (20)

 

அவள் விதைத்து வளர்த்த தோட்டம்

அதன் பரந்த பசுமை சொல்லும் அவள் நேசம்

மலர்கொடி மாங்கனி என அவள் உழைப்பில் செழிக்கும்

மொய்க்கும் வண்டுகள் பறவைகள் அன்புச் சரணாலயம் (21)

 

சட்டென மயக்கதிலிருந்து விடுப்பட்டான்

சடுதியில் சிட்டாக ப்ரித்வி பறந்தான்

விளிம்பில் விமானப் பறவையைப் பிடித்தான்

வான ஊர்தியில் தன் விரிவாக்க திட்டங்கள் வகுத்தான் (22)

 

அவன் உருவாக்கி உயர்த்திய தொழில் சாம்ராஜ்யம்

அதன் எல்லைக் கோடுகள் தொடுவான தூரம்

மென்பொருள் இரும்பாலை என அவன் கைகளில் அடக்கம்

முதலீடுகளின் வளர்ச்சி பல குடும்பங்களின் வாழ்வாதாரம் (23)

 

புது திட்டம் மாதிரி நகரம்

படம் வரைந்தான் அதன் இதயப்

பகுதி அவள் அரைக்காணி தோட்டம் (24)

 

விளை நிலத்தை விலை கொடுப்பதா

வாழ்விக்கும் பூமியை தாரை வார்ப்பதா

சாடினாள் தன் சுற்றத்தினரை

மன்றாடிய அவள் கண்களில் நீர்த் திரை (25)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.