(Reading time: 9 - 17 minutes)

 

றுநாள் கிளம்பி விட்டிருந்தாள் வர்ஷினி. அவள் எப்படி கிளம்பினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

கிளம்பும் நேரத்தில் அவள் அப்பாவின் காதில் சொன்னான் ‘என் பொண்டாட்டியை பழையபடி மாத்த வேண்டியது என் பொறுப்பு. நீங்க தைரியமா இருங்க.

அவன் வார்த்தையில் கொஞ்சம் வியந்து, திகைத்து மகிழ்ந்து போனார் அவள் அப்பா.

ரயில் நிலையம் வந்திருந்தனர் இருவரும். ரயில் நடை மேடையில் இருந்தது. அவன் ஏறிக்கொண்டு அவள் ஏறிக்கொள்ள உதவும் விதமாய் கை நீட்டினான்

அவன் கையை பற்றிக்கொள்ளாமல். ஏறி விலகி நடந்தாள் வர்ஷினி.

மறுநாள் காலை பெங்களூர் ரயில் நிலையத்தில், ரயிலை விட்டு அவள் இறங்கிய நொடியில் கொஞ்சம் தடுமாறிப்போனவள் சட்டென அவன் தோளை பற்றிக்கொண்டாள்.

அடுத்த நொடி கையை விலக்கிக்கொண்டு ‘சாரி’ என்றாள்

எதுக்கு? என்றான் அவன் ‘இனிமே என் தோள் எப்பவுமே உனக்குத்தான்’.

எனக்கு தேவையில்லை.

தேவைப்படும் என்றான் அவன். அது எப்போ உனக்கு தேவைப்படுதோ அப்போ நீ முழுசா சரியாயிட்டேன்னு அர்த்தம்.

பதில் சொல்லாமல் இறுகிய முகத்துடன் விலகி நடந்தாள் வர்ஷினி.

காலை உணவை முடித்து விட்டு அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான் கண்ணன். கார் ஊரை விட்டு கொஞ்சம் வெளியே  சென்றுக்கொண்டிருந்தது.

பெங்களூரின் குளிர் தென்றல் அவளை தாலாட்ட மனம் கொஞ்சம் லேசானது போல் இருந்தது.

வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி மரியாதையுடன் கேட்டை திறந்துவிட கார் அந்த காம்பவுண்டுக்குள் நுழைந்து நகர்ந்தது. இரண்டு பக்கமும் மரங்கள் நிறைத்திருந்த அந்த பாதையில் கார் சிறிது தூரம் சென்று திரும்பி நின்றது.

இருவரும் கீழே இறங்கினர். இருபுறமும் மரங்கள் அணிவகுத்து நிற்க இருவரும் நடந்தனர்.

சிறிது தூரம் சென்ற பின் கண்ணில் தென்பட்டது அந்த கட்டிடம்.

அதன் வாயிலில் செருப்பை கழற்றி விட்டு உள்ளே சென்றான் கண்ணன். அவனை பின் தொடர்ந்தாள் வர்ஷினி.

அங்கே கையில் வீணையுடன் அமர்ந்திருந்த சரஸ்வதி சிலையின் பாதங்களை தொட்டு வணங்கி விட்டு நடந்தான் கண்ணன்.

அந்த இடமே அவளுக்கு எல்லாவற்றையும் சொன்னது. அது ஒரு இசைப்பள்ளி. பாட்டு கற்றுக்கொண்டிருந்த குழைந்தைகளும், வீணை வாசித்துக்கொண்டிருந்த பெண்களும் அவள் மனதை கொஞ்சம் அசைத்துத்தான் பார்த்தனர்.

மௌனமாய் நடந்தவன் ஒரு அறைக்குள் நுழைந்தான். அந்த அறையின் அழகே அவளை சிலிர்க்க வைத்தது.

அங்கே இருந்த ஒரு ஜோடி சலங்கையை எடுத்து அவளிடம் நீட்டினான் கண்ணன்.

நடங்கும் விரல்களால் அதை தொட்டுபார்த்தாள் வர்ஷினி.

தெரியும் அவனுக்கு!. அவள் சுவாசம் அதுதான் என்று தெரியும் அவனுக்கு!. அவள் மருந்தும் அதுதான் என்று தெரியும் அவனுக்கு.!

கண்களால் சொன்னான் ‘வாங்கிக்கோடா’

அவள் கைகள் அதை பெற்றுக்கொண்டன. கண்களில் நீர் கோர்த்தது.

சோலை எங்கும் சுகந்தம்

மீண்டும் இங்கே வசந்தம்

நெஞ்சம் ஏன்தான் மயங்கும்

கண்கள் சொன்னால் விளங்கும்

அவனையே வியப்பாய் பார்த்தவளிடம் நிதானமாய் சொன்னான். ‘இது நம்ம மியூசிக் ஸ்கூல். இங்கே இனிமே நீ தான் டான்ஸ் டீச்சர்.’

ஒரு மௌனம் தீர்ந்தது

ஸ்ருதியோடு சேர்ந்தது.

ஒரு தாளம் ராகம் சொல்ல

சந்தம் பொங்கும் மெல்ல

மாயமல்ல மந்திரமல்ல

ஏதோ தவம் செய்பவள் போல் தான் எல்லாருக்கும் நடனம் கற்று கொடுத்துக்கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாய் திரும்புவதை போலே தோன்றியது அவனுக்கு.

அவனுக்கே கொஞ்சம் வியப்பாய் இருந்தது. நம் வலிகளுக்கு மருந்து நமக்குள்ளேதான் இருக்கிறதா? நாம் தான் தேடி எடுக்க தவறுகிறோமா?

எல்லாம் நன்றாய் இருந்த போதிலும் அவளிடம் இருந்த இறுக்கம் மட்டும் இன்னும் மொத்தமாய் குறையவில்லையோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது அவனுக்கு.

ரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் ஒரு நாள் யாருமில்லாத அந்த அறையில் ஏதோ யோசனையுடன் தனியே அமர்ந்திருந்தாள் வர்ஷினி.

அறைக்குள் வந்த கண்ணன் மனதிற்குள் சின்னதாய் ஒரு எண்ணம் உதிக்க, அடுத்த சில நொடிகளில் எஸ்.பி,பி.யின் குரலில் ஒலிக்க துவங்கியது அந்த பாடல்.

இளஞ்சோலை பூத்ததா

என்ன ஜாலம் வண்ண கோலம்

ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுப்பட்டவள் போல் எழுந்தாள் வர்ஷினி. அவள் கால்கள் தன்னாலே ஆடத்துவங்கின.

அசந்துப்போய் நின்றிருந்தான் கண்ணன்.

ஊமையாய் போன சங்கீதம் ஒன்று

இன்றுதான் பேசுதோ.....

மேடை இல்லாமல் ஆடாத கால்கள்

இன்றுதான் ஆடுதோ....

கண்ணில் என்ன கனவோ?

நெஞ்சில் என்ன நினைவோ?

கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனம் கரைய துவங்கியது. இத்தனை நாட்களாய் கனத்து போயிருந்த இதயம் லேசாகி விட, பழைய வர்ஷினயாய் மாறிக்கொண்டிருந்தாள் அவள்.

அவள் ஆடி முடிக்க. கண்களில் கண்ணீர் கரைபுரண்டது. மெல்ல நிமிர்ந்து அவனை அவள் பார்த்த நிமிடத்தில் இரண்டு கைகளையும் தன் முன்னால் நீட்டி அவளை அழைத்தான் கண்ணன்.

நம்மை யார்தான் கேட்பது?

விதிதானே சேர்ப்பது?

இந்த பாசம் பாவம் இல்லை

நேசம் மோசம் இல்லை

கங்கை என்றும் காய்வதும் இல்லை.

அவன் தோள்களை சேர்ந்தவள் பல நாட்களுக்கு பிறகு குலுங்கி குலுங்கி அழத்துவங்கினாள். அவன் விரல்களின் வருடல் அவள் மனதில் மிச்சம் இருந்த காயத்தையும் ஆற்றிக்கொண்டிருந்தது.

அந்த வானம் இந்த அம்ருதவர்ஷினியை வாழ்த்தும் விதமாக பூமழை தூவ துவங்கியது.

Manathai Thotta ragangal - 03 - Thedum kan parvai thavika

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.