(Reading time: 18 - 35 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 06 - வத்சலா

வான மழை போலே...

ட்டி மலையின் குளு குளு சாரலின் பின்னணியில், களைக்கட்டி இருந்தது அந்த திருமண மண்டபம்.

அந்த மண்டபத்தின் வாசலில் தனது காரை நிறுத்தினான் ஹரீஷ்.

அவனது அண்ணனுக்கு நாளை திருமணம். இன்னமும் வரவிருக்கும் அண்ணியை கூட பார்க்கவில்லை அவன்.

Vaana mazhai pole

மலர்ந்த முகங்களுடன் அவனுக்கு கிடைத்த வரவேற்புகள், 'கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பெரிய இவன் மாதிரி வந்து நிக்கறான் பார்' என்ற அப்பாவின் செல்ல கோபம், அம்மாவின் அன்பு, எல்லாவற்றையும் தாண்டி, அவனது அண்ணன் நரேஷுடன்  சென்று, அவனது அண்ணி கல்யாணியின்  முன்னால் நின்றான் ஹரீஷ்.

அண்ணியின் அருகே நின்றிருந்தார் அவள் அப்பா. அவர் முகம்  எங்கேயோ பார்த்தது போல் இருக்க, சில நிமிட யோசனைக்கு பின் சட்டென்ற மின்னல்.

இவர் அவளுடைய அப்பாவாயிற்றே.!!!! அவள் இவரது இன்னொரு மகளா?  அவளெங்கே? அவன் மனதிற்குள் பல கேள்விகள்.

சட்டென்று அவர்களிடம் எதையும் கேட்டுவிட முடியவில்லை அவனால். சம்பிரதாய புன்னகையுடன் அங்கிருந்து விலகியவனின் கண்கள் அவளையே தேடிக்கொண்டிருந்தன.

கண்ணிலேயே தென்படவில்லை அவள். யாரிடம் விசாரிப்பது என்று புரியாமல் சுற்றிக்கொண்டிருந்தவன், கடைசியில் அவனது அண்ணியின் தந்தையிடமே கேட்டு விட்டிருந்தான் அவன்.

'உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்காங்க இல்லையா?

கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனார். அவனை ஒரு ஓரமாக அழைத்து சென்று அவன் கையை பிடித்துக்கொண்டு கேட்டார் 'உங்களுக்கு எப்படி தெரியும்?

அவர் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரியாமல் அவரை வியப்புடன் பார்த்தான் ஹரீஷ்.

அவரே தொடர்ந்தார். தம்பி, என்னை மன்னிச்சிடுங்க. அவளை பத்தி நான் உங்க வீட்டிலே யார்கிட்டேயும் சொல்லலை. அவளுக்கு கொஞ்ச நாள் மன நிலை சரி இல்லாமல் இருந்து, ஒரு மாசம் போலே, பைத்தியக்கார ஆஸ்பத்ரியிலே இருந்தா. அவளோட அம்மாதான் மனசு கேட்காம அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டா. இப்போகூட அவ எங்க யார் கூடையும் ஜாஸ்தி பேச மாட்டா. எங்க வீட்டு மாடியிலேயே தான் இருப்பா. அவளோட இந்த நிலைமையினாலே அவ அக்கா வாழ்கையும் பாதிக்க படக்கூடாது இல்லையா, அதனாலேதான் நான் அவளைப்பத்தி யாருக்கும் சொல்லலை. நீங்க இப்போ இதையெல்லாம் சொல்லி கல்யாணத்திலே குழப்பம் பண்ணிடாதீங்க. உங்களை கெஞ்சிக்கேட்டுக்கறேன். எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம்.

அவன் முகமெங்கும் குழப்ப ரேகைகள். பின்னர் ஒரு நிதானமான சுவாசத்துடன் சொன்னான் 'கவலைப்படாதீங்க நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்'.

அவர் நன்றி சொல்லி விலகப்போன நேரத்தில் கேட்டான் 'அவங்க இந்த கல்யாணத்துக்கு வரலியா?"

நான் வேண்டாம்னு தான் சொன்னேன் அவ அம்மாதான் நான் கேட்கிறவங்க கிட்டே ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்னு சொல்லி, இங்கே கூட்டிட்டு வந்திட்டா.'' என்றார் அவர்.

இப்போ எங்கே அவங்க?

'எங்கேயாவது ஓரமா இருப்பா. நீங்க அவ பேச்சை விடுங்க தம்பி' நகர்ந்து விட்டிருந்தார் அவர்.

ஆனாலும் அவன் மனம் ஆறவில்லை. அவளுக்கா? பைத்தியமா? இருக்கவே முடியாது.

ரவு எட்டு மணி. திருமண வரவேற்பு நடந்துக்கொண்டிருந்தது. இன்னமும் அவள் கண்ணில் படவில்லை. ஏதோ யோசனையுடனே டைனிங் ஹாலை நோக்கி நடைப்போட்டான் அவன்.

அங்கே, அதிக கூட்டமில்லை. சுற்றி சுழன்று நிமிர்ந்த கண்களில் சட்டென பதிந்தாள் அவள்.

அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

அதிக பகட்டில்லாத புடவையில், எந்த வித அலங்காரமும் இல்லாமல், மிக எளிமையாய் இருந்தாள் அவள். இருபத்தியைந்து வயதிருக்கும் அவளுக்கு.

அவள் அருகில் சென்று அமர்ந்தான் அவன். ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள்.

அவள் முகத்தில் நிறைந்திருந்த அமைதியும், கண்களில் ஒளிர்ந்துக்கொண்டிருந்த நிறைவும் அவனை மொத்தமாய் ஈர்த்துபோட்டது.

இவளுக்கு மனநிலை சரியில்லையா? இருக்கவே முடியாது.

ஏதோ யோசனையுடன் தனது கைப்பேசியுடன் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். அவன் எதிரே இலை போடப்பட, கைப்பேசியை தனது சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு இலையை துடைத்துக்கொண்டு அவன் நிமிர, அவள் காதுகளை அடைந்தது அந்த பாடல்.

வான மழை போலே புதுப் பாடல்கள்

கான மழை தூவும் முகில் ஆடல்கள்

நிலைக்கும் கானம் இது..

நெடு நாள் வாழும் இது....

அவள் குரலிலேயே ஒலித்தது அந்த பாடல். மெல்ல நிமிர்ந்த அவள் முகத்தை வருடின அவன் கண்கள்.

சின்ன புன்னகையுடன் அவள் முகத்தையே பார்த்திருந்தான் அவன். ஏதோ நினைவுகளுடன் கண்களை தாழ்த்திக்கொண்டாள் அவள். அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவள் கண்களில் எந்த பாவமும் இல்லை.

.இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவளை அவன் முதன்முதலில் பார்த்தப்போது அவள் பாடிய பாடல் இது. அதன் பின்னர் அவனால் அவளை மறக்க முடியவில்லை.

'ஹ...னி' என்றான் மென் குரலில். சட்டென புரையேறியது அவளுக்கு. தலையில் தட்டிக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

இல்லை. 'ஹம்ஸத்வனி' தானே உங்க பேரு? அதைதான் சுருக்கி 'ஹனி'ன்னு  கூப்பிட்டேன். நல்லா இருக்கா?

ஹம்ஸத்வனி ரொம்ப மங்களகரமான ராகம்.

'காளிதாசன் காணவேண்டும் காவியங்கள் சொல்லுவான்.

கம்பநாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்.' அவளை பார்த்து சின்ன புன்னகையுடன் பாடியவன்

வா வா வா கண்ணா வா...  பாட்டு ஹம்ஸத்வனி ராகம் தானே.?

ஒரு சின்ன புன்னகை கூட எழாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ஹம்ஸத்வனி.

அவள் சந்தோஷங்கள், தவிப்புகள், பயங்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறான் அவன். அப்போது பார்த்ததை விட இப்போது அவளிடம் இருந்த ஒரே மாற்றம் அவளது முகத்தில் கூடியிருந்த தன்னம்பிக்கை.

'என்னடா இவ்வளவு ஸ்மார்ட்டா ஒரு பையன் நம்ம பக்கத்திலே வந்து உட்கார்ந்து, இவ்வளவு அழகா பேசறானே யார் இவன் அப்படின்னு தானே யோசிக்கறீங்க? நான் மாப்பிளையோட தம்பி ஹரீஷ்.

ஒற்றை வார்த்தை கூட பேசாமல் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று விட்டிருந்தாள் ஹம்ஸத்வனி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.