(Reading time: 18 - 35 minutes)

 

றுநாள் காலை திருமணம் நடந்துக்கொண்டிருந்தது. அவளை தேடி அலைந்துக்கொண்டிருந்தது  ஹரீஷின் பார்வை.

கொஞ்ச நேரம் கழித்து அவளது அம்மாதான் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார் அவளை. மேடைக்கு அருகில்கூட வரவில்லை அவள்.

பின் வரிசையில் இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தாள்  ஹம்ஸத்வனி.

சிறிது நேரம் கழித்து ' குட் மார்னிங்' என்றபடி அவள் அருகில் சென்று அமர்ந்தான் ஹரீஷ்.

இப்போது நட்பு கலந்த புன்னகை அவள் இதழ்களில்.

எதையோ சாதித்து விட்ட சந்தோஷம் அவனிடத்தில்.

நீங்களும் மேடையிலே வந்து உட்காரலாமே? கேட்டான் அவன்.

சின்ன புன்னகையுடன் மறுப்பாக தலையசைத்து விட்டு பெருமூச்சுடன் தலை குனிந்துகொண்டாள் அவள்.

ஏன் நீங்க வந்தா, உங்க அப்பாவுக்கு, அக்காவுக்கெல்லாம் பிடிக்காதுன்னு பார்க்கறீங்களா?

பதில் சொல்லாமல் தனது விரல்களை ஆராய்ந்துக்கொண்டிருந்தாள் அவள்.

'சரி நானும் மேடைக்கு போகலை. உனக்கு இல்லாதது எனக்கும் வேண்டாம் விடு ' அவன் அழைப்பு ஒருமைக்கு மாற மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

'கவலைப்படாதே ஹனி. உனக்கும் காலம் வரும். நான் சொல்றேன் கேட்டுக்கோ. அவங்க எல்லாரும் கீழே நிற்கும் போது நீ மட்டும் மேடை மேலே இருக்கிற நாள் சீக்கிரம் வரும். கண்டிப்பா வரும் நீ வேணும்னா பாரு.' உறுதியான குரலில் சொன்னான் அவன்.

அவனது அக்கறையும், அன்பும் கலந்த வார்த்தைகள் அவளை இதமாக வருடின. இதற்கும் பதிலாக சின்ன புன்னகையே.

'உன் குரலை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. ஏதாவது பேசு ஹனி'.

மௌனம்.

தாலிக்கட்டி முடிந்த மறு நொடி எழுந்து விட்டிருந்தாள் அவள். மெலிதான குரலில் 'நான் வரேன் ஹரீஷ்' சொல்லிவிட்டு நகர்ந்தாள் ஹம்ஸத்வனி

பல நாட்களுக்கு பிறகு அவள் குரல் அவன் செவிகளை உரசி சென்றது. அவள் போன திசையையே பார்த்திருந்தான் அவன்.

அவளுக்குள் இருக்கும் திறமைகளை உணர்ந்தவன் அவன். அவள் ஏன் இப்படி உடைந்து போய் கிடக்கிறாள் என்பது தான் புரியவில்லை அவனுக்கு.

ன்று மாலை வீட்டுக்கு வந்துவிட்டிருந்தாள் ஹம்ஸத்வனி.

யாருமில்லை வீட்டில். மாடியில் தனது அறையில் சென்று அமர்ந்தாள். நேற்றிலிருந்தே, அவன் கைப்பேசியில் அவள் குரலில் அந்த பாடலில் கேட்டதிலிருந்தே  மனதில் பழைய நினைவுகளின் தாக்கம்.

சின்ன வயதில் இருந்தே ஹம்ஸத்வனிக்கு இசை என்றால் உயிர். பாடத்துவங்கினால் அதில் கரைந்து கலந்து விடுவாள்.

அப்போது வந்தது அந்த மாபெரும் இசைப்போட்டி. டி.வியில் ஒளிபரப்பாகும் அந்த இசைப்போட்டி.

பல சுற்றுகள் கொண்ட அந்த இசைப்போட்டியில் அவள் பங்கேற்க துவங்கினாள். அவள் ஜெயித்தே ஆகவேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் அவர்களுடைய அப்பா. அதற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் அவர்.

அதில் அவள் பாடியதுதான் நேற்று ஹரீஷின் கைப்பேசியில் அவள் கேட்டப்பாடல். டி.வியில்தான் அவளையும் அவளது அப்பாவையும்  அவன் பார்த்திருக்க கூடும்.

கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்க துவங்கினாள் ஹம்ஸத்வனி. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புகழ் சேரத்துவங்கியது.

அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை அக்காவால். அவளுக்குள்ளே பொறாமை தீ வளர்ந்தது.  

ஹம்ஸத்வனிக்கு அவளது அப்பா என்றாலே பயம். எப்போதுமே தன்னம்பிக்கையும்  கொஞ்சம் குறைவு. இதை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள துவங்கினாள் அக்கா.

'எல்லாரும் உன்னை விட நல்லா பாடுறாங்க. உன்னாலே ஜெயிக்க முடியாது' என்பாள் ஒரு நாள்.

உனக்கு குரலே சரியில்லே. மேலேயே போக மாட்டேங்குது என்பாள் மற்றொரு நாள். இப்படி மட்டம் தட்டியே அவளது தன்னபிக்கையை குறைக்க துவங்கினாள் கல்யாணி.

அதற்கேற்றார் போல் போட்டியில் அவளது மதிப்பெண்கள் குறைய, அவளது அப்பாவுக்கும் ஹம்ஸத்வனியின் மீது நம்பிக்கை குறைய துவங்கியது. அது அவள் மீது கோபமாக மாறி மிரட்டலாக வெடித்தது.

'எப்படியாவது ஜெயித்து விட வேண்டும்' என்ற ஆசை இப்போது அவள் மனதில் ஒரு வித அழுத்தத்தை கொடுக்க துவங்கியிருந்தது.

அந்த அழுத்தம் கூட கூட, அவளால் பாட முடியாமல் போனது.. கையில் மைக்கை பிடித்த மாத்திரத்தில் உடல் நடுங்க  குரல் தடுமாற தோற்றே போனாள் அவள். மேடையிலேயே என்னால் இனி பாட முடியாது என்று உடைந்து அழுதாள் ஹம்ஸத்வனி.

அவள் தோற்று போனதை மிகப்பெரிய அவமானமாக கருதினார் அப்பா. அவளை பார்க்கும் போதெல்லாம் எரிந்து, எரிந்து  விழுந்தார்.

மனஅழுத்தம், மனச்சோர்வும் அவளை உலுக்கியது .பார்ப்பவர்களையெல்லாம் அடிப்பதும், கையில் கிடைப்பதை எல்லாம் உடைப்பதுமாக திசை மாறியது இசையில் மூழ்கி திளைத்து கொண்டிருந்தவளின் வாழ்கை.

விளைவு மன நல மருத்துவமனையில் சில நாள் வாசம். அவளது பிரிவை அவளது அம்மாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

சில நாட்கள் கழித்து அவள் மனம் கொஞ்சம் சம நிலைக்கு வந்தது. அவள் கொஞ்சம் தேறி இருக்கிறாள் என்பது தெரிந்த மாத்திரத்தில் அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் அவள் அன்னை.

அவள் மாடி அறையை விட்டு கீழே இறங்கி வரக்கூடாது என்பது அவளது தந்தையின் ஆணை.. அவ்வபோது கிடைக்கும் அவளது அன்னையின் அருகாமையை தவிர வேறெந்த சந்தோஷமும் இல்லை அவளிடத்தில்.

அது அவளுடைய அறை. அங்கே அவளை சுற்றி அவளுடைய இசைக்கருவிகள்.

இரவில் அவளுடனே படுத்துறங்குவார் அவளுடைய அம்மா. அவர் அடிக்கடி சொல்வார். 'உன்னை சுற்றி எவ்வளவு இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இருக்கு பார் இதையெல்லாம் எவ்வளவு ஆசையா கத்துக்கிட்டே ஏதாவது ஒண்ணை எடுத்து வாசிடா. உனக்கு எல்லாம் சரியாயிடும்.

அம்மாவின் வார்த்தைகளுக்கு அவளது ஒரு வெற்றுப்பார்வையே பதிலாக இருக்கும். அந்த அறையிலேயே முடங்கி கிடந்தாள் அவள். இருளிலேயே படுத்துக்கிடந்தாள் அவள்.

திடீரென்று ஒரு நாள் இரவில் சட்டென விழித்துக்கொண்டாள் அவள். படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். அவளை சுற்றிலும் அமைதி. ஜன்னலின் வழியே குளிர் காற்று வந்து அவள் முகம் வருடி சென்றது. மனமெங்கும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி. அப்போது அவள் கண்ணில் பட்டன அவளது இசைக்கருவிகள்.

அம்மாவின் வார்த்தைகள் அவளுக்குள்ளே சுழல மெல்ல எழுந்தவள் அவளது கீ போர்டின் முன்னால்  சென்று அமர்ந்தாள் அவள்.

அவளது விரல்கள் கீ போர்டில் விளையாட துவங்கின. அடி மனதில் தங்கி இருந்த அவளது இசை மறுபடியும் சட்டென உயிர் பெற்றது. அங்கே பிறந்தது இசை மழை.

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்

இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்.

அவளே அறியாமல் அவள் காயங்களுக்கு இசை மருந்திட துவங்கியிருந்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.