(Reading time: 8 - 16 minutes)

பொய்கையில் நீந்திடும் நிலவே! – புவனேஸ்வரி கலைசெல்வி

ந்த உயரமான கட்டடத்தின் விளிம்பில் கண்ணீருடன் நின்றிருந்தாள்  தாரா. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவள் அவள். எனினும் அது ஒரு குறையாக   உணராத அளவிற்கு தனது தாய் கலைமதியால் வளர்க்கப்பட்டாள் .

கலைமதி, தாராவை ஈன்றெடுத்த வீரத்தாய்..! இளம்வயதிலேயே கைம்பெண்  என்று சமூதாயத்தால் முத்திரையிடபட்டும்  அதை  எண்ணி  கவலை கொள்ளாதவர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் சிறிதாய் மளிகை கடை திறந்து தனது வியாபாரத்தை தொடங்கினார். கடின உழைப்பும் பொறுப்பான நிர்வகிப்பும் அவரது முன்னேற்றத்திற்கு வித்திட்டது. தனி ஒரு பெண்ணாக, கை குழந்தையாய் தாராவுடன்  அவர் சந்தித்த இன்னல்கள் பல! அப்பொழுதெல்லாம் அவரை தெம்பூட்டியது பாரதியின் வரிகள் !

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்

Poigaiyil neenthidum nilaveஉண்மைதான் ! இறந்து விட்ட கணவனை எண்ணி ஒரு மூலையில் ஒடுங்கி விடலாம்தான் ! ஆனால் தன் மகளின் வாழ்வு ? தனக்கென்று ஒரு விடியல் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தனது மகள் ??? சில  நாட்களுக்கு   முன்பு தான்  பிறந்த புது மலர் அவள் அல்லவா ?

" அதிர்ஷ்டம் இல்லாதவள்", " துணை இல்லாதவள் ", " கணவனையே தனது விதியால் கொன்றவள் " இப்படி  பலரது தூற்றுதலையும் பொறுத்து கொண்டு தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டினார் அவர்.. அவர் தனது மகளுக்கு  கொடுத்த முகப்பெரிய சொத்தே அளவில்லாத கல்வியும், சுதந்திரமும் தான் .. அறிவுரை கூற தாயாக அவர் இருப்பினும் , முடிவு எடுக்கும் திறனை மட்டும் அவளிடமே கொடுத்து இருந்தார் கலைமதி ..

" இது பாரு கண்ணம்மா ..வாழ்க்கை ஒரு பயணம்தான்.. எல்லாரும் எப்போதும் உன்னோடவே இருக்க மாட்டாங்க ... நானும் உன்கூட கடைசி வரைக்கும் இருக்க மாட்டேன் ..அதுனால நீதான் உன் வாழ்க்கையை பார்த்துக்கணும் .. எது சரி எது தப்புன்னு நீதான் முடிவு எடுக்கணும் .. எனக்கு எப்பவும் உன் மேல நம்பிக்கை உண்டு .. "

" கண்டிப்பா உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன் அம்மா. அப்படியே என் முடிவு தவறாய் போயிட்டா உடைஞ்சு போயி இருக்க மாட்டேன்  ... வருவதை தைரியமா எதிர்கொள்ளுவேன்  " என்றாள் தாரா  அன்றொருநாள் !

அதேபோல அவள் வாழ்வில் எடுத்த எந்தவொரு முடிவும் தவறான பாதையில் முடிந்தது இல்லை .. தனக்கு பிடித்தது போலவே உளவியல் துறையையும் இசையையும் படித்தாள் .. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்தாள், கிடைத்த நேரங்களில் தன்னால் இயன்ற சமூக சேவைகளை செய்து வந்தாள் ... ஆனால் அவள் வாழ்வில் எடுத்த தவறான முடிவு  காதல் !!

அந்த கட்டடத்தின் விளிம்பில் நின்றவள் " என்னை மன்னிச்சிருங்க மா " என்று கூறி குதித்தாள் .... " ஆஅ " என்று அவள் அலறிய சத்தம் அந்த அறை  முழுவதும் வியாபித்தது..

" ரிலாக்ஸ் தாரா ... ரிலாக்ஸ் .... ஒன்னும் ... இல்ல ... நத்திங் டூ வொர்ரி ...கால்ம் டவுன் " என்று அந்த ஸ்ட்ரெச்சரில்  படுத்திருந்த தாராவை சமாதனப்படுத்தினான் உளவியல் மருத்துவனான  ஆதி..! அவள் இயல்புநிலைக்கு திரும்பி உறங்கும்வரை காத்திருந்தவன், பிறகு அவளது தாயை பார்க்க சென்றான்..

" ஆதி "

" அம்மா"

" அவளுக்கு இப்போ  எப்படி இருக்கு ஆதி?" என்றார் கலக்கத்துடன்

" ம்ம்ம் அதே புலம்பல் தான் .. டேப்லட் எல்லாம் போடுறாளா  ? அவளை வெளில கூட்டிட்டு போலாமே மா ... ரொம்ப நல்லது ! அதுவும் இவளுக்கு இருக்குறது மூளை சம்பந்தபட்ட நோயோ எதுவோ இல்லை .. ஜஸ்ட் டிப்ரெஷன்  அண்ட் உங்க நம்பிக்கையை உடைச்சிட்டோம்னு குற்ற உணர்ச்சி "

" நான்தான் மன்னிச்சிட்டேன்னு சொல்லிட்டேனே ஆதி ? அவளை விடவா எனக்கு அந்த சம்பவம் ரொம்ப முக்கியம் ? நீங்க ரெண்டு பேரும்  ஒண்ணா படிச்சிங்க ..நீயே சொல்லுவ , அவ உன்னைவிட ஸ்மார்ட்ன்னு .. உன்னை மாதிரி இதே ஹாஸ்பிட்டலில் டாக்டரா இருக்க வேண்டியவ நோயாளியா இருக்காளே "

" அம்மா நீங்க எவ்வளவு தைரியசாலின்னு எனக்கு நல்லாவே தெரியும் .. நீங்களே இப்படி உடைஞ்சு போகலாமா ? அவ நோயாளி இல்லை அம்மா .... இப்படி பேசாதிங்க .. அவ முன்னாடியும் இப்படி அழாதிங்க .. அவளை வெளில கூட்டிட்டு போக நான் ஏற்பாடு பண்ணுறேன் ... காலம்தான் இதுக்கு பதில் சொல்லணும் அம்மா காத்திருப்போம் " என்றான் ஆதி ..

சில மாதங்களுக்கு முன்பு தான், வினோத்துக்கு தோழியானாள்  தாரா. ரசிக்க வைக்கும் பேச்சு திறமை கொண்டவனுக்கு தாராவின் மனதை வெல்வது கடினமாகவே இருந்தது. எனினும் நண்பனிடம் பந்தயம் கட்டியவன், அதில் இருந்து எளிதில் பின்வாங்கி விடுவானா ? பணத்திற்கு வளையாதவளை  பாசத்திற்கு வளைய வைத்தான்... காதல் என்று பெயரில் அவனது அத்துமீறல் எல்லை மீரும்முன்னே உண்மையை உணர்ந்து கொண்டாள் தாரா.

எப்போதும் சரியான முடிவை எடுத்து பழகியாதலோ என்னவோ, அவளால் அவனது துரோகத்தை ஏற்கவே இயலவில்லை .. எதையுமே தன் தாயிடம் மறைக்காமல் இருந்தவள்

தன் காதலை மட்டும் மறைத்தது  ஏன் ? அது அவளுக்கே புரியாத புதிர்தான்.. அவளது நடவடிக்கையில் மாற்றங்களை உணர்ந்த கலைமதி, ஒருநாள் உண்மையை சொல்ல சொல்லி அவளை வற்புறுத்த,  சிதறியது அவளது கண்ணீர் துளிகள்  மட்டுமல்ல, உண்மையையும் !

தன் மகளா தன்னிடம் காதலை மறைத்தாள்  ?? என்று அதிர்ச்சியில் விம்மியது தாய் மனம். ஒரு தாயாய் தான் செய்த தவறு என்ன ? ஏன் தன் மகள் தன்னிடம் சொல்லவில்லை ? எதையுமே மறைக்க விரும்பாத என் மகள் காதலை மறைத்தாளா  ? அதுவும் அவளதுகாதலுக்கு  தகுதி இல்லாத ஒருவனுக்கு துணையாக மாற முடிவெடுத்தாளா  ? அதிர்ச்சியின் விளிம்பில் இருந்தவரின் நாவிலிருந்து புறப்பட்டது தாராவின் இதயத்தை அறுக்கும் அம்பு .. !

" உன் தந்தைக்கு பதிலாய் நான் இறந்திருக்க வேண்டுமோ ?" 

அன்று ஆத்திரத்தில் அவர் சொன்ன வார்த்தை ஏதோ  வகையில் அவள் இதயத்தை துளைத்தது.. வெளியில் தன்னை இயல்பாய் காட்டிக்கொண்டு மனதளவில் மறுகிக் கொண்டே இருந்தாள் தாரா. கலை இழந்த அவர்களின் குடும்பத்திற்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆதியும் அவனது நட்பும்தான்..

கலைமதியிடம் பேசிவிட்டு அவளை தன்னுடன் சிக்காகோவுக்கு அழைத்து சென்றான் ஆதி.. அவன் எதிர்பார்த்தது போலவே புதிய இடம் அவளது மன இறுக்கத்தை தளர்த்தியது. அவன் அங்கு மேற்படிப்பை தொடர ஏற்பாடு செய்து இருந்தான்.. ஒரு வாரம் அந்த வீட்டில் தனியாய் இருக்க முடியவில்லை அவளால் ... அவளாகவே " நானும் படிக்கிறேன் ஆதி" என்றாள் .. மனதிற்குள் அவளது மாற்றத்தை எண்ணி ஆனந்த கூத்தாடியவன் வெளியில் " ஓகே உன் இஸ்டம் " என்றான்..

" ஆனா ஒன்னு  "

" என்ன?"

" சைகொலோஜி வேணாம் ... மியுசிக் படி " என்றான் .. உளவியலை காட்டிலும் இசையில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் சரி என்றாள்.ஆதியோ அவள் இருக்கும்நிலையில், அவள் தன்னை வருத்திக் கொண்டு படிக்க வேணாம் என்று எண்ணியே அப்படி கூறினான் ..

காலச்சக்கரம் மிக வேகமாகவே சுழன்றது. தனக்குத் தானே போட்டிருந்த வளையத்திலிருந்து வெளி வந்தாள்  தாரா. ஏற்கனவே கர்நாடக இசையில் கை தேர்ந்தவள், இங்கு மேல்நாட்டு இசைக் காலாச்சரத்துடன் கர்நாடக இசையையும்   சேர்த்து புதிதொரு படைப்பினை உருவாக்கினாள் .. இசையை ஆராயும் அவளது நுணுக்கமான பார்வை  அனைவரையும்  ஈர்த்தது.

தாரா, அந்த ஆண்டின் சிறந்த மாணவர்களில் ஒருவராய் தேர்ந்தெடுக்கபட்டாள் ...

" அம்மாவை பார்க்கணும் ஆதி " என்று அவனிடம்  வாய்விட்டு கேட்டாள். அதற்காகவே காத்திருந்தவன், கலைமதியை அங்கு அழைத்து வர ஏற்பாடு செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.