(Reading time: 8 - 15 minutes)

துவேஷம் - ஜான்சி

ன்றுமே பரபரப்பிற்கும் சுறுசுறுப்பிற்கும் பெயர் போன மும்பை மாநகரம். அங்கே சற்றே உள்ளடங்கிய அந்த பகுதியில் பழைய கட்டிடத்தில் சுவர்களின் நிறங்கள் என்றோ உயிர் விட்டிருக்க அரத பழசான நாற்காலிகள் டேபிள்களை ஒழுங்கு செய்து பல்வேறு கற்றை தாள்களுக்கிடையே ஒரு சில தலைகளும் எட்டிப் பார்க்க அந்த ரேஷன் ஆஃபீஸ் இயங்கி கொண்டிருந்தது. நான் இங்கு வந்து வரிசையில் நின்று  1 மணி நேரமாகின்றது. அலுவலக வாசலிலிருந்து பக்கத்து பில்டிங்  வரை நீண்டிருந்த வரிசையில் பெரிதான மாற்றம் இல்லை. இந்த நாட்டில் வாழ வாக்காளர் அட்டை, பான் கார்ட், ஆதார் கார்ட். ரேஷன் கார்ட் இன்னும் ஒரு மனிதன் அடையாளத்திற்காக எத்தனை எத்தனை கார்டுகளை சேமிக்க வேண்டி வருமோ? என்ற முன் வரிசையில் நின்று புலம்பிய மனிதரை பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். அவருக்கு என்ன அவசர வேலையோ புலம்பி தீர்த்துக் கொண்டிருந்தார்.

நாட்டில் எத்தனையோ மாற்றம் வந்து விட்டது ஆனால் அரசாங்க அலுவல்களின் சேவையில் எந்த மாற்றமும் இல்லை அவரது புலம்பல் தொடர்ந்தது. இதுவே வங்கிகளில்அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் தனியார் அலுவலகங்களில்  சென்றிருந்தால் ஏசி என்ன? அமர இருக்கை என்ன? வாசலில் கால் வைத்ததும் அவசரமாக வேலைகளை முடித்து தருவது என்ன? இங்கு என்ன வென்றால் ஏசி என்ன பேன் கூட இல்லை ஒன்றரை மணி நேரமாக வெயிலில் காத்து நிற்க வைத்து இருக்கிறார்கள்.அதையாவது போனால் போகட்டும் என விட்டு விடலாம் ஆனால் உடனே வேலையையாவது முடித்து தந்தால்தான் என்ன? ச்சே.. அவரது புலம்பல் தொடர்ந்தது. அவரது ஒப்பிடுதலை கேட்டதும் மனம் அந்த சூடு வெயிலிலும் எங்கோ  கற்பனை தாண்டி பறக்க ஆரம்பித்தது.

டான்டடா ய்ங் ..

momதோ கண் முன்னாலேயே ரேஷன் ஆஃபி ஸ் வண்ண மயமாக மாறி விட்டிருந்தது. உள்ளே ஏசியில் குளிரில் கண்ணாடி கதவுகள் சில்லிட்டிருப்பது நன்றாக தெரிந்தது. 

நான் கண்ணாடி கதவுகளில் "PUSH" என்றிருக்க தள்ளிக் கொண்டு உள்ளே நுழைகின்றேன்.  

Yes mam. How can I help You? என்று புன்னகை பூத்த முகமாக ஒருவர் வரவேற்று நான் வந்த வேலையை சில நிமிடங்களில் முடித்துக் கொடுத்து. உங்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என்று கூறுகிறார்.

அடச் சே யாரது.. என் கனவை கலைத்தது. ஓ ... வரிசையில் தன்னிச்சையாக நகர்ந்து நான் வாயிலின் உள்ளே வந்து  விட்டிருந்தேன். உள்ளே சுற்றிக் கொண்டிருந்த பேன் காற்றில் என் கனவு கலைந்து விட்டது போல..... ஆனாலும் அந்த காற்று  இதமாக இருந்தது. 

உள்ளே அப்படி இவ்வளவு நேரமா என்னதான் வேலை நடக்கின்றது என்று ஆர்வ கோளாரில் எட்டிப்   பார்க்க அங்கே அலுவலர்கள் வேலையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு ஒருவருக்கொருவர்   தீபாவளி பலகாரத்தை விநியோகிக்கும் பணி செவ்வனே நடந்து கொண்டிருந்தது. மாமியார் இருந்தவர்கள் மாமியார் கதைகள் பேச, இல்லாதவர்கள் கதை பேச வாய்ப்பு இல்லையே என மௌனமாக கேட்க, ஆண்கள் இது ஒரு நல்ல நேரப் போக்கு என்று சுவாரசியமாக ஊம் கொட்டி அமர்ந்திருக்க ஆமை வேகத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. கடந்த 2 மணி நேரமாக வெயிலில் கருவாடாக காய்ந்த பொழுது வராத கோபம் வரட்டுமா என்று கேட்டது .

ஓரிரு தினங்கள் முன்  வீட்டில் நிகழ்ந்தது கண் முன் விரிந்தது. 

அந்த பாலு நம்பர் கொஞ்சம் எடுத்து தாரியாம்மா? என்று அம்மா கேட்க,

டெலிபோன் டைரியிலிருந்து நம்பர் தேடியவள்

என்ன வேலைம்மா? என்று கேட்க,

 இந்த ரேஷன் கார்ட்ல ஒரு ஃபார்ம் நிறச்சி கொடுக்காட்டா கார்ட் கான்சல் ஆகிடுமாம். அதான் ஒரு இருநூறு முன்னூறு கொடுத்தா அவன் செஞ்சி தந்திடுவான். 

என்னம்மா நீங்க ஒரு ஃபார்ம் நிறச்சி கொடுக்க ரூபா கொடுக்கணுமா?!!!

 இதனால் தான் நம்ம நாட்டில லஞ்சம் தலை சீவாம விரிச்சி ஆடுது, அதெல்லாம் யாருக்கும் நீங்க ரூபாய் கொடுக்க வேண்டாம் இந்த வீக் எண்ட்ல நான் செஞ்சிடுரேன் உங்களுக்கு எல்லாம் வர வர நாட்டுப்பற்றே இல்லாம போயிட்டு என்று ஒருவழியாக  பிரசங்கம் முடித்து தானும் தண்ணீர் குடித்து, கேட்டு களைத்து போன அம்மாக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினேன். (ஒரு சிறுகதைக்குள் ஒரு ஃப்ளேஷபாக்கான்னு ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க.)

அப்படி வீட்டில் பேசி விட்டு இங்கு வந்து மணிக்கணக்கா காத்துக் கொண்டு இருந்தால்  இங்க என்னடான்னா யாரும் வேலை பார்க்காம டைம் பாஸ் செய்றாங்க....... பொறுமையை கடைப்பிடித்தவாறு நின்றிருந்தேன்.இதோ கடைசியில் என் நம்பர் வந்தே விட்டது ,கொண்டு வந்த தாள்கள் எல்லாவற்றையும் ரேஷன் கார்டையும் நீட்டினேன் "அப்பாடா இனி வேலை முடிந்து விடும்" என்று மனதிற்குள்  நினைக்கையிலேயே என் தாள்களின் விபரங்களை வாசித்தவன் கண்கள் என்னை அளவிட்டன.

உன் நேடிவ் ப்ளேஸ் எது ?

யாராவது நீ யார் என்று கேட்டால் இந்தியர் என்றே சொல்ல வேண்டும்  என்று யாரோ சொன்னது சம்பந்தமில்லாமல் காதில் ஒலித்தாலும் நான் Tamilian  என்று உரைத்தேன்.

 ஓ மதராஸியா என்றது அவன், மறுபடி தாள்களில் பார்வையிட்டவன் ஏதோ ஒரு தாள் நிறைக்க வேண்டுமென்று ஒரு காரணம் சொல்லி நாளை மறு நாள் வரச்சொன்னான் .அந்த ஃபார்ம் நிறைக்க கடைசி நாளும் அதுவே என எனக்கு தெரிந்திருந்தது அன்று எனக்கு லீவும் கிடையாது  என்ன அந்த பாலுவிடம் நூறுகள் செலவழிப்பதைவிட  வேறு வழி இல்லை, இப்போது என் நாட்டுப்பற்று எங்கே போனதோ!!!!!....... என் மனம் என்னை கேலிக் கூத்து ஆக்கியது.அது வரை இல்லாத அளவில் மனம் சோர்ந்து போயிருந்தது.

பிறந்த அன்றிலிருந்து இங்கே தான் வாழ்கிறேன் ஒரு நிமிடத்தில் என்னை அந்நியமாக்கிய அந்த மனிதனிடம் சண்டை போடலாமா என மனம் பரபரத்தது. போடா மடையா..... நீ என்ன என்னை சொல்வது இது என் தாய் மண் தான் என்று மனத்திற்குள் மறுகிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

சும்மாவே கற்பனைக்கு பஞ்சம் இருக்காது இப்படி ஒரு பிரச்சனை நடந்த பிறகு என் மூளை குடையாமல் இருக்குமா? எப்போதோ தலைப்பு செய்திகளில் வந்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும்  இந்தியர்களுக்கு எதிரான  தாக்குதல்கள்  குறித்த செய்திகள் ஞாபகம் வந்தது. இப்படி இன்னும் பல நாடுகளில் நிகழ்கின்றதே இது என் இடம் நீ அந்நியன் உனக்கு இங்கு என்ன வேலை? இதுதான் மனிதன் ஒருவன் மேல் மற்றவன் துவேஷம் கொள்ள  பொதுவான காரணம். மனிதனுக்கு ஒருவரை ஒருவர்  நேசிக்க அவன் அல்லது அவள் தோற்றம் ,அழகு , படிப்பு , பணம், குணம், பேச்சு, என எவ்வளவோ காரணம் தேவைப் படுகின்றது ஆனால் யாரையும் வெறுக்க அல்லது புறக்கணிக்க காரணம் எதுவுமே தேவைப்படுவது இல்லை.

உலகம் சுற்றச் சென்றேன்;

நீ பிற நாட்டவன் என்றாய் .

நாட்டிற்குள்ளே  பயணிக்க,

நீ பிற மாநிலத்தவன் என்றாய்.

மாநிலத்தில் வலம் வர நீ வேறு மதம் என்பாய்;

அக்காரணம் பொருந்தாதெனில் நீ வேறினம் என்பாய்.

இனத்திலும் மதத்திலும் கூட தன்  வளமையால் பிறரை பிரித்தே காண்பாய் .

பிரிவினைக் கொள்ள ஆயிரம் காரணம் தேடும் மானிடா....

பிறரை நேசிக்க உன்னிடம் காரணம் ஒன்றும் இல்லையா?

எண்ண ஓட்டங்களை எழுதி முடித்து அயர்ந்தேன். மொபைலின் ஒலியில் கண் விழித்துப் பார்த்தால் அதுவரை ஒன்றிரண்டு குறுச்செய்திகள் வந்திருந்தன. உடனே கால் செய்யுமாறு தமிழகத்திலிருந்து என் தோழியின் தகவலை அவை சுமந்து வந்திருந்தன. 

அவள் என் கல்லூரிகால சிநேகிதி குழந்தை பேறுக்காக பல்வேறு சிகிச்சைகள் தோல்வியுற குழந்தையை தத்தெடுக்கும் முயற்சிகளில் இருந்தாள். முன்தினம் ஓரிடம் செல்வதாக வேறு சொல்லி இருந்தாள் "இறைவா, அவளுக்கு ஒரு குழந்தையை கொடுத்து விடு" என்று வேண்டியவாறு அவளுக்கு கால் செய்தேன்.

ஹாய் டி எனக்கு ஒரு குழந்தை கிடைத்து இருக்கு ......என்றவளின் குரலில் என்றுமில்லாத உற்சாகம்.

வாழ்த்துக்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. குட்டி பாப்பாவா பையனா? என்றேன்.

பாப்பாதான் இல்லைன்னா பச்சிளம் குழந்தையை  சாகட்டும்னு  பிறந்த உடனே யாராவது காட்டில எறிந்துட்டு போவாங்களா?........... அவள் குரலில் ஆதங்கம் இருந்தது.

என்ன சொல்ற நீ? புரியாத பாவனையில் நான் .

ஆமா நாங்க ரெண்டு பேரும் அந்த ஆசிரமத்திற்கு  புறப்பட்டுக் கொண்டு இருந்த போது இங்கே ஒரே களேபரமா இருந்தது. என்னன்னு விசாரிச்சா ஒரு குழந்தையை யாரோ காட்டில போட்டு இருக்கிறதா தெரிய வந்தது. எனக்கு தெரிஞ்சவங்க நீ வளர்க்கிறியான்னு கேட்டாங்க நானும் குழந்தையை வாங்கிட்டேன் இன்னும் கொஞ்ச நேரம் ஆகி இருந்தா குழந்தை இறந்து போயிருப்பா. அவள் உடம்பெங்கும் எறும்பு கடித்து காயங்கள்....... நாங்க இப்போ அவளை அவசர சிகிச்சைக்காக அட்மிட் செய்திருக்கோம் என்றாள் குரல் தளுதளுக்க....

சட்டென்று மனம் மறுபடி சலித்துக் கொண்டது மனிதனுக்கு மற்றொரு உயிரை  வெறுக்க,துவேஷம் கொள்ள  இன்னுமொரு காரணம் அது பெண் குழந்தை என்பதா?....என் மன ஓட்டங்கள் அறியாமல் அவள் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள்.

இப்படியா பெற்ற பிள்ளையை யாராவது சாக விடுவார்கள். என்னை மாதிரி எத்தனை பேர்கள் ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கி கொண்டு இருப்பார்கள். இப்படி செய்ய எப்படி மனம் வந்திருக்கும் .............டாக்டரிடம் நானும் உன் அண்ணனும்  சொல்லிட்டோம் எவ்வளவு செலவு ஆனாலும் சரி அவளை எப்படியாவது நல்லா ஆக்கிடுங்கன்னு ..... நான் அவளை பொன் போல பார்த்துக்குவேன் என்று அவள் குரலில் மறுபடி மகிழ்ச்சியின் ஊர்வலம்.

அது வரை அந்த குழந்தையை தூக்கி எறிந்த மனிதர்கள் மேல் கொண்டிருந்த கோபம் எல்லாம் மறைந்து என்னோடு உரையாடிக் கொண்டிருக்கும் என் தோழியின் தாய்மையில் நான் மனம் குளிர்ந்தேன். தாய்மை என்பது உடல் ரீதியாக ஒரு குழந்தையை கருவுற்று  பெற்றெடுப்பது மட்டுமா?

இதோ தான் பெறாத குழந்தைக்காக துடிக்கும் இவளிடம்  தாய்மையில்லையா ?

இவ்வுலகில் துவேஷங்களற்ற ஒரே  உறவான  தாய்மையை கண்டு கொண்ட மகிழ்வில் மனம் நிறைந்தேன்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.