(Reading time: 7 - 13 minutes)

மன்மத இரகசியம் - மது

காமங் காம மென்ப காமம்

அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்

கடுத்தலுந் தணிதலு மின்றே யானை

குளகுமென் றாண்மதம் போலப்

பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே 

                                         (மிளைப்பெருங் கந்தன் குறுந்தொகை 136)

 

அடங்கியிருந்த யானையின் மதம் தழையுணவை உண்ட காலத்தில் வெளிப்படுவதைப் போல, ஊழின் வலியால் காணற்குரியாரைக் காணப்பெறின் இயல்பாகவே உள்ளத்துள் அடங்கியிருந்த காதலும் காமமும் வெளிப்படும் . “தெய்வத்தின் ஆணை வழியே யான் தலைவியைக் கண்டேன்; அவள் எனக்குரிய ளாதலின் அவளைக் கண்ட மாத்திரத்திலே  என்னிடம் இது வரை  தோன்றாமல்  அடங்கியிருந்த காதல் உணர்வுகள்  வெளிப்படும் நிலை  உண்டானது என  தலைவன் கூறும் குறுந்தொகைப் பாடல்... 

உலகில் எத்தனையோ பேர் இருந்த போதிலும் ஆன்மா தன் சரிபாதியைக் கண்டு கொள்ளுமாம். அதுவே காதலின் பிறப்பிடமாம். மன்மத ஆண்டில் காதல் கசிந்துருகி பொங்கி பெருகட்டும்... உலகம் அன்பு, காதல் ,நேச உணர்வுகாளால் சூழப்பட்டு மகிழட்டும்... எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு இதோ மன்மத இரகசியம்...

 New year

மதியின்  மயக்கமா 

மனதின்  கலக்கமா

மங்கையிவள் புலம்பும் மொழி

மன்னவனைத் தான் தாக்குமா(1)

 

சீரான பாதையில்

சீறிப் பாயும் ஊர்தியில் 

சிந்தனை சிதறியது ஏனோ

செவிகள் உயிரொலியை உணர்ந்ததாலோ (2)

 

ஊர் பெயர் தெரியாது

உண்மை உருவம் அறியாது

உள்ளமதில் அவனை பூட்டி வைத்திருப்பது

உலகத்திடம் எத்தனை நாள்  மறைப்பது (3)

 

பனித் திரையில் தீட்டிய வடிவம்

பகலவன் தீண்ட மறைந்திடும் மாயம்

பாவை இவளோடு கண்ணாமூச்சி நாடகம்

பாரெங்கும் தேடி திரிவது ஆகுமோ சாத்தியம் (4)

 

கண் பாராமலே காதல் கண்டிருக்க

சொல்லாமலே காதல் கேட்டிருக்க

உணர்வாலே காதல் அறிந்திடுவோம்

மன்மத இரசகியம் நாமும் தெரிந்திடுவோம் (5)

 

பெயர் தான் மஹாரதி

மற்றபடி இவளோ சாமியாரிணி

தேவ கன்னிகை அழகுடையாள்

தோழிகள் கேலிக்கு ஆளானாள்(6)

 

இவனோ இளமாறன்

இளமையின் ஆசை துறந்தவன்

மன்னனைப்  போன்ற  கம்பீரமுடையான்

மற்றவர் சீண்டல்களுக்கு இலக்கானான்(7)

 

அழகன் என்றால் இவனே இவன் 

அன்று வந்தப் புதுப்  பட நாயகன்

சிநேகித பட்டாளம் உருகி வழிய

சிந்தையில் இவளோ தன்னவனை மட்டும் தழுவ (7)

 

நாம் செல்லும் ஊரில் அழகிகள் ஏராளம்

நித்தம் புதுப்புதுக் கொண்டாட்டம் 

நண்பர் கூட்டம் கனவுகளில் ஊர்வலம்

நாயகன் நினைவோ தன்னவளை சுற்றி மட்டும் (8)

 

 

யாரோ இவன் என் மனம் கவர்ந்தவன்

யாதுமாகி நிற்கும் மாயக் கண்ணன்

யாரோ இவள் என் இதயத்தில் துடிப்பவள்

யாக்கையுயிர் ஆட்டுவிக்கும் மோகினியிவள்(9)

 

விழி  மூடினால் இமைத் திரையில்

இதழ் ஓரத்தில் புன்னகைத் தீற்றலில்

பகல் கனவா பாலை கானல் நீரா

முக வரி இல்லா முகை விரி மணமா(10)

 

வெளியில் சொன்னால் வெட்கம்

வேடிக்கையாய் ஊரும்  பேசும்

தனக்கே புரியாத புதிர் தெரியவில்லை சூட்சமம்

தங்களுக்குள் பூட்டி வைத்தனர் காதலை இருவரும் (11)

 

அகம் அறியும் அவளை

ஆனால் முகம் நீர்த்திவலை

தீட்டிய சித்திரம் காத்திருக்கும்

தேவியின் வதனம் தரிசனம் (12)

 

உள்ளம் உணரும்  அவனை

உருவமோ தெரியவில்லை

பாடிய காவியம் தேய்பிறை

தலைவன் வருகை  முழு நிலை  (13)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.