(Reading time: 17 - 34 minutes)

அம்மனோ......... சாமியோ........... - ஜெய்

ன்னங்க... எங்க இருக்கீங்க?”, தன் மனைவியின் குரல் கேட்டவுடன் ஜெர்க்கானான் முரளி,

‘பழனி முருகா என் பத்தினி கண்ணுல மாட்டாம இன்னைக்கு என்னை ஆபீஸ்க்கு எஸ் ஆக வச்சுடுப்பா.  என்னால நடக்கவே முடியாட்டாலும் தவழ்ந்து வந்தாவது மொட்டை அடிக்கறேன்.  பண்ணாரி மாரியம்மா, சப்போஸ் முருகர், வள்ளி தெய்வானையோட பிஸியா இருந்தாருன்னா நீங்க சிங்கிளா வந்து, என்னோட ஆபீஸ் வேலைக்கு என் பொண்டாட்டி ஆப்பு வைக்காம காப்பாத்து தாயே’, என்று பழனி முருகனிடம் ஆரம்பித்து பண்ணாரி மாரியம்மன் வரை ஒரு full round வந்து ஏகப்பட்ட லஞ்சங்களுடன் வேண்டுதலை வைத்தும், மேல் லோகத்தில் IPL பெட்டிங்கில் அனைத்து கடவுள்களும் பிஸியாக இருந்த காரணத்தால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே அவனின் வேண்டுதல் தள்ளுபடி செய்யப் பட்டது.

“ஓ இங்கதான் இருக்கீங்களா.  என்னங்க ஆபீஸ்க்கு கிளம்பிட்டீங்களா?”, மலர்ந்த முகத்துடன் சிரித்தபடியே வந்த மனைவியைப் பார்த்தவுடனேயே அபாய மணி. ஆலய மணியாக மாறி பெரும் ஓசையை அவன் மண்டைக்குள் அடித்தது. 

Superstition“ஆமாம் லத்து, கிளம்பிட்டேன்.  இன்னைக்கு ஏகப்பட்ட மீட்டிங் இருக்கும்மா.  நிறைய prepare பண்ணனும்.  அதான் சீக்கிரம் கிளம்பறேன்.  எனக்கு டிபன் கூட வேண்டாம்.  ஆபீஸ் கான்டீன்லையே பார்த்துக்கறேன்”, மனைவி பதில் பேசாத அளவிற்கு கட கடவெனப் பேசி அப்படியே வாசலை நோக்கி ஓடினான் முரளி.

அவனை விட படு வேகமாக ஹாலிற்கு வந்து அவனை வாசலிற்கு போகாமல் தடுத்த லதாங்கி, “என்னங்க என்னை லத்து, கத்துன்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.  குருஜி என்ன சொல்லி இருக்கார்.  எல்லாரையுமே முழுப் பேர் சொல்லித்தான் கூப்பிடணும்ன்னு சொல்லி இருக்கார் இல்லை.  ஒழுங்கா முழுப் பேர் சொல்லுங்க”

அந்த குருஜி நாசமாப் போக என்று மனதிற்குள் சபித்தபடியே, “சாரிடா லதாங்கி.  மறந்து போய் செல்லமா கூப்பிட்டுட்டேன்.  இப்போ நான் கிளம்பட்டா. ரகுநந்தன் ரெடியா.  ஸ்கூல்ல விட்டுட்டுப்  போய்டறேன்.  உனக்கு ஒரு வேலை மிச்சமாகும்”, உஷாராக தன் மகனின் முழுப்பெயரை சொல்லியே விசாரித்தான் முரளி.

“பாருங்க அதைப் பத்திதான் பேச வந்தேன்.  அதுக்குள்ள நீங்க ட்ராக் மாத்திட்டீங்க.  இன்னைக்கு ரகுநந்தன் ஸ்கூல் போகலைங்க”

“என்னது போகலையா.  இன்னைக்கு அவனுக்கு டெஸ்ட் இருக்கே.  என்னாச்சு.  காலைல நான்தானே குளிப்பாட்டினேன்.  அப்போக்கூட நல்லாத்தானே இருந்தான்.  திடீர்ன்னு உடம்பு  சரி இல்லாம போச்சா?”

“வாயைக் கழுவுங்க.  நம்ம பையன் நல்லாத்தான் இருக்கான்.  குருஜிதான் இன்னைக்கு அவனை ஸ்கூல் அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னாரு”

மறுபடியும் இந்த ஆளா என்று அலராத குறையாக மனைவியைப் பார்த்த முரளி, “இங்க பாரும்மா, குருஜி சொல்றாருன்னு எல்லாத்தையும் follow பண்ணனும்ன்னு இல்லை.  படிக்கற பையனை பாதி நாள் அது இதுன்னு சொல்லி லீவ் போட வைக்கறே.  அவனுக்குத்தான் பின்னாடி கஷ்டம்”

“மூணாங்கிளாஸ் படிக்கற பையனுக்கு என்னங்க கஷ்டம்.  அவனுக்குப் புரியாத பாடத்தை நான் சொல்லி கொடுத்துடுவேன்.  இன்னைக்கு அவன் ஸ்கூல்க்குப் போனா கீழ விழுந்து அடி பட்டுப்பானாம்.  அதனால அவனை அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னார்.  அதே மாதிரி நீங்களும் ஆபீஸ் போகவேண்டாம்”, பையனை ஸ்கூல் அனுப்பாததற்கு படு பயங்கரமான காரணம் ஒன்றைக் கூறி கடைசியில் தன் தலையிலும் பெரிய குண்டாகத் தூக்கிப் போட்ட மனைவியை கொலை வெறியுடன் பார்த்தான் முரளி.

“அடியே, நான் சொன்னது உன் மண்டைல ஏறவே இல்லையா.  இன்னைக்கு எனக்கு ஏகப்பட்ட மீட்டிங் இருக்கு.  என்னால லீவ் எல்லாம் போட முடியாது.  லூசுத்தனமா பேசாம வழி விடு”, தன் மனைவியை நகர்த்தி விட்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான் முரளி.

“ஏங்க குருஜி என்ன சொன்னாருன்னு கேளுங்க”, என்று மன்றாடியபடியே அவன் பின்னால் போனாள் லதாங்கி.

““ஏண்டி அந்த சாமியாருக்கு நீ ஒருத்திதான் சிஷ்யப் புள்ளையா.  ஆனா, ஊன்னா படக்குன்னு போன் பண்ணி எதை எதையோ சொல்லுறாரு.  அப்படியே அவர் என்ன சொன்னாலும் அதை நான் கேக்கறதா இல்லை.  நீ அந்த ஆஸ்ரமத்துக்கு போறதே எனக்குப் பிடிக்கலை.  அதை சொன்னா அப்பறம்  முக்கி முக்கி மூணு நாளு அழுவ, அந்தக் கன்றாவியை யாரு பாக்கறதுன்னுதான் பேசாம இருக்கேன். இதுல அவர் அதைப் பண்ண சொன்னாரு, இதைப் பண்ண சொன்னாருன்னு என்னை வேற பண்ண சொல்லாத”

“ஐயோ சொன்னாக் கேளுங்களேன்.  இன்னைக்கு உங்க நட்சத்திரம்ங்க, அதோட வடக்கே வேற சூலமாம்.  அதனால நீங்க இன்னைக்கு ஆபீஸ்க்கு போனீங்கன்னா பிரச்சனைல மாட்டிப்பீங்கன்னு குருஜி சொன்னாருங்க”, தான் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல் போகிறானே என்று அவனைத் தடுக்க முயற்சித்தாள் லதாங்கி.

“வடக்கதானே சூலம், நாம சென்னைலதானே இருக்கோம்.  சென்னை இந்தியாவோட தெற்குலதானே இருக்கு.  அதனால பாதிப்பு இருக்காது.  கவலைப்படாதே.  அப்படியே இல்லாட்டாலும் option B அப்படின்னு ஒண்ணு வச்சிருப்பியே, எலுமிச்சம்பழம் வைக்கறது.  காசு முடியறது, மூணு சொம்பு தண்ணிய மூச்சு விடாம குடிக்கறதுன்னு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்குமே.  அதுல ஏதானும் ஒண்ணை பண்ணி உன் புருஷனை பிரச்சனைல இருந்து காப்பாத்திடு சரியா.  நான் இப்போ கிளம்பறேன்.  நீ போய் நேர்ந்துக்க ஆரம்பி”, எங்கே ஷூ போடும் நேரத்தில் தன் மனைவி அடுத்த சகுனத்தை சொல்ல ஆரம்பித்து விடுவாளோ என்று பயந்து அதைக் கையில் எடுத்தபடியே தன் காரை நோக்கி ஓடினான் முரளி.

‘சாமி சொன்னதைக் கேக்காம இப்படி குதர்க்கமா பேசிட்டுப் போறாரே.  ஆண்டவா குருஜி நீங்கதான் அவருக்கு ஒரு பிரச்சனையும் வராம காப்பாத்தணும்’, வேண்டியபடியே தன் மகனை கவனிக்க சென்றாள் லதாங்கி.  சிறிது நேரம் சென்றபின் மனது கேட்காமல் தன் கணவன் ஒழுங்காகச் சென்று சேர்ந்தானா என்று கேட்க அழைக்க அவன் கைபேசி அணைத்து வைக்கப் பட்டு இருந்தது.

‘ச்சே இந்த மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.  நான் எத்தனை பயத்துல இருப்பேன்.  கொஞ்சம் கூட அக்கறையே கிடையாது,  நல்லபடியா ஆபீஸ் வந்து சேர்ந்துட்டேன்னு சொன்னா என்னவாம்’, தன் கணவனை கொதிக்கும் எண்ணையில் போட்டு வறுத்தபடியே அவனின் ஆபீஸ் தொலைபேசிக்கு அழைத்து அவனுக்கு இணைப்பு கொடுக்கச் சொல்ல அங்கு அவன் மீட்டிங்கில் இருப்பதால் இப்பொழுது தொடர்பு கொடுக்க முடியாது என்று அவனின் காரியதரிசி சொல்ல கடுப்பானாள்.

எந்த வழியிலும் கணவனை திரும்ப வீட்டிற்கு அழைக்க முடியாத லதாங்கி குருஜிக்கே போன் செய்து தன் கணவன் தான் சொன்னதைக் கேட்காமல் ஆபீஸ் சென்றுவிட்டதாகவும், அவன் பிரச்சனையில் மாட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அதன் படியே பரிகாரத்தை செய்ய ஆரம்பித்தாள்.

“லதா, எனக்கு கொஞ்சம் காஃபி கொடும்மா.  தலைவலி மண்டைய பிளக்குது”, என்றபடியே உள்ளே நுழைந்த கணவனை நான் அப்பொழுதே சொன்னேனா என்ற பார்வை பார்த்தாள் லதாங்கி.  இவ பார்வையே சரி இல்லையே, இப்போ என்ன சொல்லப் போறாளோ, என்று திகிலுடன் பார்த்தான் முரளி.

“நான்தான் கார்த்தாலயே சொன்னேனே.  கேட்டீங்களா, இப்போப் பாருங்க தலைவலி வந்துடுச்சு”, அவள் அவனை வெருப்பேற்றிக் கொண்டிருக்கும்போதே உள்ளறையிலிருந்து கையில் ப்ளாஸ்த்ரியுடன்  வந்தான் அவர்களின் புதல்வன் ரகு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.