இனிய இரவு - ஷாரன்
“ மகி லேஸ், லிட்டில் ஹார்ட்ஸ் எல்லாம் ரண்டு பாக்கட்ஸ் வாங்கிடல்ல, அப்புறம் பஸ்ஸுல இருந்து இறங்கி வாங்க வேண்டியிருக்க போகுது ” என்று படு சீரியசாக சொன்ன மிருதுளாவின் தலையை தட்டி,
“ எப்போ பாரு சாப்பாட்டுலே இரு டி. உனக்கு கதோத்கஜனி தான் பேர் வச்சு இருக்கனும். முக்கியமான தண்ணி பாட்டில் பத்தி எல்லாம் ஒன்னும் கேட்டுறவே கேட்டுறாத என்ன..” என்று மகிமா அலுத்துக்கொள்ள,
அவள் வேறு யாரிடமோ பேசுவதைப் போல, அவள் கையிலுள்ள பைகளை வாங்கி, அதில் ஒன்றைப் பிரித்து சுவரஸ்யமாக சாப்பிட தொடங்கினாள் மிருதுளா. அவளின் செயலைக் கண்டு முறைத்தாள் மகிமா.
“ என்னடா இவ டக்குனு சைலண்டாயிடா, இப்பவும் நாம ரியக்ட் பண்ணல வைலண்டாகிடுவாளே ” என்று மூளை அறிவுறுத்த, நிமிர்ந்து தன் கையில் உள்ளதை அவளிடம் நீட்டி “ ம்ம்.. எடுத்துகோ. எப்படியும் என்ன திட்டியே டயர்டாயிருப்ப.. எடுத்துகோ டி ” என்று கண்களை உருட்டி பாவமாக சொன்ன மிருதுவைப் பார்த்து மகி சட்டென சிரித்துவிட்டாள்.
“ அப்பாடா.. சிரிச்சியே, நன்றி தாயே ” மிருது சொல்ல
“ சரியான ஆளு டி நீனு “ என்றபடி தன் இருக்கையில் அமர்ந்தாள் மகி.
பேருந்தில் சிவகாசியிலிருந்து சென்னையை நோக்கி இரவு பயணம். தோழிகள் இருவராய்ப் பயணம் செய்வதால் பெற்றொருக்கு சற்று மன நிம்மதி.
பயணம் தொடங்கிய சிறிது நேரம் வரை வாய் ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டு வந்த இருவரும், சற்று நேரத்தில் கண் அயர்ந்தனர். நல்ல உறக்கத்தில் இருந்த மிருதுளாவிற்கு ஏதோவொன்று உறுத்த சட்டென விழித்தாள். மகிமா உறங்காமல், நிமிர்ந்து உட்கார்ந்து மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு,
“ என்னாச்சு மகி? இப்படி உட்கார்ந்திருக்கயே தூக்கம் வரலையா? அதுக்கு சான்ஸே இல்லையே. நான் கதோத்கஜனினா, நீ கும்பகர்னியாச்சே “ என்று கிடைத்த வாய்ப்பை விடாமல் வாரினாள் மிருதுளா.
“ ஏன் டி நீ வேற.. பின்னாடி சீட்டுல உட்கார்ந்திருக்கே ஒரு எரும, அது நிம்மதியா தூங்கவிட்டா தானே. கையை வச்சு நோண்டிக்கிட்டே இருக்கான் “ என்று கண்கலங்க கூறினாள்.
காதில் ஹேட்செட்டை மாட்டி, கண்களை இருக்க மூடி, தீவிரமாய்ப் பாட்டுக் கேட்பதை போன்ற பாவனை செய்த பின் சீட்டுக்காரனைத் திரும்பி பார்த்த மிருது, “ மகி ,ஒருவேளை தெரியாம கை நீட்டும் போது எதாவது.. ” என்று இழுக்க,
“ மண்ணாங்கட்டி. இதோட மூனு தடவ தெரியாம நீட்டி இருப்பானா என்ன? ராஸ்கல். திரும்பி முறைச்சா, சிரிச்சுகிட்டே குனிஞ்சுகிறான் “என்று புலம்பினாள் மகிமா.
“ சரி விடு, நான் பாத்துக்கறன் “ என்று எழும்ப எத்தனித்த மிருதுவைத் தடுத்த மகி,
“ வேண்டாம் டி. இந்த சண்ட கிண்ட எல்லாம் வேண்டாம். எதுக்கு பிரச்சனை? விட்டுறலாம். இன்னும் ஒரு அஞ்சு மணி நேரம் தான். சகிச்சுகிறன். நீ கேட்ட மட்டும் என்ன சொல்லிடபோறன், ‘சாரிங்க, நான் வேணும்னே செய்யல, தெரியாம பட்டுயிருக்கும்’ னு தான் சொல்லுவான். “
மிருதுளா, “ அய்யையோ.. சண்டையா? நான் அகிம்சைவாதிமா “
மகி, “ அப்போ என்ன செய்ய போற? ”
“ ஜஸ்ட் வெயிட் அண்ட் வாட்ச் “ என்று எழுந்த மிருதுளா,
“ எக்ஸ்கியூஸ் மீ. கொஞ்சம் எல்லாரும் எழுந்திருக்கிறீங்களா? ப்ளீஸ். இந்த நேரத்துல உங்கள எல்லாம் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிச்சுடுங்க “ என்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினாள்.
“ என்னம்மா உனக்கு வேணும்? சும்மா தூங்கறவங்கள டிஸ்டர்ப் பண்ணிகிட்டு ” என்றது ஒரு குரல்.
“ இந்த காலத்து பசங்களே இப்படி தான், நேரம் காலம் தெரியாம விளையாட வேண்டியது ” என்றது மற்றொரு குரல்.
“ ஐ அம் ரியலி சாரி. அவசரமா ஒரு உதவி தேவ, அதான். ”
“ ஒன்னுமில்ல, இதோ பின்னாடி சீட்ல உட்கார்ந்திருக்குற அண்ணாக்கு எதோ பிரச்சனை போல. கையையும் காலையும் வச்சுகிட்டு சும்மா இருக்க முடியால. எங்க சீட்டோட இடுக்குவரைக்கும் நீட்டிக்கிட்டே இருக்காரு. அதனால எங்களாலையும் தூங்க முடியல. “
“ அதான் அவர் கை கால் நீட்ட வசதியா, முன்னடி பின்னடி பக்கத்துல ஆண்கள் மட்டுமே உட்கார்ந்திருக்குற சீட் எதாவது இவருக்கு கொடுத்து கொஞ்சம் மாறி உட்கார்ந்தீங்கனா, இந்த அண்ணா சந்தோஷப்படுவாரு. சக மனுஷனுக்குச் செய்யுற ஒரு உதவியா இதை கொஞ்சம் பாருங்க. ப்ளீஸ். பாவ…ம் அண்ணா.. ” என்று தன் நீண்ட உரையை முடித்தாள்.
அவள் சொல்ல வந்தது அனைவருக்கும் புரிந்த்து. எல்லோருடைய முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டான் அந்த பின் சீட்டுக்காரன்.
பெரியவர் ஒருவர் எழுந்து வந்து, “ நீங்க தூங்குகம்மா. நான் மாறி உட்காருறேன். “ என்றார்.
“ ரொம்ப தேங்க்ஸ் சார் “ என்றனர் பெண்கள் இருவரும்.
பின்பு அவர், “ தம்பீ.. என்ன நீங்களே மாறுறீங்களா? இல்ல.. ” என்று தொடங்க, குனிந்த தலை நிமிராமல், அச்சடக்கத்துடன் தன் உடமைகளை வாரி சுருட்டி இடத்தை காலி செய்தான் அவன்.
“ ஹோய் மகி, குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் “ என்ற மிருதுளாவைப் பார்த்து புன்னகைத்தாள் மகிமா.
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.