(Reading time: 6 - 12 minutes)

ஆக்ஸிடெண்டல் லவ் - ஷாரன்

8 மணியை ஒட்டிய காலை நேரம். சென்னையின் புற     நகர் பகுதியிலுள்ள ஒரு சாலை. பள்ளிகளுக்குச் செல்ல பிள்ளைகளும், பணியிடங்களுக்குச் செல்ல ஊழியர்களும், வேறு சிலரும் அங்குள்ள பேருந்து நிறுத்தமொன்றில் காத்திருந்தனர்.

“ அட சே லேட்டாயிடிச்சே, இந்த பஸ்ஸ வேற காணும் “ என்று பேருந்தை எதிர்நோக்கி அவள் நிற்க, நேரெதிரே சாலையைக் கடக்க முயன்ற ஒரு ஐந்து வயது சிறுமியை இடித்துச் சென்றது ஒரு கார்.

“ அய்யோ “ என்று பதறியப்படி அனைவரும் அந்த சிறுமியை நோக்கி ஒடினர். சூழ்ந்து நின்ற அனைவரையும் நகரச் சொல்லி அந்த சிறுமியை எடுத்து மடியில் கிடத்தி இரத்தம் கசியாதவாறு தன் கைக்குட்டையை அதன் தலையில் கட்டினாள்.

Accidental loveஅந்த நேரம் காரில் வந்த ஒருவன், அடிப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்து,

“ அட என்னங்க பண்றீங்க? உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்தாகனும். தூக்குங்க. என் கார்லையே கூட்டிட்டு போறேன் ” என்றான்.

மற்றவர்கள் தயங்க, அவள் “ வாங்க நா வரேன் “ என்று அந்த சிறுமியை மடியில் படுக்க வைத்தவாறு காரின் பின் சீட்டில் அமர்ந்தாள். அவன் காரை மிகவும் வேகமாகவும் சதுர்யமாகவும் செலுத்த, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தனர். வண்டியை விட்டு இறங்கும் போதே காவல் துறையைச் சார்ந்த தன் நண்பனிடம் விஷயத்தை பகிர்ந்தான்.

“ இந்த பாப்பாவோட சொந்தக்காரங்க யாரும் இங்க இல்லைனு தெரிஞ்சா, உடனே சிகிச்சைய தொடங்க கொஞ்சம் தயங்குவாங்க. சோ, நாம இவ சொந்தம்னு சொல்லுவேன். உங்களுக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லையே “ என்று அவள் கேட்க, ‘இல்லை‘ என்பது போல் தலையாட்டினான் அவன்.

“ சிஸ்டர் எமர்ஜென்சி, எங்களுக்கு தெரிஞ்ச குழந்த ரோட்டை கிராஸ் பண்ணப்போ கார் இடிச்சிடிச்சு. போலீஸ்க்கு சொல்லியாச்சு. கொஞ்சம் சீக்கிரம் பாருங்க “ என்றாள்.

“ பேஷண்ட்டோட பேர் என்ன? “ என்று அவர் கேட்க,

“ திவ்யா “ என்று அவளும், “ தர்ஷினி “ என்று அவனும் ஒரே சமயத்தில் சொல்ல, நர்ஸ் ‘என்ன’ என்று விழித்தார்.

உடனே சுதாரித்து “ திவ்யாதர்ஷினி “ என்றவளை மெச்சுதலுடன் பார்த்து,

“ நீங்க அவளை உள்ள கூட்டிட்டு போங்க, நான் இங்க டீடைல்ஸ் குடுத்துட்டு வரேன் “ என்றான்.

சிகிச்சை தொடங்கிற்று. சற்று நேரத்தில் பரபரப்புடன் அவர்களிடம் வந்த மருத்துவர்,

“ பேஷண்ட்டுக்கு ஒரு சின்ன சர்ஜரி பண்ணணும். அடி பட்டதுல நிறைய இரத்தம் போயிடிச்சு. உடனே அவளுக்கு  இரத்தம் தேவ படுது. A1B பாஸிடீவ். கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம். இங்க பிளட் பாங்க்லையும் இப்போ இல்ல. எப்படியாவது சீக்கிரம் ரெடி பண்ணுங்க. நானும் பாக்கறேன். இல்லைன கஷ்டம் “ என்றார்.

இருவரும் தனித்தனியே தங்கள் கைப்பேசியில் பலரை தொடர்புக்கொண்டு முயற்சித்தனர். பலனில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து என்று புரிந்தது.

“ எனக்கொரு ஐடியா, பக்கத்துல ஒரு ஐ.டி. கம்பனி இருக்கு. மாஸ் கிரவுடு. அங்க போய் கேட்டு பார்க்கலாம். யாருக்காவது இந்த பிளட் குரூப் இருந்தா உதவுவாங்க. “ என்றாள்.

அவனுக்கும் அதுவே சரியென பட்டது. அந்த ஐ.டி. கம்பனியின் முன் காரை நிறுத்தியவன், “ நீங்க உள்ள போங்க, நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன்” என்றான்.

அவள் துரிதமாய் செயல்ப்பட்டாள். உள்ளே சென்றவள் மேலிடத்திற்கு தான் வந்த காரணத்தைக் கூறி ஊழியர்களை சந்திக்க அனுமதி பெற்றிருந்தாள். இதை அறிந்தவன் அங்கிருந்த ஒரு நாற்காலியின் மீதேறி நின்று, “ எக்ஸ்கியூஸ் மீ ப்ரெண்ட்ஸ் “ என்று அழைத்து தனது தேவையை ஆங்கிலத்தில் அங்கிருந்தோர் அனைவருக்கும் தெரிவித்தான்.

ஒருவன் எழுந்து அவர்களிடம் வந்தான். அவன் ஒரு வட இந்தியன். வந்தவன், “ ஐ யம் நீரவ், ஐ யம் ரெடி டு ஹெல்ப் யூ “ என்று சொல்ல, அவனுக்கு நன்றி கூறி அழைத்து சென்றனர்.

அறுவை சிகிச்சை தொடங்கியது. சிறுமி காப்பாற்றப்பட்டாள். சிறிது நேரத்திற்கு பின்பு அவன்,

“ நான் நீராவ்வை திரும்ப விட்டுட்டு வரேன் “ என, “ சரி “ என்றாள்.

“ ஒகே நீராவ் லேட்ஸ் மூவ். ஐ வில் டிரப் யூ “ என்று இரண்டடி நடந்தவன் திரும்பி அவளைப் பார்த்தான். தனியாக அங்கு இருப்பதை சற்று அசௌகரியமாக உணர்ந்த அவள், திருதிரு என விழிப்பதைப் பார்த்து, “ நீங்களும் வாங்களேன், எப்படியும் சர்ஜரி முடிஞ்சவுடனே பாப்பாவை பாக்கவும் விட மாட்டாங்க. இங்க தனியா.. “ என்று அவன் முடிப்பதற்குள், அவள் எழுந்தே விட்டிருந்தாள்.

முன் சீட்டில் ஆண்கள் இருவரும் அமர, அவள் பின் சீட்டில் அமர்ந்தாள். வழி முழுக்க அவன் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டிருந்தான். ஆங்கிலத்தில் தான்.

“ என்ன இருந்தாலும் நன்றிய நம்ம தமிழ்ல சொல்ற மாதிரி வராதுபா “ என்று மனதில் எண்ணியவாறு, “ யூ ஆர் கிரேட் “ என மறுபடியும் தொடங்கினான்.

நீரவ் தன் இடத்தில் இறங்கி, காரில் உள்ள இருவரையும் பார்த்து கையசைத்து, “ ஒன்னியும் கவல படாதீங்க. பாப்பாக்கு ஜல்தி செரியாயுடும், பை “ என்றான்.

‘ அடேய், உமக்கு தமிழ் தெரியுமாடா? இவ்வளவு நேரம் மூச்சை பிடித்துக்கொண்டு உன்னுடன் ஆங்கிலத்தில் பேசி வந்தேனே, ஒரு வார்த்தை.. இல்லையேல் ஒரு சமிக்கையேனும் தந்திருக்கலாமே.. பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? ‘ என்று இதுவரை விட்ட பீட்டருக்கும் சேர்த்து அவன் மனம் தூய தமிழில் எண்ணிக்கொள்ள, திரும்பி அவளைப் பார்த்தான்.

அவளோ, குபீரென்று வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருந்தாள். அசடு வழிந்தப்படி “ போலாமா? “ என்று அவன் கேட்க, புன்னகையுடன் “ ம்ம்ம்.. “ என்றாள்.

சிறுமி கண் விழித்த பின்பு அவளின் பெற்றொரைப் பற்றி விசாரித்து அவர்களை வரவழைத்தனர். அவர்கள் கூலி வேலை செய்பவர்கள்.

அவர்களால் இந்த மருத்துவ செலவை உடனடியாக சமாளிக்க முடியாதென்பதை உணர்ந்தவன், “ நான் போய் பில்ல கட்டிட்டு வரேன் “ என்று அவளிடம் தெரிவித்து, சிறுமி இருந்த அறையை விட்டு வெளியெறினான். அவனுடனே கூட வெளியேறியவள், தனது ஏ.டி.எம் கார்ட்டை அவனிடம் கொடுத்து, அதன் எண்ணையும் தெரிவித்தாள்.

“ சரி பாதியா ஷேர் பண்ணிக்கலாம் “ என்றாள்.

“ அடடா, நம்பி தரீங்களே, நான் எஸ்கேப் ஆகிடா? ” என்று நக்கலாக கூறி சிரித்தப்படி நடந்தான்.

அவள், “ ஹாலோ, உங்க செல்போனையும், கார் சாவியையும் அங்க டேபிளயே மறந்து வச்சுடீங்க. பரவால, நான் எடுத்து வச்சுருக்கேன். ரொம்ப காஸ்லியான மொபைல் போல. நீங்க திரும்ப வர வரைக்கும் எங்கிட்டே இருக்கட்டும். வந்ததும் தரேன் ” என்றாள்.

அவளை பார்த்து முறைக்க முயற்சி செய்து தோற்று, சிரிப்புடனே, “ ஸ்மார்ட் “ என்று சொல்லி சென்றான்.

மாலையானதும் இருவரும் சிறுமியிடமும் அதன் பெற்றொரிடமும் விடைப் பெற்று கிளம்பினர்.

மருத்துவமனையின் வாசலை அடைந்தவுடன், “ நானே உங்கள வீட்ல விட்டுறன் வாங்க “ என்றான்.

“ அதெல்லாம் வேண்டாங்க, பக்கம் தான், நான் பாத்துகிறன். பை ” என்றாள்.

சிறிது தூரம் நடந்தவன், திரும்பவுமாக அவளிடம் வந்து, “ சொல்ல மறந்துடேன், ஐ யம் கௌதம் “ என்று கரம் நீட்ட, அதைப் பற்றி குலுக்கியவள் மென்நகையுடனே, “ ஐ யம் பூஜிதா “ என்றாள்.

சற்று தயங்கியவள், “ உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா? “ என்றாள்.

“ அட என்னங்க நீங்க, தாராளமா கேளுங்க. என்ன? .” என்றதும்.

“ அது ஒன்னுமில்ல.., இந்த ‘தர்ஷினி’ யாரு..? “ என்றாள்

சிரிப்பை அடக்கியவாறு, “ ஏன் கேக்குரீங்க? “ என்றான் கௌதம்.

“ சும்மா தான், பர்சனல்னா சொல்ல வேண்டாம் ” என்று அவள் அவன் பதிலை எதிர்நோக்கி அவனை ஏறிட்டாள்.

அவள் கண்களை பார்த்து ஒரு புன்னகையுடன் சொன்னான் அவன்,

“ ம்ம்.. பர்சனல் தான், அவங்க என்னோட அம்மா “

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.