(Reading time: 10 - 20 minutes)

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி – புவனேஸ்வரி கலைசெல்வி

யாருமில்லா தனி அரங்கில்

ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ

Itharku thane asai patai balakumariஎன்னை இசைக்கிறாய்

இப்படிக்கு உன் இதயம்..

தனக்கு மிகவும் பிடித்த பாடலை அலாரமாக வைத்திருந்த விளைவினால், முகத்தில் புன்னகை அரும்ப சோம்பல் முறித்து விழித் திறந்தாள் விஷ்வரூபினி . அதே புன்னகை மாறாமல் அலாரமிற்கு விடுதலை தந்தவள், தூக்கம் கலையாத விழிகளுடன் எழுந்து ஜன்னலை திறந்தாள். தூரத்தில் இருந்து வந்த குயிலோசை , அவளை வாவென்று அழைத்தது .. ஏதோ இன்று உனக்கு நல்லா நாள் என்று பறவைகள் பாடுவது போல இருந்தது அவளுக்கு. அதே உற்சாகத்துடன் நாட்காட்டியில் திகதி கிழித்தவள் நொடி பொழுதில் சோர்வை தழுவினாள்  ..

" திங்கட்கிழமை !"

பலபேருக்கு எரிச்சலையும் சுமையையும் வாரி தரும் நாளாகவே அமைந்து விட்டது இந்த தினம் . முதலில் தனக்கு மட்டும்தான் இப்படி தோன்றுகிறது என்று பார்த்தால், பேஸ்புக்  ட்விட்டர் போன்ற வலைத்தளங்களிலும் திங்கட்கிழமையை நொந்து கொண்டு பலரும் போடும் பதிவுகள் அவளுக்கு ஒன்றை மட்டும்  நன்றாக தெளிவுபடுத்தியது !

" மனிதன் ஓய்வில்லாமல் உழைக்கிறான் .. அவன் ஓய்விற்காக தவமிருக்கிறான் .. தனது ஓய்வை பறிக்கும்  செயல்களையும் நாட்களையும் வெறுக்கிறான் !"

" எதை தான் தேடி ஓடி கொண்டிருக்கிறோம் ? மூன்று வேளை  உணவும் , குடியிருக்க வீடும் , அன்பு செலுத்த உறவுகளும் இருந்தால் போதாதா ? கைகளை வெட்டி , விரல் நகத்தில் அழகு பராமரிக்கும் உலகமடா இது " என்று  சட்டென ஒரு தத்துவத்தை வாய்விட்டு சொன்னவளின் செல்போன் சிணுங்கியது .

" குட் மோர்னிங் அம்மு "

" குட் மோர்னிங் அம்மா "

" எழுந்திரிச்சுட்டியா டா ?"

" ம்ம்ம் இப்போதான்  "

" சரி மறக்காமல் சாப்பாடு கட்டி எடுத்துட்டு போ கண்ணம்மா "

" சரிம்மா "

" ஐ லவ் யூ டா .. பை "

" ம்ம்ம் பை மம்மி "

இதுதான் தினசரி அவள் தாயுடன் தொடங்கும் உரையாடல்! சொல்லபோனால் அடுத்து வரும் நாளை நகர்த்த அவள் தாயின் குரல்தான்  காரணம் ! சிறுவயதிலே தந்தையை இழந்தவள் விஷ்வரூபினி. அந்த குறையை தனது இரு மகள்களுக்கும் தெரியாமல் வளர்த்தவர்  அவரது தாயார். இதற்கு மேலும் அன்னைக்கு பாரமாய் இருக்க கூடாது என்று உணர்ந்தவள் பள்ளி படிப்படிப்பு முடிந்ததுமே கிடைத்த வேலையை செய்துகொண்டு மேற்படிப்பை தொடர்ந்தாள். தற்பொழுது ஒரு நிறுவனத்தில் திட்ட ஒருங்கினைப்பாளராகவும் , பகுதி நேரமாய் உளவியலும் படித்து கொண்டிருக்கிறாள்.

மீண்டும் அவளது எண்ணங்கள் தனது அலுவலகத்தையே நோக்கி பயணித்தது . மூன்று வருடங்கள் கடக்க போகிறாள் , அந்த நிறுவனத்தில் சேர்ந்து ! எனினும் சோர்வு, சலிப்பு இவை இரண்டையும் அவளால் கடந்து வரவே ,முடியவில்லை . " அடுத்தது என்ன ?" என்ற சுவாரஸ்யம் தான் உலகையே முன்னோக்கி சுழலவைக்கிறது . ஆனால் அவளுக்கோ " அடுத்து என்ன பூகம்பம் வருமோ ?" என்ற கவலையில் நிகழ்காலம் வெறுத்துவிடும்.

செயற்கை புன்னகையை முகத்தில் பொருத்தி அன்றைய வேலைகளை மூச்சு முட்ட செய்து முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து  வெளிவந்தவள், மிகவும் சுதந்திரமாய் உணர்ந்தாள்  .. அப்போதுதான் அவள் முகத்தில் உண்மையான  புன்னகை அரும்பியது ..

" அப்பாடா , நாளைக்கு காலை 8 மணி ஆகுற வரை எனக்கும் இந்த கம்பனிக்கு எந்த சம்பந்தமும் இல்லை .. போங்கடா " என்று  அலுவலகத்திற்கு  பழிப்பு  காட்டிவிட்டு பேருந்தில் அமர்ந்தாள்  அவள் .. சில நாட்களாக அவளுக்கு தன்னை யாரோ தொடர்ந்து வருவது போல  ஓர் உணர்வு.. திரும்பி பார்த்தால் செல்போனில் முகம் புதைத்த மக்கள் ! தோளை  குலுக்கி அலட்சியத்தை வெளிப்படுத்தியவள் வெளியுலகத்தை மறந்துவிட்டு கற்பனை உலகில் பயணித்தாள் .. இன்று அவளை  கற்பனை உலகத்திற்கு கொண்டு சென்ற பெருமையை வாங்கியவள் அவளுடன்  பணிபுரியும் தோழி ப்ரனிதா..

ப்ரனிதா , விஷ்வரூபினியை விட ஐந்து வயது மூத்தவள். இன்று அவளுக்கு தனது நிறுவனத்தில் இருந்து விடுதலை .

" ஏன் எங்களை எல்லாம் விட்டுட்டு போகிற ப்ரனி  ?" என்று கெஞ்சுதலாய்  ரூபினி கேட்கவும், ப்ரனிதாவின்  முகத்தில் நாணம் படர்ந்தது ..

" ஏன்னா , இன்னும்  எட்டு மாசத்தில் குட்டி ப்ரனிதா  வரபோகிறாள் .. என்னவர் இனிமேல் நான் வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டார் " என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் முகத்தில் அத்தனை காதல், வெட்கம். !

இந்த ஒரு வாசகம் போதாதா ? நம்ம ரூபினியை கற்பனைக்கு கூட்டிட்டு போக ? உடனே கற்பனை குதிரையுடன் புறப்பட்டாள்  பெண்ணவள் !

"  ஹ்ம்ம் கொடுத்து வைத்த பெண் ப்ரனிதா !அவள் முகத்தில் வேலையை விடுகிறோமே என்ற கவலை கொஞ்சமும் இல்லை ! காரணம் கணவன் ! தன்னை பார்த்து கொள்ள ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் இளைப்பாருகிறாள் ! எனக்கும் கல்யாணம் ஆகிட்டா , முதல் வேலையா இந்த பாழாபோன வேலையை விடனும் .. அதுவும் என் வருங்கால கணவரின் , கைகளை பிடித்து கொண்டு என் பாஸ் முன்னாடி நின்னு , இனி உங்க வேலை  எனக்கு வேணாம் .. நான் ஒரு சுதந்திர பறவை " என்று பறப்பது போல எண்ணி சிரித்து கொண்டாள் .. 

உடனே மீண்டும் ஒரு சிந்தனை அவளது கற்பனைக்கு சடன் ப்ரேக் போட்டது !

தனது அக்கா ! ஒரு மினி நீலாம்பரி தான் அவள் .. ஆனால் திருமணம் முன்பு எதற்கெடுத்தாலும் சட்டம் போடும் சண்டிராணி அவள் .. ஆனால் திருமணம் ஆகிய இரண்டே மாதங்களில் அமைதியின் சிகரம் என்று பெயர் பெற்றவள் ! காரணம் கேட்டால் " உனக்கு கல்யாணம் ஆகி குடும்பம்னு வரும்போது புரியும் ரூபினி " என்பாள் ..

" அப்படின்னா , கல்யாணத்துலயும் சுதந்திரம் இல்லையா ?" மீண்டும் அவள் முகம் விழுந்துவிட்டது .. இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த அவனது முகத்தில் புன்னகை உருவாகியது .. தனக்குள்ளேயே சிந்தித்து கொண்டு நூலகத்திற்குள் நுழைந்தவளின் கண்களில் பட்டான் அவன் !

கையில் இருந்த ஏதோ ஒரு கடிதத்தை சில புத்தகங்களின் நடுவில் வைத்துவிட்டு சென்றான் அவன் ..

" வரவர இவனுங்களுக்கு லவ் பண்ண இடமே கிடைக்கல " என்று  முனகியவளுக்கு தன்னையும் மீறி அந்த கடிதத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது .. அதே உந்துதலில் அவன் மறைத்து வைத்த ஒரு கடிதத்தை பிரித்து படித்தாள் .

ஹாய்  !

இந்த லெட்டர் படிக்க உங்களுக்கு டைம் இருக்குன்னா , நீங்க இன்னமும் மனித இயல்பில் இருந்து மாறாமல் இருக்கிங்கன்னு அர்த்தம் .. ! ஆமா , இப்போ எல்லாம்  நமக்கு பக்கத்துல என்ன நடக்குதுன்னு தெரிந்து கொள்ள நாம ஆர்வம் காட்டுறதே இல்லை ..

சரி நான் விஷயத்துக்கு  வரேன் !

இந்த உலகத்துலேயே அதிகமும் நேசிக்க படுற ஜீவன் யாரு தெரியுமா ? நீங்கதான் !

இந்த உலகத்துலேயே அதிக மனோ தைரியம் கொண்டவர் யாரு தெரியுமா ? நீங்கதான் !

கடவுள் அதிகம் ரசிச்சு படைச்சது  , உங்களைத்தான் !

இந்த உலகம் நீங்க இல்லாமல் நிச்சயம் இயங்காது !

நீங்க இல்லன்னா ,உங்களுக்காக கண்ணீர் விட நிறைய பேரு இருக்காங்க

உங்க குடும்பம், உங்க நண்பர்கள் , உங்ககூட வேலை பார்பவர்கள் இவங்க எல்லாருமே உங்களை சார்ந்துதான் இருக்காங்க ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.