(Reading time: 9 - 18 minutes)

19 முத்தங்கள் - பார்கவி

ரு ஞாயிற்றுக்கிழமை… காலை 6 மணி

‘உன் கவிதை ஆயிரம் பொய் சொல்லும் அன்பே அன்பே..

அது தெரிந்தும் என் மனம் தலையாட்டும் அன்பே

19 muthangalநீ கடந்து போகையில் கரைகின்றேன் அன்பே அன்பே

உன்னை காணும் நொடியெல்லாம் மலர்கின்றேன் அன்பே…’

அழகாக அலரும் அலாரத்தை அணைத்து விட்டு புரண்டு பார்த்தாள். சிறிதும் சலனமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் தன் கணவன் சபரியை பார்த்து புன்னகைத்தாள். அலாரத்தின் பாடல் வரிகள் அவள் மனதில் மீண்டும் ஒரு முறை ஓட, ஒரு புன்னகையோடு தன் காதல்(கடந்த) கால நினைவுகளுக்குச் சென்றாள்.

டிங்…. டாங்… காலிங் பெல்லின் ஒலி அவளை கடந்த காலத்தில் இருந்து இழுத்து வந்தது. “வரேன்.. வரேன்..”, என்று எழுந்து கதவருகே வேகமாக நடந்தாள். கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். “சர்ப்ரைஸ்!” என்று குழந்தைகளுக்கே உரிய அழகுக் குரலில் உற்சாகமாக கத்தினாள் அந்தச் சிறுமி. ஒன்றும் புரியாமல் அமைதியாக நின்று அச்சிறுமியை பார்த்துக் கொண்டிருந்தாள். மௌணத்தைக் களைய அச்சிறுமியே பேசினாள்.

 “கவிதா ஆன்ட்டி இல்லையா?”, என்று சிறு ஏமாற்றத்துடன் கேட்டாள், அந்தச் சிறுமி.

“இல்லை கண்ணம்மா, கவிதா ஆன்ட்டி அந்த வீட்டுள இருக்காங்க”, என்று அடுத்த வீட்டை கை காட்டினாள்.

“என் பேரு கண்ணம்மா இல்லை ஆன்ட்டி, தர்ஷிணி. ஆமா, உங்க பேரு என்ன?” மழலை மாறாத குரலில் பேசினாள் அந்தச் சிறுமி.

“ஓ.கே, ஓ.கே, தர்ஷிணி குட்டி, என் பேரு அபர்ணா. உள்ள வா”, சிரித்துக் கொண்டே தர்ஷிணியை வரவேற்றாள்.

தர்ஷிணி பதில் கூறும் முன்னே அப்பு என்ற குரல் உள்ளிருந்து கேட்க அபர்ணா திரும்பினாள். சபரி நின்றிருந்தான். காலை எழுந்தவுடன் தன் அம்மாவை தேடும் குழந்தையை போல விழித்துக் கொண்டே கதவருகே வந்தான்.

“நீங்க டெடிபேர் வெச்சிருக்கீங்களா ஆன்ட்டி, இருந்தா உங்க வீட்டுக்கு வரேன்” என்றாள் தர்ஷிணி.

“இருக்கு, இருக்கு, நிறைய இருக்கு, வா காட்டறேன்”, என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.

பின்னாடியே வந்த சபரிக்கு தர்ஷிணியை அறிமுகப்படுத்தினாள். இருவரும் ஏதேதோ பேச ஆரம்பித்தனர். சபரியோடு ஒட்டிக்கொண்ட தர்ஷிணியை பார்த்துக்கொண்டே பொம்மை எடுக்கச் சென்றாள் அபர்ணா.

பொம்மைகளோடு சபரியும் தர்ஷிணியும் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டு கவிதாவை பார்க்க வேண்டும் என்று தர்ஷிணி கூற அவளை அங்கு அழைத்துச் சென்றனர் அபர்ணாவும் சபரியும்.

வீடு திரும்பியதும் சமையல் வேளையில் மூழ்கினாள் அபர்ணா.

அபர்ணா. அழகும் அமைதியும் இவளை நன்கு விவரிக்கும். அமைதி என்றால், புயலுக்கு முன் வருமே, அப்படி ஒரு அமைதி. அப்போ புயல் எப்போ வரும்னு யோசிக்காதீங்க! அது அவள் வீட்டில் இருப்பவரோடு மட்டுமே வரும். நண்பர்களோடும் உறவினரோடும் கூட வராது. எப்போதும் அவள் முகத்தில் ஒரு புன்னகை இருந்து கொண்டே இருக்கும். அவளுக்கு ஒரு தம்பி, விக்னேஷ். அபர்ணாவிற்கு தனியார் வங்கியில் வேளை. கணவன் சபரி சாஃப்ட்வேர் இன்ஜினியர். சபரி எப்போதும் கலகலப்பாக இருப்பான். அவன் நண்பர்கள் கூட அவனைப் போலவே வாயாடுவார்கள். ஏனோ அபர்ணாவின் அமைதி அவனை ஈர்த்தது. அதனால் அவளை பார்த்ததும் அவனுக்கு பிடித்திருந்தது.

இப்போது இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு செல்வது, கோவில்களுக்கு செல்வது என்று விடுமுறை நாட்கள் நிமிடங்கள் போல ஓடின. ஒருவாராக இப்பொழுது தான் ஒய்வினை கண்டிருக்கின்றனர். வார நாட்களில் வேலை வேலை என்றே ஓடி விடும். சனி ஞாயிறுகளில் வீட்டில் இருப்பது இருவருக்கும் பேரானந்தம்.

“டிஃபன் ரெடி, வாங்க சாப்பிடலாம்”.

தன் அலைபேசியை நோண்டிக் கொண்டே மெதுவாக படியிரங்கி வந்தான் சபரி.

“பத்து நிமிஷம் அப்பு”.

“ப்ச்ச், என்னங்க இது? ஆறிடும்ல, வாங்க” கெஞ்சலாக கூறினாள்.

அலைபேசியை கீழே வைத்துவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான். அவளைப் பார்த்ததும் அவனுக்கு தானாக சிரிப்பு வந்தது. சிரித்தும் விட்டான். ஒரு இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“என்ன? இப்போ வரப் போறீங்களா, இல்லையா?”

“ஹஹ்ஹா! அப்பு என்னடி இது அதிசியம்? உனக்கு மொறைக்க கூட தெரியுமா? உன்ன மொதமொதலா பார்த்தப்போ எப்புடி அமைதியா இருந்த, இப்போ மட்டும் என்ன இது புதுசா?”

பேசிக்கொண்டே டைனிங் டேபிளை நோக்கி வந்தான்.

“விக்கி உங்ககிட்ட எதும் சொல்லலையா?” என்று கண் சிமிட்டினாள். அவள் புன்னகையில் ஒரு குறும்புத்தனத்தை உணர்ந்தான் சபரி.

“இல்லையே, நாங்க நிறைய பேசினோம், ஆனா உன்னை பத்தி எதுவும் சொல்லல.”

“பயமுறுத்த வேணாம்னு விட்டுருப்பான்.” என்று கூறிவிட்டு மீண்டும் புன்னகைத்துக்கொண்டே இருவருக்கும் உணவு எடுத்து வைத்தாள்.

சாப்பிட்டு முடித்து இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்தனர். அவனுக்காக செய்து வைத்த ரஸகுல்லாவை எடுத்து “சர்ப்ரைஸ்” என்று கூறிக்கொண்டே கொடுத்தாள்.

“வாவ், தேங்க்ஸ் பேபி”. அதை வாங்கிக்கொண்டே அவளை முத்தமிட்டான்.

வெட்கத்தில் குனிந்து கொண்டாள்.

”எனக்குத் தெரியாம எப்போ செஞ்ச?”

“நேத்து தான், சாயங்காலம்” குனிந்தவாறே பதில் கூறினாள்.

“அப்போ, நீயே மொதல்ல சாப்பிடு.”

திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்த்தாள்.

“ம்ம்ம், வெட்கம் போய்டுச்சானு பார்க்கத்தான்.” அவன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் கொடுத்தான். அதன் சுவையை பாராட்டவும் செய்தான்.

இருவரும் வெளியே இருந்த நாற்காளியில் அமர்ந்து அவரவர் வேலை பற்றி பேச ஆரம்பித்தனர்.

நாக்கில் நின்ற ரஸகுல்லாவின் சுவை போல அபர்ணா முறைத்தது சபரியின் மனதில் இனிப்பாய் இனித்தது.

தன் அலைபேசியின் அலைப்பொலி கேட்டு எழுந்தாள் அபர்ணா. மாடியிலேயே விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மா அழைப்பதை உணர்ந்து புன்னகைத்துக்கொண்டு மெதுவாகவே நடந்தாள்.

அலைபேசி அருகில் இல்லை. எப்படியும் அந்த அழைப்பை அபர்ணாவால் ஏற்க முடியாது என்று உணர்ந்த சபரிக்கு ஒரு குறும்புத்தனம் தோன்றியது.

சட்டென்று எழுந்தான். மாடிப்படிக்கு முன் சென்று அவளுக்கு வழி விடாமல் நின்றான் ஒரு விஷமப் புன்னகையோடு.

“ப்ச்ச், விடுங்க, அம்மா தான் கூப்புடறாங்க, அட்டெண்ட் பன்னலைனா பதறிப்போய்டுவாங்க.”

“அதெல்லாம் இல்லை. நம்ம டிஸ்டர்ப் பன்றோமோன்னு நினைச்சு அத்தை மறுபடி கால் பண்ண கூட மாட்டாங்க.”

“சரி, வழி விடுங்க” அவன் கைகளை அகற்ற முயன்றவாறு கூறினாள்.

“எங்க போற? நான் உனக்கு வழி விடனும்னா ஒரு வேலை செய்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.