(Reading time: 9 - 18 minutes)

ம்ம்ம்? சரி சொல்லுங்க” என்றாள், கண்கள் மிண்ண.

“நான் குடுத்த ஸ்வீட் பத்தி நீ எதுமே சொல்லல?”

அவனை கேள்வியோடு பார்த்தாள். ஒரு நொடியும் தாமதிக்காது “ஸ்வீட் கொடுத்தது நானு. நீங்க என்ன இப்படி கேக்கறீங்க?”

“அட ட்யூப்லைட்டே!” சலித்துக் கொண்டது போல நடித்தான். ‘இவளுக்கு நிஜமாவே நான் கேட்டது புரியலையா’ என்று நினைத்தான்.

அவனது சலிப்பில் வெற்றி கொண்டதை எண்ணி நகைத்தாள். “சரி சரி, சீக்கிரமா அதே மாதிரி தரேன். இப்போ வழி விடுங்க” கொஞ்சம் வேகமாகவே அவன் கைகளை இழுத்தாள். அவன் பிடியை விடவில்லை.

“அடி கள்ளி! நல்லாவே நடிக்கற. சரி, நல்லா கேட்டுக்கோ. நீ எனக்கு புடிச்ச மாதிரி எதாச்சும் செய், நான் விட்டுடறேன்.”

“என்ன விளையாட்டு இது, சபரி? நான் வேணும்னா உங்க ஸ்வீட்ட திருப்பி தரேன்” என்று கூறி கண்ணடித்தாள்.

“ம்ம்ம்… கொஞ்சம் சம்மதம்.”

பட்டும் படாமல் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.

அது முடிவென்று நினைத்த அவளுக்கு அது தான் ஆரம்பம் என்று தெரியவில்லை.

தன் கைவிரல்களை பார்த்துக்கொண்டே பேசினாள்; “இப்போ விடுங்க.”

‘இவளுக்கு எங்கிருந்து தான் வெட்கம் வருமோ?’, எண்ணியபடியே ஒரு படி மேலே ஏறினான்; வழியை மறித்துக்கொண்டே.

“இப்போ என்ன செய்யனும்?” சிணுங்கினாளா பேசினாளா என்று அவனுக்கு புரியவில்லை.

மறு கன்னத்தைக் காட்டினான்.

முத்தமிட்டாள்.

இன்னொரு படி ஏறினான்.

“ரஸகுல்லா செஞ்சு கொடுத்தேனே, விடக்கூடாதா?”

“நல்ல பாய்ண்ட், ஓ.கே.”

இன்னொரு படி ஏறினான்.

“மறுபடியும் சொல்றேன், எனக்கு புடிச்ச மாதிரி எதாச்சும் செய், நான் விட்டுடறேன்.”

“உங்ககிட்ட புடிச்ச விஷயங்கள் சொல்றேன்.”

“சொன்னா மட்டும் போதாது.” அவள் புரிந்துகொண்டாள்.

“ம்ம்ம், சரி கேட்டுக்கோங்க. அப்போ ஒரு நாள், எனக்கு மழைல நனைய புடிக்கும்னு எனக்காக மழைல நடந்து வந்தீங்களே, அதுக்கு..” ஒரு முத்தமிட்டாள்.

ஒரு படி ஏறினான்.

“நான் சோகமா இருக்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து சமாதனப்படுத்துவதுக்கு.” அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

இன்னொரு படி ஏறினான்.

“நியூஸ்பேப்பர் படிக்கிற மாதிரி நடிச்சுட்டு என்னையே நோட்டம் விடுவீங்களே, அதுக்காக ஒன்னு..”

“இதெல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி தான் இருக்கியா? இதுல என் தப்பில்லை, எனக்கு லைசென்ஸ் இருக்கு. ம்ம் ம்ம்ம் கன்டின்யூ…”

இன்னொரு படி ஏறினான்.

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட ப்ரண்ட்ஸ பாக்க கூட்டிட்டு போனீங்களே, அதுக்கு..” மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ம்ம்ம்” தலையாட்டிக் கொண்டே இன்னொரு படி ஏறினான்.

“விக்கி கிட்ட நீங்க என்ன பத்தி கேட்டதுக்கெல்லாம்” முத்தமிட்டவாறே அவன் தலையில் ஒரு கொட்டும் வைத்தாள்.

“அடிப்பாவி! உன்னை என்னவோனு நெனச்சேன். இரு இரு. விக்கிய புடிக்கறேன் மொதல்ல.”

தலையைத் தேய்த்துக் கொண்டே இன்னொரு படி ஏறினான்.

“மாசாமாசம் நீங்க குடுக்கற சர்ப்ரைஸ்க்கு ஒன்னு”, வழியை மறித்திருக்கும் கைக்கு ஒரு முத்தமிட்டாள்.

நிலைகொள்ளவில்லை சபரிக்கு. அவளது செய்கைகளில் தத்தளித்துத்தான் போனான்.

இன்னொரு படி ஏறினான்.

அவன் கீழே விழாமல் இருக்க அணைத்துக் கொண்டாள். இருவரும் சிறு பிள்ளைகளைப் போல சிரித்தனர்.

இன்னொரு படி ஏறினான்.

பாதி தூரத்தை கடந்ததால் வெற்றியை புன்னகையில் காட்டினாள்.

“இப்போ கிஸ் இல்லை” அருகில் இருந்த பூந்தொட்டிக்குள் கையை விட்டு எதையோ எடுத்தாள். அவனிடம் நீட்டினாள்.

அவன் வழியை மறித்துக்கொண்டே அதை வாங்கினான். அழகான சின்ன பரிசு.

“பிரிச்சுப் பாருங்க.”

“இப்போ வேணாம், ஆனா இத எப்போ செட் பண்ணின?”

“நெறைய கேள்வி கேட்கறீங்க சபரி. இன்னைக்கு குடுக்கலாம்னு தான் வெச்சிருந்தேன்.”

வெள்ளை ரிப்பனையும் மிண்ணும் சிவப்பு கவரையும் பிரித்தான். உள்ளே அழகான புறாக்கள் இரண்டு தங்களுடைய குட்டிப் புறாவை பார்த்துக்கொண்டிருந்தன. அவன் அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

அபர்ணா நினைத்திருந்தால் அவனை இப்போது விலக்கிவிட்டு ஓடியிருக்கலாம். ஆனால் அவளுக்கு அவ்வாறு செய்ய மனம் விடவில்லை. அவனை ரசித்துக் கொண்டே அவளும் மெய்மறந்து நின்றாள்.

மெதுவாக அடுத்த படி ஏறினான் சபரி.

“பாதி தூரம் வந்தாச்சு, இப்போ இருந்து நீங்க பேசுங்க, பேச மட்டும் தான் பர்மிஷன்” மிரட்டும் பார்வையோடு அபர்ணா பேசினாள்.

உரிமை உள்ளவரிடம் தானே உண்மையான குணங்கள் வெளிப்படும். அவ்வாறு தான் அபர்ணா இன்று சபரியிடம் நடந்து கொண்டாள்.

ஆனால் சபரி இன்று தன் இயல்பு நிலையில் இல்லை. ஆபர்ணாவின் காதல் மழையில் உயிர் வரை நனைந்திருந்தான். அவனிடம் பேச வார்த்தை இல்லை.

இரு கைகளில் அவளைத் தூக்கினான். ஒவ்வொரு படி ஏறுகையிலும் ஒரு முத்தமிட்டான்.

கடைசி படியை அடைந்தான் சபரி.

“சரி, இன்னும் ஒரு படிக்கட்டு தான் இருக்கு, நான் ஒரு கேள்வி கேட்கிறேன், உனக்கு எது வேணும் சொல்லு, பிங்க் ஆர் ப்ளூ?”

“நீங்களே சொல்லுங்க” இப்போது அவளது வெட்கம் உச்சநிலைக்கு போயிருந்தது.

“ம்ம்ம், மொதல்ல பிங்க் அப்பறம் ப்ளூ, ஓ.கே வா?” சபரி மெதுவாக பேசினான்.

அங்கு பேச்சிற்கு எல்லாம் இடம் இல்லை. அவன் கேட்காமலே அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

அவர்களுக்கு இடையில் சிக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது காற்றிற்கு. அதன் உயிர் காக்க வந்தது அலைப்பு மணி, வாசற் கதவில்..

டிங்…டாங்..

விலகியதும் இருவருக்குள்ளும் ஒரே கேள்வி…

‘நம்ம வீட்டுல ஏன் 19 படிக்கட்டுகள் தான் இருக்கு?’

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.