(Reading time: 17 - 33 minutes)

களாக்டிக் காதல் - விசயநரசிம்மன்

த்தனை அன்பு வெச்ச உங்க காதலை என்னால ஏத்துக்க முடியலயேனு நினைச்சா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு, ஆனா அதான் உண்மை!”

கடந்த ஒரு வாரமாய் எங்கெங்கோ அலைந்து, என்னென்னவோ செய்து கண்டவுடன் காதலில் விழுந்த அந்தப் பெண்ணுக்காக இத்தனை தொலைவு வந்தால், ‘காதலை ஏற்க முடியாது’ என்று அவள் அழுதுகொண்டே சொன்னதும் நொறுக்கிப் போனான் பிளாஸ்மோன். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றான் நண்பன் நியுட்ரினோன்.

வ கண்ணழகு ஒன்னு போதும்டா, அதுக்கே ஆயிரம் கிரகத்தை அவ பேருக்கு எழுதி வைக்கலாம்..” கனவில் மிதப்பவனைப் போலக் கண்கள் கிறங்கியபடி சொன்ன பிளாஸ்மோனை முறைத்துக் கொண்டிருந்தான் நியூட்ரினோன். அவர்கள் இருந்த கப்பல் விண்வெளியில் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது.

Galactic kathal“நாண்பா, உன் பேச்சே சரியில்ல! எக்கச்சக்கமா ஜேவ் அடிச்சிருக்க போல? கண்ட கண்ட கிரகத்துல கண்டவளையும் பார்த்துட்டு வந்துட்டு உளறிட்டு இருக்க..” ‘கண்டதை’ என்று சொல்ல வந்ததை நல்ல வேளையாக ‘கண்டவளை’ என்று மாற்றிக் கொண்டான் நியூட்ரினோன்.

“இல்ல ந்யூட்... என் கூட நீயும் வெளின்சுல இருந்திருக்கனும்! அவகிட்ட ஏதோ ஒன்னு… பார்த்ததுமே என் ந்யூரான்கள்ல பொறிதட்டிச் செல்கள்லாம் பத்தி எரிய தொடங்கியாச்சு..” உட்காராமல் குறுக்கும் நெடுக்குமாக நிலை கொள்ளாது நடந்து கொண்டிருந்தான்.

”ந்யூரான்ல பொறி, செல்கள்ல தீ… கொஞ்சம் இரு, கவிதை கிவிதை எழுதுறியா? தயவு செஞ்சு அந்தக் கன்றாவியலாம் இங்க கொண்டு வராத நண்பா…”

நான்கு கண்கள், மூன்று தனங்கள், இரண்டு கைகள், ஒரு கால் இருக்கும் ஒரு ஜந்துவை, மன்னிக்கவும், ‘பெண்ணை’க் காதலிக்கிறேன் என்று உயிர் நண்பன் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்தச் சிக்கலில்தான் இருந்தான் நியூட்ரினோன்.

“வெளின்சுக்குலாம் போனாலே இதான் சிக்கல்.. நீ போன வேலை என்ன? வளிமண்டலத்தை அலசிட்டு வரது, அதமட்டும் பண்ண வேண்டியதுதான? எதுக்கு கண்ட இடத்துக்குலாம் போன? ஜேவ் மாதிரி கண்ட கண்ட திரவத்தைலாம் குடிச்ச? எதையோ எவளையோ பார்த்துட்டு வந்து இப்படி பேத்தணும்! ம்?” கடந்த இரண்டு மணிநேரத்தின் மொத்த எரிச்சலையும் கொட்டித் தீர்த்தான் நியூட்ரினோன்.

”இங்க பார், அது இதுனுலாம் பேசாத... வயித்த கிழிச்சு மூளைய உருவிடுவேன்...” பிளாஸ்மோன் சட்டென தெளிந்தான்.

“அமைதி அமைதி” நியூட்ரினோன் சற்றே பின்வாங்கினான்.

“கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாரு, அவ(ள்னே வச்சுக்குவோம்) எந்த நட்சத்திர மண்டலம், எந்த கிரகம், அவ உடலியல் என்ன உயிர்வேதியல் கூறுகள் என்னனு எதாவது தெரியுமா உனக்கு? கிரகம் விட்டு கிரகம் போய் காதலிச்சாலே ஆயிரம் சிக்கல், இதுல நீ மண்டலம் விட்டு மண்டலம் போறேங்குற... நியாயமாடா?”

“நீ சொல்றதும் சரிதான் ந்யூட்...” பிளாஸ்மோன் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதை நிறுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தான், “என் பக்கத்தையும் கொஞ்சம் பாரு... நான் ஒன்னும் ஹார்மோன் தூண்டுதல்ல துள்ற சின்னப் பையன் கிடையாது... நானும் ஒரு விஞ்ஞானிடா... நிதானமாத்தான் காதல்ல விழுந்தேன்!”

மூன்று நாட்கள், ஆறுகோடி கிலோமீட்டர்களுக்கு முன்…

வெளின்சு. பரிதோ நட்சத்திரத்தின் கடைசி கிரகம். பிளாஸ்மோனின் கிரகமான புவின்சு கிரகத்தைப் போல அத்தனை வளர்ச்சியடையாதது. மண்டலத்தின் கடைசி கிரகமாக வெளிப்புறத்தில் இருப்பதால் அதன் மிக முக்கிய துறைமுகமாக விளங்குவது. பல்வேறு நட்சத்திர மணடலங்களின் பலப்பல கிரகங்களிலிருந்தும் பல்வகைப்பட்ட மனிதர்கள் (ஜீவராசிகள் என்றால் இன்னும் பொருந்தும்) வந்து செல்லும் இடம், அதில் பலர் இங்கேயே தொழிலமைத்துக் கொண்டு தங்கவும் தொடங்கிருந்தனர். நல்லதா கெட்டதா எனச் சொல்ல முடியாத ஒரு கலவையான வாழ்வியலைக் கொண்ட கிரகம்.

வெளின்சின் வளிமண்டலத்தை அலச வேண்டும் என்ற போது அங்கு செல்ல புவின்சின் விஞ்ஞானிகள் பலரும் தயங்கினர். ஒருவித கலாச்சார முட்டுக்கட்டை தடுத்தது அவர்களை. ஆனால் பிளாஸ்மோன் எதிலுமே வித்தியாசத்தை விரும்புபவன். எதிர்ப்பாராததை எதிர்ப்பார்க்கும் இயல்பினன். ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால் போக வேண்டும் என்றாலும் ஆனந்தமாய்க் கிளம்பிவிடுவான். ஆறு கோடி கிலோமீட்டர் ஒரு பொருட்டா அவனுக்கு?

வெளின்சுக்கு வந்த முதல் இருபது மணிநேரத்தைத் தூங்கியே கழித்தான். ஒளியை விட வேகமாய் கிரகம் விட்டுக் கிரகம் ‘தாவும்’ விண்கப்பல்களில் பயணித்தால் இது தேவை. சூரியனுக்கு நான்காவதாய் இருக்கும் புவின்சுக்கும் எட்டாவதாய் இருக்கும் வெளின்சுக்கும் தட்பவெட்ப, ஈர்ப்புவிசை, வளிமண்டல அழுத்தம், நாள் அளவு என்று எத்தனையோ வேறுபாடு இருக்கிறதே, அதற்கெல்லாம் பிளாஸ்மோனின் உடல் பழக வேண்டாமா?

தூங்கியெழுந்த இரண்டு மணிநேரத்திற்குள் கிரகத்தை ஒரு சுற்று சுற்றித், தீர்மாணிக்கப்பட்ட இடங்களில் வளிமண்டலத்தை அலசும் பொறிகளை வைத்துவிட்டு வந்தான். அடுத்த இருபது மணிநேரத்திற்கு அவை தமது வேலையைச் செய்து கொண்டிருக்கும். அதுவரை இவனுக்கு ஓய்வுதான். வெளின்சைச் சுற்றிப் பார்க்கலாம்.

வெளின்சு புவின்சைவிட சிறிய கிரகம். ஆனால் அடத்தி அதிகம். ஏறத்தாழ புவின்சுக்குச் சமமான ஈர்ப்புவிசைதான். வளிமண்டலமும் கிட்டத்தட்ட அப்படித்தான். சற்றே உயிர்வாயு அதிகம். வெளின்சுவாசிகள் நல்ல திடகாத்திரர்களாக இருப்பர். ஆனால் அவர்களது பார்வைத்திறன் சிவப்பு, அகச்சிவப்பு பட்டைகளில்தான் நன்கு இயங்கும். புவின்சு மக்களின் பார்வைத்திறன் ஊதா முதல் சிவப்பு வரை – சூரியனின் தொலைவு காரணம்!

வெளின்சில்தான் தோல்வெளுத்த அதன் பூர்வகுடிகளைக் காண்பதே அரிதாகி வருகிறதே! வந்தேறிகளும் வியாபாரிகளும் சுற்றுலாப் பயணிகளும்தான் அதிகம். எனவே வெளின்சு பிளாஸ்மோனுக்கும் பலவகையில் உற்சாகமூட்டியதில் வியப்பில்லைதான்!

சுற்றிக் களைத்து ஒரு இசையரங்கின் அரையிருட்டில் ஓரமாய் அமர்ந்து ‘க்ளேவ்’ என்ற மதுபானத்தைச் சுவைத்தபடி அமர்ந்து அரங்குக்கு வருவோர் போவோரைக் கவனித்துக் கொண்டிருந்தபொழுதுதான் ‘அவளை’க் கண்டான் பிளாஸ்மோன்..

முதல் பார்வைக்கு அவளும் புவின்சுவாசியைப் போலத்தான் தோன்றினாள், ஒரே ஒரு தலை, கொஞ்சம் நீண்ட கழுத்து, மார்பகம், இடை, கால்கள்… கால்கள்? இல்லை, ஒன்றுதான் இருந்தது! அதையும் ‘கால்’ என்று சொல்லிவிட இயலாது. நீண்டு, வளைந்து பாம்பின் வாலையும் மீனின் வாலையும் குழைத்தது போல ஒரு அமைப்பு. பிளாஸ்மோனைப் போல மூன்று கைகள் இல்லை அவளுக்கு, இரண்டுதான்! அழகான முகம், அதைவிட அழகான கண்கள்…

அகன்று குளிர்ந்த கண்கள். நான்கு கண்கள்! பிளாஸ்மோன் மீண்டும் கொஞ்சம் கவனித்துப் பார்த்தான். காற்றில் அலைந்த கேசம், காற்றில் அசையவில்லை என்று புரிந்தது. அவை ஒரு வகை டெண்டகின்ஸ் போல தானாக நெளிந்து கொண்டிருந்தன. அவள் தலையைத் திருப்பும் பொழுதெல்லாம் சாட்டை போல ஒரு விசுறு விசிறிவிட்டு விழுந்தன. பிளாஸ்மோனின் உள்ளத்தைக் கட்டிப்போட்டன. மூன்று மார்பகம், ஒரு கூர்மையான நாசி, அழகிய சிறிய வாய், நான்கு கண்கள்! திசைக்கு ஒன்றாய் தலையைச் சுற்றி நான்கு கரிய, பெரிய விழிகள். பிளாஸ்மோனின் பார்வை ஃபோட்டான்களை முழுங்கிய கறுப்புக் குழிகள்!

சூரியனைத்தான்

நிலவுகள் சுற்றிவரும்,

அன்பே உன்

முகநிலவைச் சுற்றுகின்றனவே

விழிச் சூரியன்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.