(Reading time: 17 - 33 minutes)

ளிமண்டல தகவுகளுக்குப் பதில் இக்கவிதையை அனுப்பிவிட்டான் புவின்சுக்கு! அங்கிருந்து அடித்து பிடித்து பதில் அனுப்பினார்கள் இவன் உடல்-மனநிலையை விசாரித்து! கவிதை புரியாத கிறுக்கர்கள். சரியாக இருப்பத்தைந்தாவது மணிநேரத்தில் நியூட்ரினோன் வந்துவிட்டான், இவனையும் கருவிகளையும் அள்ளிக்கொண்டு போக…

”டேய், பிளாஸ்… டேய்..” பிளாஸ்மோனை மீண்டும் இயல் உலகிற்கு இழுத்து வந்தது நியூட்ரினோனின் குரல், “சொல்றத புரிஞ்சுக்கோ பிளாஸ், காதலே சிக்கல்தாண்டா அதுலையும் நீ வேற்றுகிரகப் பெண்ணைக் காதலிக்குறேங்குற இதெல்லாம் சரிப்படுமா? செம கழுத்தறுப்பு டா!” பிளாஸ்மோனை மீண்டும் கிளறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் நிதானமாகச் சொற்களை அளந்து அளந்து பேசினான் நியூட்ரினோ.

“இல்லை நண்பா! அவளோட அந்த நான்கு கண்கள், நீண்ட கழுத்து, கூர்மையான நாசி.. எல்லாமே.. எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு! இதோ பார்-” ஏதோ சொல்ல வந்த நியூட்ரினோனைச் சட்டெனக் கைக்காட்டி நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான், “நான் போதைல உளறல, அது உனக்கே தெரியும்! விண்கப்பல்ல ஏத்துறத்துக்கு முன்னாடி என்னை உள்ளயும் வெளியயும் துப்புறவா கழுவித்தானே ஏத்தின? சொல்றதைக் கேளு, இதைவிட தெளிவா நான் இருந்ததே இல்ல, எனக்கு அவதான் துணைவி, இதுல மாற்றமே இல்லை!”

பிளாஸ்மோனின் கண்களில் ஒளிர்ந்த உறுதி நியூட்ரினோனை அச்சுறுத்தியது.

புவின்சுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் ‘அவளை’ப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் திரட்டிவிட்டான் பிளாஸ்மோன். ‘ஹைலியத்’ என்ற நட்சத்திர மண்டலத்தின் மூன்றாவது கிரகமான ‘சீரஸ்’ என்பதுதான் அவளின் தாய்வீடு. அங்கிருந்த ஒரு வகை நீர்நில வாழ் (ஆம்பியன்) உயிரினத்தில் இருந்து பரிணமித்தவர்களே ‘அவ’ளின் மூதாதைகள். இன்றைக்கு அக்கிரகத்தின் உயரிய இனம் அவர்களுடையதே. அண்டைக் கிரகங்களின் உதவியுடந்தான் அவர்களது தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது.

நியூட்ரினோனின் கணிப்பு சரியாகவே இருந்தது, இவனுக்கும் அவளுக்கும் உயிர் வினைப்பொருத்தம் இல்லை!

பிளாஸ்மோன் இத்தோடு இதை விட்டுவிடுவான் என்று எதிர்பார்த்த நியூட்ரினோன் ஏமாந்து போனான். இத்தகவல்களைத் திரட்டிய இரண்டு நாட்களுக்குள்ளேயே அவன் வேறொரு தகவலையும் கண்டு பிடித்திருந்தான்.

“டேய் விளையாடத டா! இதெல்லாம் சாத்தியமே கிடையாது..” நியூட்ரினோன் விண்வெளி உடையின்றி வெட்டவெளியில் மிதப்பது போல வெளிறிக் காணப்பட்டான்.

“விளையாட்டே இல்ல ந்யூட்! நான் ஆரம்பத்துலேர்ந்தே தெளிவாத்தான் இருக்கேன், நீதா நம்ப மறுக்குற..” பிளாஸ்மோன் ஆசுவாசமாக அமர்ந்து ஒரு வெளிர்மஞ்சள் திரவத்தைப் பருகியபடி பேசினான், “செனோபில்-னு ஒரு கிரகம் இருக்கு, அங்கதான் இதைப் பண்றாங்க, செலவும் கம்மிதான், ஹைப்பர்-ஜம்ப் அடிச்சா நாலே மணிநேரத்துல போயிடலாம், ஒரே நாள்ல திரும்பி வந்துடுவேன், புது ஆளா, புது இனமா...” மெல்ல நியூட்ரினோனை ஒரு முறை ஊடுருவி பார்த்தான், “அவ இனமா!” என்று அழுத்தமாக முடித்தான்.

“இன மாற்றம்லாம் சாத்தியமே இல்லடா! படிக்காத முட்டாள் மாதிரி உளறாத... நம்ம மூலக்கூறு என்ன, அவ மூலக்கூறு என்ன? எப்படி நீ இதுலேர்ந்து அதுக்குப் போவ? ஒன்னு ரெண்டு உறுப்பை மாத்துறதுனா சரி, அடிப்படை உயிரியலையே எப்படி டா மாத்த முடியும்?”

‘முடியும்’ என்று செனோபில் சென்றதும் தெரிந்து கொண்டார்கள். செனோபில் செல்ல வேண்டா வெறுப்பாகத்தான் ஒத்துக்கொண்டிருந்தான் நியூட்ரினோன். அங்கே சென்று ‘இன மாற்று சிகிச்சை’ எல்லாம் சுத்த ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டால் பிளாஸ்மோன் தானாக வழிக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்தான் வந்திருந்தான் அவன்.

ஆனால் இருவருக்குமே பெரிய பெரிய ஆச்சரியங்கள் காத்திருந்தன செனோபில் கிரகத்தில். செனோபில்-லை வர்ணிப்பது கொஞ்சம் கடினம். அதன் பல அம்சங்கள் செயற்கையானவை. பேரண்ட அளவில் ஒரு தொழில்நுட்ப சந்தையாக விளங்கியது அது. ’இன மாற்று’ என்பதை விட ‘கூடுவிட்டுக் கூடு பாய்தல்’ என்பது பொருத்தமாக இருக்கும். நியூட்ரினோன் சொன்னதைப் போல ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனத்திற்கு ஒரு உயிரை மாற்றுவதெல்லாம் ரொம்ப சிக்கலான வேலை. ஆனால் அவர்கள் அதை எளிமையாக்கி விட்டிருந்தனர்.

நீங்கள் மாற விரும்பும் இனத்தில் ஒரு செயற்கை உடலைச் செய்து ‘உங்களை’ அந்த உடலுக்குள் செலுத்திவிடுவர். அவ்வளவுதான்! அந்த க்ளோனை வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உங்களுக்கு உண்டு! இதைவிட வேறென்ன வேண்டும்? பிளாஸ்மோன் உடனே தயாரானான், நியூட்ரினோன் செய்வதறியாது நின்றான்.

”திருவாளர் பிளாஸ்மோன், நீங்க இந்த செயல்முறையையும் அதன் பின், பக்க, எதிர் விளைவுகளையும் நன்றாக புரிந்து கொண்டு உங்கள் முழு சுயநினைவோடு, நல்ல மனநிலையில் தானே இதற்கு உடன்படுகின்றீர்கள்?” எந்திரத்தனமாக கேட்டான் சித்தமன். ‘இனமாற்ற’ சிகிச்சைக்காக பிளாஸ்மோனுக்கு என்று தனியாக அமைக்கப்படிருந்த மருத்துவ தொழில் நுட்ப கலைஞன் தான் சித்தமன். அவன் மனிதனா எந்திரமா என்றே கண்டுபிடிக்க இயலாமல் இருந்தது. அவன் கேட்ட விதமே அச்சுறுத்தியது இருவரையும்.

“சித்தமன், என்னங்க பின், பக்க, எதிர்-னு அடுக்கிட்டே போறீங்க.. எதுக்கும் எது என்னனு கொஞ்சம் நீங்களே விளக்கமா சொல்லிடுங்களேன்..” நியூட்ரினோன் கெஞ்சாத குறையாக கேட்டான், பிளாஸ்மோன் எதைப் பற்றியும் கவலை இல்லை என்பவனைப் போலக் கவிதை யோசித்துக் கொண்டிருந்தான்,

[ஒற்றைக் காலில் நிற்கின்றீர் இருவரும்,

பின் பூவுக்கும் உனக்கும்

என்னடி வேறுபாடு?

அது வாசம்,

நீ என் சுவாசம்..

(நியூட்ரினோனிடம் சொல்லிவிடாதீர்கள்!)]

“பச்! என்னங்க, இது ஒரு வேலையா எனக்கு? அது எல்லாம் அந்த அறிமுக காணொலியிலேயே இருக்கே, பார்க்கவில்லையா நீங்கள்?” சித்தமன் அலுத்துக்கொண்டது அவன் மனிதன் தான் என்று தோற்றியது.

“அது வளவளனு போகுதுங்க! பொறுமையில்ல..”

“சரி சரி! பெரிதாய் ஒன்றுமில்லை, ஒரு உடலிலிருந்து ஒட்டு மொத்தமாக வேறு அமைப்புள்ள இன்னொரு உடம்பிற்குள் போகையில் நிறைய மனரீதியான சிக்கல் வரும். பிறந்ததுமுதலாய்ப் பழகிவிட்ட ஒரு அமைப்பிலிருந்து திடீர் என்று புதிதாய் ஒரு அமைப்பிற்குள் போவதும், அதற்குப் பழகுவதும் எளிமையான விஷயம் அல்ல. ஆனால் அவ்வளவு கடினமும் அல்ல...” சற்று நிறுத்தி இருவரையும் ஒருமுறை நிதானமாகப் பார்த்தான்.

“எடுத்துக்காட்டாய், இப்போது உங்கள் உடலில் மூன்று கைகள், இரண்டு கால்கள் இருக்கின்றன, ஆனால் உங்கள் நண்பர் ஏற்க விரும்பும் உடம்பிக்கு இரண்டே கைகள், ஒரே ஒரு கால்தான் – சட்டென்று இந்த ஒரு கை ஒரு கால் இழப்பை மனம் பழகிக்கொள்ளுமா? அதுமட்டுமில்லை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் பரிணாம வளர்சி வேறு வேறு நிலையில் இருக்கும், நீங்கள் அவர்களைவிட கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகள் முன்னேறிய உயிரினம், அந்த உடலின் மூளையின் செயல்திறன் சற்று குறைவு... 64 புள்ளி கணினியை 32 புள்ளி வன்பொருளில் போட்டது மாதிரி இருக்கும், இதனால என்னென்ன உளவியல் சிக்கல்கள் வரும் என்று துல்லியமாகச் சொல்ல இயலாது…”

சித்தமன் சொன்ன எதையும் காதில் வாங்க பிளாஸ்மோன் தயாராக இல்லை, அவன் நீட்டிய கையொப்பக் கருவியில் தன் ரேகைகளைப் பதித்து ஒப்பந்தத்தை நிறைவேற்றவே குறியாய் நின்றான். நியூட்ரினோன் கவலையில் மூழ்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.