(Reading time: 10 - 20 minutes)

உயிரே உயிர் நோகுதடி - கீர்த்தனா

காலை வேளை எப்பொழுதும்போல் தான் விடிந்தது. ஆனால் அந்த இரு உள்ளங்களில் பொங்கிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியை யாராலும் அறுதியிட்டு சொல்ல இயலாது. ஏனெனில் இன்று அவர்களின் வாழ்வில் முக்கியமான நாள். வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் நாள்.

மனதில் பிரவாகமாய் பொங்கிய மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க, அழகிய பிங்க் நிற புடவை அவள் அழகுக்கு அழகு சேர்க்க மண மேடையை நோக்கி அடி எடுத்து வைத்தாள் கனிகா.

ரிதுல் இருப்பது மணமேடை என்பதையும் மறந்து கனிகாவை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

heartகனிகா மெல்ல அவன் அருகில் அமர்ந்தாள். அவன் பார்வை வெக்கத்தை தந்தாலும், அவளின் அழகின் மேல் அவளுக்கு கர்வத்தையும் பெருமையையும் தந்தது.

சூழ இருந்த அனைவரின் ஆசியையும் பெற்று, தாலிச் செயினை கனிகாவின் சங்கு கழுத்தில் மாட்டி தன்னவளாக்கிக் கொண்டான் ரிதுல்.

திருமணம் முடிந்த பிறகு உறவினர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி அவர் உறவினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“படிச்சிட்டு இருக்க பிள்ளையை, அதுவும் 19 வயசிலேயே கல்யாணம் பண்ணிக் கொடுக்கறாங்கனு நினைச்சேன். ஆனால் இங்க வந்து ஜோடியை பாத்த உடனேதானே புரியுது அப்படியே மீனாட்சி சொக்கனும் மாறில இருக்காங்க. அவங்க புகுந்த வீட்டு மனுசங்களும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.”

“நானும் இதைத் தான் சொல்ல நினைச்சேன்” என்று உறவுக்கார பெண்மணியும் பதில் கொடுத்தார்.

மறுவீடு, உறவினர் விருந்து என நாட்கள் இறக்கைக் கட்டி செல்ல ஒரு மாதம் முடிந்து சென்னையில் தனிக்குடித்தனம் தொடங்கினர். ரிதுல் வேலையில் சேர வேண்டிய நாளும் வந்தது. பள்ளிக்கு முதல் நாள் செல்லும் சிறுவன் போல் சிணுங்கிக் கொண்டே கனிகாவின் முந்தானையை பிடித்தபடியே சுற்றினான்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்த கனிகா,

“ஏங்க இப்படி ஸ்கூள்க்கு போற சின்ன பையன் மாறி பிகேவ் பண்றீங்க?”

"ஏன்டி உனக்கு எத்தன தடவி சொல்றது என்னை ஏங்க-னு கூப்பிடாதனு. என் பொண்டாட்டி எதுக்காகவும் ஏங்க கூடாது.அவ பேசற வார்த்தைல கூட.புரிஞ்சுதா? அழகா மாமா-னு கூப்பிடுடி."

“சரி.நீங்க சீக்கிரம் கெளம்புங்க.உங்களுக்கு லேட் ஆச்சு”

“என்னை அனுப்பறதுல அவ்ளோ ஆனந்தம்?!சரிடா நீ கதவை நல்லா சாத்தி லாக் பண்ணிக்கோ.யார் வந்தாலும் யார் என்னனு பார்த்துட்டு கதவைத் திற பத்திரமா இரு”

“நான் பத்திரமா இருக்கேங்க.இந்த வாரம் மட்டும் தானே.அதுவும் வேலை செய்ற ஆயா இருக்காங்க.அடுத்த வாரத்துல இருந்து நானும் காலேஜ் போய்டுவேன்.so no problem.நீங்க பார்த்து போங்க.போய்ட்டு மெசேஜ் பண்ணுங்க.பாய்”

“பாய் டா” என ரிதுலும் விடை பெற்று அலுவலகம் கிளம்பினான்(ஒரு ஆபீஸ் போறதுக்கு எவ்ளோ அலப்பறை!)

ரிதுலை தினம் அலுவலகம் அனுப்புவதற்க்கு கனிகா தான் படாத பாடு பட வேண்டி இருந்தது.

ஒரு வாரம் இப்படியே ஓட அவளும் கல்லூரி செல்ல வேண்டிய நாளும் வந்தது.ரிதுலே அலுவலகம் செல்லும் முன் கனிகாவை கல்லூரியில் இறக்கி விட்டான்.அலுவலகம் முடிந்து வர நேரமாகும் காரணத்தால் மாலை கல்லூரி பேருந்தில் வீட்டுக்கு செல்வாள்.

ஒரு நாள் அவளுக்கு பயங்கர காய்ச்சல்.வேலை செய்கிற ஆயாவும் அன்று விடுமுறை. உடல் நிலை சரி இல்லாதபோது ஹோட்டல் சாப்பாடு வேணாம்.மாவு இருக்கு.நாமலே இட்லி ஊத்துவோம்.மாவை எடுத்து தட்ல ஊத்தினா இட்லி ரெடி.அவ்ளோ தானே.எவ்வளவோ பண்றோம்.இதை பண்ண மாட்டமா?எனக் களத்தில் இறங்கினான்.

இட்லி மாவை எடுத்து தட்டில் ஊத்தி அடுப்பை பொருத்தி விட்டு வந்து விட்டான்.10 நிமிடம் சென்று பார்க்க மாவு இன்னும் மாவாகவே இருந்தது.ஏன் இன்னும் வேகலை?சரி இன்னும் 10 நிமிஷம் விடுவோம் என எண்ணி,15 நிமிடம் கழித்து வந்து பார்த்த போதும் மாவாகவே இருக்க ஏதோ சரி இல்லையே என எண்ணி அவன் தாயை கைப்பேசியில் அழைத்தான்.

அவன் தாயிடம் அவன் செய்ததை பகிர்ந்து கொள்ள அவன் தாயோ "இட்லி பாத்திரத்தில் தண்ணி ஊத்தி வைச்சியா?" எனக் கேட்க,ரிதுலோ "என்னது தண்ணி ஊத்தனுமா? ஏன் தண்ணி ஊத்தணும்?" எனப் பதில் கேள்வி கேட்டான்.

“கேள்வி கேட்கமா போய் சொல்றபடி செய்” என சிரிக்கும் குரலில் ஆணை இட்டார்.

மறுபடியும் முதலில் இருந்து தண்ணீர் ஊற்றி செய்ய இப்பொழுது இட்லி இட்லியாக வந்தது.

அதன் பிறகு உறவினர் படையே தொலை பேசி வாயிலாக கிண்டல் செய்து கிண்டல் செய்து அவனுடைய தொலை பேசியை தொல்லை பேசியாக மாற்றியது தனிக் கதை.

நாட்கள் மாதங்களாகி உருண்டு ஓட அவர்கள் திருமணம் முடிந்து 3 மாதம் முடிந்திருந்தது.

வீட்டுக்கு வந்த கனிகாவின் உறவினர் "என்னம்மா ஏதாவது விசேஷமா?" எனக் கேட்க,"இல்லைங்கத்தை.படிச்சுட்டு இருக்கப்போ குழந்தை இருந்தா மேனேஜ் பண்றது கஷ்டம்னு குழந்தைய ரெண்டு வருஷம் தள்ளி போட்டு இருக்கோம்"எனக் கூறினாள்.

"என்னமோ போங்க.அதது அந்தந்த வயசுல நடந்தா தான் நல்லது.பெரியவங்க சொல்றதை நீங்க எங்க கேக்க போறீங்க"என அங்கலாயித்தாள் அந்த பெண்மணி.

கனிகா பதில் ஏதும் கூறாமல் இருக்க அவர்கள் அந்த பேச்சை அத்தோடு விட்டு விட்டார்.இருந்தும் கனிகாவின் மனதில் ஒரு பய வித்து விழுந்தது.

இரவு வீடு வந்த கணவரிடம் அவர்களுக்குள் நடந்த உரையாடலை அவள் தெரிவிக்க, ரிதுலோ "நீ ஏன்டா இதெல்லாம் மைண்ட்ல எடுத்துக்குற?அவங்க பேசறதை கண்டுக்காம விட்ரு.நீ உன் படிப்பை மட்டும் இப்போ பாரு.நமக்கு இன்னும் வயசு இருக்குடா" எனக் கூறினான்.

இருந்தும் அவள் அலைப்புறுவதை பார்த்து, அவள் தலையை மார்பின் மேல் சாய்த்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.

உறவினரின் திருமணத்திற்காக ஊருக்கு செல்ல அங்கேயும் இதே கேள்வி அனைவரும் கேட்க, முடிந்த அளவு எந்த உறவினரின் நிகழ்ச்சிக்கும் செல்வதை நிறுத்திக் கொண்டாள் படிப்பை காரணம் காட்டி.

மலையென பிரச்சனை வந்தாலும் மடுவென மாற்றிக் காட்ட மற்றும் தோள் கொடுக்க தோழனாக கணவன் இருந்ததால், அவளுக்கு பிரச்சனைகள் ஏதும் பெரிதாக தெரியவில்லை.

இரண்டு வருடங்கள் எப்படி கடந்தது எனக் கேட்டால் ரிதுல்,கனிகா இருவருக்கும் சொல்ல தெரியாது. கனிகாவின் கடைசித் தேர்வு இன்று.கல்லூரியிலும் கடைசி நாள்.தேர்வு முடியும் வரை தெரியாத ஏக்கம் தேர்வு முடிந்து,நண்பர்களிடம் விடை பெற வந்த போது வந்தது.

அனைவரின் கண்களிலும் கண்ணீர். அனைவருக்குமே சோதனையான கட்டம் நண்பர்களைப் பிரியும் நேரம். வாழ்க்கைப் பாதையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல,அவர்கள் இந்த தற்காலிக பிரிவை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. பசுமை நிறைந்த நினைவுகளோடு பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர் நண்பர்கள் அனைவரும்.

வரும் வழியெல்லாம் அழுது கொண்டே வந்தவளை சமாதானப் படுத்தினான் ரிதுல்.

நாட்கள் நகர கனிகாவின் கல்லூரி வாழ்க்கை முடிந்து 6 மாதங்கள் ஆகி இருந்தது.

கனிகாவின் பெற்றோரும், ரிதுலின் பெற்றோருமே குழந்தையைப் பற்றி கேட்க ஆரம்பித்தனர்.

இப்படியே 1 வருடம் செல்ல குழந்தை இல்லாத காரணத்தால், மருத்துவத்தின் உதவியை நாடினர். சென்னை வடபழனியில் உள்ள புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு இருவருக்குமே சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் இருவருமே ஆரோக்கியமாக உள்ளதாகவும்,குழந்தை பெற்றுக் கொள்ள முழு தகுதி உள்ளதாகவும் மருத்துவர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.