(Reading time: 12 - 23 minutes)

ஆசைக்கும் அருவருப்புக்குமான இடைவெளி - தமிழ் தென்றல்

நான் ஒரு பெண்.  இப்போது இதை உங்களிடம் சொல்லும்போதும் மகிழ்ச்சியும் பெருமையும் என்னுள்.  நான் கணினித் துறையில் முதுகலைப் பட்டம் முடித்து, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிப்புரிகிறேன்.  அம்மா, அப்பா, நான், தங்கை மற்றும் தம்பியுட்ப்பட எங்களுடைய குடும்பமொரு அன்பான குடும்பமென்று நினைக்கின்றேன்.  இன்று உங்களோடு, என் வாழ்வில் ஆசையாக இருந்த ஒன்று அருவருப்பாக மாறியதைக் குறித்து பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.  “என்னடா இவள்?! ஏதேதோ சொல்கிறாளே,  ஆனால் பெயரைச்  சொல்லவில்லையே” என்று நினைப்பீர்கள்.  அதற்கான பதிலை இந்த இடைவெளியின் (கதையின்) முடிவில் தெரிந்துகொள்வீர்கள்.

     என்னுடைய ஆறாம் வயதில், ஆசை என்னுள்  விதைக்கப்பட்டது.  நானாக விதைக்கவில்லை.  என்னுடைய  உறவினர்கள் அப்பணியை செய்தனர்.  சில நாட்களில் அது என்னுடைய ஆசையாக உருவெடுத்தது.  என் செய்ய?  அதனுடைய விபரீத விளைவுகளை அறியேன்.  ஒரு ஆறு வயது சிறுமியுனுள் அப்படி என்ன ஆசை விதைக்கப்பட்டது?  தெரிந்துகொள்வோம் வாருங்கள் என்னோடு, காலத்தை பின்னோக்கிய பயணத்திற்கு.

     அன்று விநாயகர் சதுர்த்தி.  பூஜைக்கான தடபுடல், என் சின்ன பாட்டியின் (அம்மாவின் சித்தி) வீட்டில்.  நானும்  விடியற்காலையில்  குளித்து, புத்தாடையணிந்து மகிழ்ச்சியோடு வீட்டை சுற்றிக்கொண்டிருந்தேன்.  பலகாரங்களை தயாரித்து பூஜை செய்ய மதியமாகியிருந்தது.

Woman“உங்க அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறக்கனும்.  அதாவது உனக்கு தம்பிப் பாப்பா பிறக்கவேண்டுமென்று வேண்டிக்கொள், பிள்ளையாரிடம்” என்று என் சித்தியரைனைவரும் சொன்னார்கள்.

பிள்ளையாரிடம் குழந்தைகளேதேனும் கேட்டால், அது கிடைக்குமென்று அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.  என் சின்ன பாட்டிக்கு ஐந்து பெண்கள்.  “வீட்டிற்கொரு ஆண்ப்பிள்ளை இல்லையே” என்று பாட்டி புலம்புவதுண்டு.  சித்தியருக்கும் உடன்பிறந்த சகோதரனில்லையேயென்று வருத்தம்.  எங்கள் வீட்டிலும், நானும் தங்கையுமென இரு பெண்க்குழந்தைகள்.  எங்களுக்காவது ஒரு சகோதரன் பிறக்க வேண்டுமென அனைவரும் எண்ணினார்கள்.  இதன் விளைவாகதான் என்னிடம், சகோதரன் பிறக்க  வேண்டுமென பிள்ளையாரிடம் கேட்கச் சொன்னார்கள்.  எனக்கு நினைவுதெரிந்து, நான் பிள்ளையாரிடம் முதன் முறையாக வேண்டியது சகோதரனைத்தான்.  அப்போது நானறியேன், என் கோரிக்கையை பிள்ளையார் நிறைவேற்றுவாரென்று.  நாட்கள் மெல்ல நகர, எதேதோ காரணங்களைச் சொன்ன உறவினர்கள், என்னையும் தம்பி பிறந்தேயாக வேண்டுமென்று நினைக்குமாறு மாற்றிவிட்டனர்.

     என் வேண்டுதல் கைகூடியது.  சில மாதங்களில் எனக்கொரு தம்பியுதித்தான்.  என் பெற்றோர்கள், உறவினர்களென நானுட்பட எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தோம்.  ஒரு வருடம் கழித்து, தங்கை, தம்பி மற்றும் எனக்கு மொட்டையடித்தனர் குலதெய்வம் கோவிலில்.  மறுநாள் காலை தம்பியிடம்  விளையாடச் சென்றால், என் தலையில் முடியில்லாததை பார்த்துச் சிரித்தான்.  நான் நினைத்தேன், ஒரு வயது மழலையின் சிரிப்பென்று.  அதனால் அவனை சந்தோசப்படுத்த எண்ணி அவன் அழும்போதெல்லாம் என் மொட்டை தலையைத் தடவி அவனுக்கு விளையாட்டுக் காட்டினேன்.  அப்போது நானறியேன், என்னுடைய அழகின்மைதான் அச்சிரிப்பிர்கான காரணமென்று.  அவனுக்கு உணவை ஊட்டிவிடுவது, தூங்கவைப்பது,  அவன் வீட்டில் செய்யும் கழிவையகற்றி, அவ்விடத்தை சுத்தம் செய்து, கால் கழுவிவிடுவதென அவனை சீராட்டினேன்.

       அவனுக்கு வயது இரண்டரை வருடங்கள்.  அப்பா, தினமும் வேலைக்குச் செல்லும்போது தம்பிக்கு மட்டும் ஒரு ரூபாய் கொடுப்பது வழக்கம்.  எங்கள் வீட்டில் வேறாருக்கும் கிடைக்காத சலுகைதான்.  அதை கொண்டு அவனுக்கு பிடித்ததை, அம்மாவின் மூலம் வாங்கிச் சாப்பிடுவதுண்டு.  ஒரு நாள் மாலைப்பொழுது அம்மா என் சித்தியின் வீட்டிற்குச் செல்ல, நாங்கள் மூவரும் தனியாக வீட்டிலிருந்தோம்.  சிறிது நேரத்திற்குப் பிறகு தம்பி சாக்லெட் வேண்டுமென்று கேட்டான்.  நான், அவனிடமிருந்த ஒரு ரூபாயை தங்கையிடம் கொடுத்து தெருமுனையிலுள்ள கடையில் காபி பைட் (Coffee Bite) சாக்லெட்டிரண்டினை வாங்கி வரச் சொன்னேன்.  இரண்டில் ஒரு சாக்லெட்டை முழுவதுமாக அவனுக்குக் கொடுத்துவிட்டு மற்றொன்றை இரண்டாக பிரித்து நானும் தங்கையும் சாப்பிட்டோம்.  மூன்றுப்பேருக்கும் மகிழ்ச்சியும் மனநிறைவும் சாக்லெட்டை சாப்பிட்டதில்.  சித்தியின் வீட்டிலிருந்து அம்மா வந்ததும் தம்பி சாக்லெட் சாப்பிட்டதை சொல்லவும், நானும் நடந்ததை விவரித்தேன்.  அப்போது நானறியேன் அது அவ்வளவுப் பெரிய தவறாக உருவகபடுத்தபடுமென்று.  என் அம்மா ரௌத்ராகாரத்துடன் பருப்புக் கடையும் மத்துக் கொம்பைக் கொண்டு என்னையும் தங்கையையும் பலமாக அடித்தார்.  அடிக்கும்போது சொன்னார் “நான் இங்கில்லையென்றெதும் அவனிடமிருந்த ரூபாயை பறித்து நீங்களிருவரும் சாக்லெட் சாப்பிடனுமா?”

“இல்லையம்மா… இரண்டில் ஒன்றை முழுவதுமாக அவன் சாப்பிட்டான்.  மற்றொன்றைதான் நானும் தங்கையும் பகிர்ந்துகொண்டோம்” அழுகையின் கேவலோடு சொன்னேன்.

“அதெப்படி அவனுக்கென்று அப்பா கொடுத்த ரூபாயில் நீங்கள் சாக்லெட் சாப்பிடலாம்?” என்று கேட்டு இன்னும் சில அடிகள்.

“இனிமேல் இப்படி செய்யமாட்டேனம்மா”

“அவன் சாக்லெட் கேட்டால், அவனுக்கு மட்டுதான் வாங்கிக் கொடுக்க வேண்டும்”

“சரிம்மா” என்றேன் நான்.  அப்போதுதான் அடிப்பதை நிறுத்தினார்.  அன்று உடலிலேற்ப்பட்ட காயங்கள் சில மாதங்களில் மறைந்துவிட்டது.  நெஞ்சிலேற்ப்பட்ட காயமின்னும் அழியவில்லை.  என் உயிருள்ள வரை இந்த காயம் மறையாது.  ஒரு பெண் குழைந்தைக்கு சாக்லெட் சாப்பிடும் ஆசையிருக்கக்கூடாதா?

ருடங்கள் உருண்டோட, அவனுக்கு வயது நான்கானாது.  பள்ளிக்குச் செல்லும் வயது.  தம்பியை எந்த பள்ளியில் சேர்க்கலாமென பெற்றோர் பேசிக் கொண்டிருந்தனர்.  அவனை, நானும் தங்கையும் படிக்கும் அரசு பள்ளியில் சேர்ப்பதாக, அம்மா முடிவெடுத்தார்.  நான், ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட படிக்கத்தெரியாமலிருந்த நிலையில் என் ஆசைத் தம்பிக்கு அப்படியொரு நிலை வரக்கூடாதென தந்தையிடம் பேசினேன்.  அவருக்கும் தம்பியை அரசுப் பள்ளியில் சேர்க்க விருப்பமில்லை என்றார்.  பிறகு எங்களிருவர் ஆசைப்படி தம்பியை ஒரு ப்ரைவேட் பள்ளியில் சேர்த்தோம்.  அவன் பள்ளியில் சேர்ந்த முதலொரு வாரம் அவனை தயார் செய்தார் அம்மா.  அதன் பின் அவனுக்கு எல்லாவற்றையும் என்னை செய்யவைத்தார்.  அவனுக்குதவுவதென்றால் பரவாயில்லை.  ஆனால் எல்லாவற்றையும் நானே செய்யவேண்டியதாயிற்று.  காலணி (ஷூ மற்றும் சாக்ஸ்) அணிவிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதை தெரிவித்தேன் ஏனெனில் சாக்ஸென்றால் அருவருப்பு.  நான் பள்ளிக்கு ஷூ அணிந்து சென்றதில்லை.  ஆனால் அவனுக்கு அணிவிக்க வேண்டியதாயிற்று.  என் மறுப்புக்கு யாரும் செவிமடுக்கவில்லை.  காலணி அணிவிப்பது, அவனுடைய எழாம் வகுப்பு வரை நானே செய்யவேண்டியதாயிற்று.  அவனைப் பள்ளியில் விடுவதும் வீட்டுக்கு அழைத்து வருவதும் நானே.  அவனுடைய வெள்ளை சீருடையை துவைத்து என் கைகள் வீக்கம் கொண்டன.

        ஒரு நாள் காலை, சாப்பிடுவதற்காக தட்டுகளைக் கழுவிவந்தேன்.  முன் தினம் தண்ணீர் ஊற்றிவைத்திருந்த நொந்துப்போன சாதத்தை எனக்கும் தங்கைக்கும் வைத்தார்.  கையில் தொட்டவுடனே தெரிந்தது, பாழாகியிருக்கிறது சாதமென்று.  அதை நான் சொன்னப் போது, சாதம் நன்றாகதானிருக்கிறது; அதைத்தான் சாப்பிடவேண்டுமென்றும் அம்மா சொன்னார்.  சாப்பிட வேறேதேனும் இல்லையென்றாலும் பரவாயில்லை.  அந்த சாதத்தை சாப்பிட முடியாதென்றேன்.  நான் அதை சாப்பிட்டுதானாக வேண்டுமென்று மிரட்டினார் அம்மா.  வேறு வழியில்லாமல் அமைதியானேன்.  அன்று காலை சமைத்த சாதத்தை சுட சுட தம்பிக்கு வைத்தார்.  பாழான சாதத்தை சாப்பிட மனமின்றியிருந்த நான், “ஏனம்மா? இந்த பழைய சாதத்தை எல்லோருக்கும் வை.  பிறகு எல்லோரும் கொஞ்சம் சுட சாதம் சாப்பிடலாமே” என்றேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.