பேராண்மை - ஜான்சி
This is entry #30 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
அவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே,அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை.ஒரு மாதத்திலேயே, பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர், தங்கையை போல அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள்.பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயித்திருந்தார்கள்.இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே.இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள்.ச்சேச்சே.... அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது.அவன் நினைத்து முடிக்கும் முன், பைக்கில் இருந்தவள் திரும்பினாள்.அது அவளே தான்....!
சத்யா, சத்யாவா அது, ஹரியால் ஒரு நிமிடம் அதை நம்பவே இயலவில்லை.
அவன் திகைப்புற்றது அவள் யாரோடோ பைக்கில் செல்வதைக் கண்டதால் அல்ல.எந்நேரமும் அவளின் மதிமுகத்தை மின்னும் புன்னகையோடோ, எதையாவது விடாமல் தொண தொணத்துக் கொண்டோ, முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டவாறு யாரையாவது கிண்டல் செய்து ,வெடிச் சிரிப்பை அடக்கிக் கொண்டு அந்த பெரிய கண்களைச் சுழட்டுவதாகவோ காணப்படும் பார்த்திருந்த அவனால் அவள் முகத்தில் இவ்வளவு குழப்பத்தை ஒருபோதும் கண்டதில்லை. ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அவன் 'உள்மனம்' உணர்த்தியது.ஏனென்றால், 'உள்ளே' இருப்பவள் அவளல்லவா?! சிறிது தொலைவில் இடைவெளி விட்டு அவளைப் பின்தொடர ஆரம்பித்தான் அவன்.
அவனுக்காக சில மாதங்களாக வரண் தேடிக் கொண்டிருந்த நிலையில் அம்மாவின் தோழி ஒருவர் மூலமாகத்தான் அவளைக் குறித்த அறிமுகம் கிடைத்தது.நல்லக் குடும்பத்தைச் சார்ந்த நற்குணமுள்ளப் பெண்,தனியார் அலுவலகத்தில் பணிகிறாள் எனக்கூற,அவளைக் குறித்து விசாரித்த அம்மாவும் அதையே வழிமொழிய, ஒரு சுப தினத்தில் அவளை பெண் பார்க்கச் சென்றது, அவள் போன் நம்பர் பெற்று வந்தது , இரவும் பகலுமாக பேசித்தீர்த்ததுமாக அனைத்து நினைவுகளும் மேலெழுந்தன.
இவர்களைப் பொறுத்த மட்டில் பேசித்தீர்ப்பது என்பது சரியான பதமில்லையோ?! அவள் பேசித்தீர்த்தாள், இவன் கேட்டுத்தீர்த்தான் என்பதே சரி போலும், அப்படி ஒரு "சாட்டர் பாக்ஸ்" அவள். ஒருவேளை அவளை சாப்பிடாதே என்றால் கூடக் கேட்டுக் கொள்வாள் போல, ஆனால் பேசாதே என்றால் அவளால் இயலாது என எண்ணி சிரித்துக் கொண்டான்.
அவளால் மாறிப் போன தன் இயல்பு குறித்தும் கூட அவனுக்கு ஆச்சரியமே.முன்பெல்லாம் யாராவது தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தால் சிடு சிடுக்கின்ற அவன் மன நிலை எங்கே போனது?. மணிக் கணக்காக சத்யா பேசினாலும் சிரித்த முகம் மாறாமல் கேட்பது தான் தானா? விட்டால் "இன்னொரு முறைச் சொல்லுங்க" விளம்பரத்தில் வருகின்ற மாதிரி ஆகி விடுவோமோ ? என்றும் அவனுக்குத் தோன்றும்..
என்னதான் அம்மா சொல்லி அவளைப் பெண் பார்க்கச் சென்றிருந்தாலும் முதன் முறைப் பார்த்ததும் அவளைப் பிடித்திருந்ததா? எனக் கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரியவில்லை. முன்பின் அறியாத பெண்ணை, பத்து பதினைந்து பேர் இவர்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்துக் கொண்டு சுற்றி அமர்ந்து இருக்கும் ஒரு சூழலில், ஒரு சில மணித்துளிகளில் பார்த்து அறிந்துக் கொள்வது சாத்தியமா? அதில் எப்படிப் பட்ட புரிதல் இருக்கும்(?!). இந்தியத் திருநாட்டில் இந்த ஃபார்முலா இவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் காரணம் என்ன? என்று அந்நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.
அதன் பின்னர் அவளோடு பேசின இந்த சில வாரக் காலங்களாகத்தான்அவள் மேல் உண்மையான விருப்பம் வந்தது என்றே அவனுக்குத் தோன்றியது .வெளிப்படையான அவள் பேச்சு, அவன் மனதைக் கவர்ந்துக்கொண்டதில் சந்தேகமென்ன? இதோ இந்த மாதிரி பைக் சம்பவம் குறித்தும் அவள் ஏற்கெனவே பகிர்ந்துக் கொண்டு இருக்கிறாளே?
" நம்ம மக்களைத் திருத்தவே முடியாது ஹரி , அன்றைக்கு அப்படித்தான் என் கூட வேலைப் பார்க்கிற மனோஜ் என்னை ட்ரோப் செய்தான்.அவனை நான் வீட்டுக்குக் கூப்பிட்டேன், வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டுப் போனான். பக்கத்து வீட்டில இருக்கிறவங்க எல்லாம் இந்த பையனை உன் மகளுக்கு பார்க்குறியான்னு அம்மாகிட்ட விசாரிச்சிருக்கிறாங்க...எனக்கு வந்த கோபத்துக்கு....என அவள் பொறும ..
எனக்கும் உள்ளுக்குள் தாங்க முடியாத பொறாமை.ஏனென்றால்,அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் லிஸ்டில் டாலா , ஹாண்ட்சம்மா இருந்த அவன் உருவம் என் கண்முன் நிழலாடியதே..
எதிர் முனையில் என்னவள் பேச்சைத் தொடர்ந்தாள். அவன் என்னை விட ரொம்ப டாலா இருப்பான் ஹரி, ஆனா என்னை விட ஃபோர் இயர்ஸ் சின்னவன், என் தம்பியா தான் அவனை நான் நினைச்சுட்டு இருக்கேன். மற்றவங்க ஒண்ணும் புரியாம பேசும் போது எவ்வளவு கோபம் வரும்னு தெரியுமா?
(அப்பாடா நாலு வயசு சின்னவனா? அப்போ பரவாயில்லை அல்பத்தனமாக சந்தோஷப் பட்டது மனது) .
சின்ன வயசில அண்ணாதான் என்னை சைக்கிள்ல ஸ்கூல் கூட்டிட்டுப் போவான், கொஞ்சம் பெரியவளானதும் அம்மா என்னை கூட்டிப் போக விட மாட்டாங்க...என்னதான் அண்ணன் தங்கையா இருந்தாலும் மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு அம்மா சொன்னது கேட்டப்போ எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?