(Reading time: 8 - 16 minutes)

மாடி ஹாலைப் பார்க்க அது எப்பொழுதும் போல இருந்தது.

‘டேய்,  இங்க யாராச்சும் இருக்கீங்களா..... இல்லையாடா.  யாருடா நீங்க, எங்க இருந்துடா வர்றீங்க நான் எங்க காலேஜ் ரவுடி தெரியுமா.  தைரியம் இருந்தா நேருல வாங்கடா.  நடுராத்திரி பன்னெண்டு மணிக்கு ஹைட் அண்ட் சீக் விளையாடறீங்க’, யாருமில்லா ஹாலில் நின்றுக்கொண்டு சத்தமாக கத்தினான்.  அவன் குரல் எதிரொலிக்க அதில் பயந்து கட கடவென்று கீழே இறங்கி ஹாலிற்கு வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். 

ஒரு ஐந்து நிமிடம் எந்தவித சத்தமும் இல்லாமல் இருந்தது.  ‘அப்பாடா நான் விட்ட சவுண்ட்ல ஓடிட்டானுங்க போல’, என்று மகிழ்ந்தபடியே, நானும் ரவுடிதான் பாடலை விசில் செய்தபடியே படுக்கை அறைக்கு செல்ல, இப்பொழுது சமையலறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் வந்தது.

இது வேலைக்காகாது, என்று, ‘வாங்கடா இன்னைக்கு நீங்களா.... நானான்னு ஒரு கை பார்த்துடலாம்.  நீ மனுஷனா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா’, சமயலறைக்கு சென்று கத்த மறுபடியும் யாருமில்லா அறையே அவனை வரவேற்றது.  தண்ணீர் சின்க்கில் தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை.   

ப்பொழுது பீதியின் உச்சக்கட்டத்திற்கு சென்றான் ஆனந்தன்.  நடப்பது ஒவ்வொன்றையும் பார்க்கும்போது ‘யாரோ இருக்காங்க, ஆனா இல்லை.  ஏதோ இருக்குது ஆனா இல்லை...... ஐயோ மண்டை காயுதே.  இது வேலைக்காகாது.  எல்லா ரூமையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு அந்தக் கதவுகளை பூட்டு போட்டுவிடலாம், அப்போ மேலும், கீழும் ஹால் மட்டும்தான் இருக்கும்.  நமக்கும் ரூம், ரூமா போய்  செக் செய்யும் வேலை மிச்சம்’ என்று எண்ணியபடியே முதலில் மாடிக்கு செல்வோம் என்று முதல் படியில் காலை வைக்க, கிணற்றில் யாரோ நீர் இறைக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

‘டேய் முடியலடா, என்ன விளையாட்டு..... இல்ல என்ன விளையாட்டுன்னு கேக்கறேன்.  இப்படி ஏரியா, ஏரியாவா விளையாடினா என்னடா பண்றது.  பீதிலே எனக்கு பேதி ஆகிடும் போல’, கை, கால் எல்லாம் நர்த்தனம் ஆட பின்னால் கதவைத் திறந்து பார்க்க கிணற்றில் கயிறு இழுக்கப்பட்டு பக்கெட் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. 

பின்கதவைத் தாழிட்டு விட்டு ஒரே ஓட்டமாக அவன் அறைக்கு சென்று போர்வையை தலை வரை இழுத்து மூடி படுத்து விட்டான்.  இப்பொழுது கணக்கு வழக்கு எதுவும் வைக்காமல் அவன் வாயிலிருந்து முருகா சரணம் தொடர்ந்து சத்தமாக வந்தது.

போர்வைக்குள் தலையிலிருந்து கால் வரை வேர்த்து வடிய, முருகர் பிஸியாக இருந்தால் என்ன செய்வது என்று அனைத்துக் கடவுள்களையும் கூப்பிட ஆரம்பித்தான்.  அப்பொழுது அவன் அறைக்குள் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்க,  பயத்தின் உச்சக்கட்டத்தில் வீரிட்டு கத்த ஆரம்பித்தான் ஆனந்தன்.  அறைக்குள் வந்த அவன் போர்வையைப் பிடித்து  இழுக்க, ‘ நான்  வரமாட்டேன், என்னை விடு, என்னை விடு’, என்று முகத்திலிருந்து போர்வையை அகற்றாமலேயே அலற ஆரம்பித்தான்.

“டேய் எரும, நான்தாண்டா போர்வையை விடு”, ஆனந்தனின் பெரிய அண்ணன் மிக அன்பாக அவனை அடித்து எழுப்ப, அப்படியும் நம்பாமல் லேசாக போர்வையை மட்டும் தூக்கி பார்க்க நிஜமாகவே அங்கே அவனின் அண்ணன் நிற்க, “அண்ணா......”, என்று கத்தியபடியே அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

“அண்ணா நீ எப்போ வந்த.  நாளைக்குத்தானே எல்லாரும் வர்றதா  இருந்தது....... இங்க இந்த வீட்டுல பேய் இருக்குண்ணா.......”, கேள்வி, பதில் என்று உளற ஆரம்பித்தான்.

“நீ இருக்கும்போது அது எப்படிடா வந்துது......”

“டேய் அண்ணா, காமெடி பண்ணாத........  அரை மணிநேரமா என்ன எல்லாம் அட்டகாசம் பண்ணிச்சு தெரியுமா?”

“நல்லாத் தெரியுமே....  தோட்டத்துல நடந்துது, கிணத்துக்கிட்ட பக்கெட்டை தட்டி விட்டுது.  மாடி ரூம்ல chair இழுத்துது.  அப்பறம் ஹாங்...... கிச்சென்ல தண்ணி தொறந்து விட்டுது, அப்பறம் கிணத்துல தண்ணி இழுத்தது கரெக்ட்டா.  ஆ நடுல ஒன்னு விட்டுட்டேன், மாடி ஹால்ல திபு திபுன்னு ஓடிச்சு”

“அச்சோ அண்ணா எப்படி இப்படி பார்த்தா மாதிரியே சொல்றா.  அந்தப் பேய் உனக்கு தெரிஞ்ச பேயா......”

“ஆங் அந்தப் பேயே நான்தாண்டா வெண்ண, நான் மதியமே வந்துட்டேன்.  ஆசிரியர் அடுத்து ஒரு பேய்க் கதை கேட்டு இருந்தார்.  அதை யோசிச்சுட்டே உக்கார்ந்து இருந்தேன்.  அப்போதான் நீ வந்த.  அதுவும் போன்ல யாருக்கிட்டயோ உன்னோட வீரத்தைப் பத்தி அளந்துட்டு வந்தியா,  சரி நீ தைரியசாலி, உன்னையவே ஹீரோவா வச்சு எழுதலாம்.   இந்த மாதிரி எல்லாம் நடந்தா ரியல் லைப்ல  ஹீரோ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு பார்க்கலாம்னு பார்த்தா அதுலயும் நீ காமெடியனாத்தான் பண்ணி இருக்க.  வீடு பெரிசா இருக்கவே நானும் ஒளிஞ்சு ஒளிஞ்சு உனக்கு வேலை வச்சேன்”, என்று கூற ஆனந்தன் தான் பட்ட பாட்டை நினைத்து, அவன் அண்ணனை அடிக்கத் துரத்த ஆரம்பித்தான். அப்பொழுது சரியாக ஹாலில் இருந்த கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடிக்க, மாடி அறையில் மேசைகள் இழுபடும் ஓசையும், சமயலறையில் தண்ணீர் கொட்டும் சத்தமும் கேட்க ஆரம்பித்தது.   ‘மறுபடியும் முதலில் இருந்தா’, என்றபடியே மயங்கி விழுந்தான் ஆனந்தன். 

This is entry #49 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.