(Reading time: 7 - 14 minutes)

எம்ஜிஆர் என் ஹீரோ - வின்னி

mgr

ன்று எப்படியாவது முதலாவது காட்சிக்கு டிக்கெட் எடுத்துவிட வேண்டும் என்ற திடகாத்திரம்!

எம்.ஜி.ஆரின் ‘காஞ்சி தலைவன்’ படம் வெளிவரும் நாள் அது

வியாழக்கிழமை! மதிய சாப்பாட்டை அவசர,அவசரமாக சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திலிருந்து  விண்ட்சர் தியேட்டரை நோக்கி நடக்கிறேன்.

பாக்கெட்டில் கவனமாக சேர்த்து வைத்த அறுபத்து ஐந்து சதங்கள்!

ஆமாம்,கலரிதான்!

பழைய படம் என்றால் முப்பத்தைந்து சதங்கள்மாத்திரமே! யாருக்கு வேண்டும் தியாகராஜ பாகவதர் படங்கள்?

அடிக்கடி பாக்கெட்டைத் தடவி காசு இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறேன். ஒரு சதம் குறைந்தால்கூட அன்று படம் பார்க்க முடியாது! 

தியேட்டரின் முன்னால் சரியான சனம். யாரோ முதுகில் தட்டுவது போன்ற பிரமை திரும்பிப் பார்க்கிறேன். அப்பா!

"எங்கே போகிறாய்?"  என்று கேட்கிறார். "படத்துக்கு" என்று சொல்கிறேன். சினிமா  தியேட்டரின் முன்னால் நின்றுகொண்டு வேற என்ன சொல்ல முடியும்?

"காசு இருக்கிறதா" என்று கேட்கிறார் .  " ஆம் " என்றேன். “சரி படத்தைப் பார்த்து விட்டு வா” என்று கூறி வேலைக்குப் போய் விட்டார்.

அவர் வேலை செய்யாவிட்டால் எட்டு பிள்ளைகள் உள்ள குடும்பத்தை எப்படிக் கொண்டு நடத்துவது?

வகுப்புக்குப் போகாமல் சினிமா பார்க்கப்போவது அதுதான் முதல்முறை. என்ன தண்டனையோ தெரியாது? வீட்டுக்குப் போனால்தான் தெரியும்.

அப்பா ஒரு கணக்காளர் எப்பவும் வேலைதான். படம் பார்க்கப்போகக் கூட அவருக்கு நேரம் இல்லை. அப்படிப் போனாலும் குடும்பத்தோடு  பத்துப்பேரும்  சேர்ந்து போவோம். அதுவும் முதலாவது வகுப்பில் சாக்லேட், குளிர்பானம் எல்லாம் கிடைக்கும்.

அதுவும் வருசத்தில் ஒருமுறை, "ப" வரிசையில் தொடங்கும் கருத்துள்ள சிவாஜி கணேஷன் படங்கள் அல்லது கடவுள் படங்கள்.

எனக்கு எம்ஜிஆர் படம் அப்பாவுடன் போய்ப் பார்க்கவேண்டும்  என்றஒரு  ஏக்கம்!

அப்பா மகனுக்கிடையே இருக்கும் பல விடயங்கள் கதைக்கலாம். அவருடன் போனால் வசதியாக முதலாம் வகுப்பில் இருந்தும் பார்க்கலாம்!        

வரிசையில் இடிபட்டு ஒரு மாதிரி உள்ளே நுழைந்து விட்டேன். எம்ஜிஆர் படமல்லவா!. கூட்டமோ கூட்டம்!. பலருக்கு டிக்கெட் கிடைத்திருக்காது.

கலரியில்  திரைக்கு முன்னால் இன்னும் ஒரு வரிசைதான் இருக்கிறது.

ஊழியர்கள் இருவர் வாங்கு ஒன்றை கொண்டு வந்தார்கள்.

ரசிகர்கள்  அவர்களைத் தள்ளி அடித்து  இருக்க வரும்போது வாங்கை நிலத்தில் தலை கீழாக போடுவார்கள்.

இருக்க ஓடி வரும் எல்லோரும்  விழுந்து எழும்புவார்கள். இப்படி பல தடவைக ள் செய்து கடைசியில் வாஙகை வைத்து விட்டுப் போய்விடுவார்கள்.

காசையும் கொடுத்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட வேணுமா?

 முதல் நாள் கலரியில் எம்ஜீஆர் படம் பார்க்க வேண்டுமென்றால், அதுதான் நியதி!

முதல் மணி அடிக்க நான் கூட்டத்தோடு, நெரிபட்டு ஒரு மாதிரி வாங்கில் இருந்து விட்டேன்.

பக்கத் தில் இருந்தவர் சிவப்பு  சேர்ட்டும்  கருத்த லுங்கியும் அணிந்திருந்தார். கருப்பும், சிவப்பும் கலந்ததுதான்  திமுக வின் கொடி! எல்லாம் வாத்தியார் மேலே இருக்கும் பக்திதான். அத்தோடு தலைவர் கருணாநிதி கதை எழுதிய படமல்லவா!

அவர் வேர்க்க வேர்க்க விசிலடித்துக் கொண்டிருந்தார். அ டிக்கடி கழுத்தில் இருந்த  திமுக கொடியை எடுத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டார். எனக்கு அவர் பக்கத்தில் இருக்க அருவருப்பாக இருந்தது! கலரியில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவை எல்லாம் இல்லாவிட்டால் அது  தலைவர் படமாக இருக்க முடியாது!

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

இடைவேளை! பக்கத்தில் இருந்தவரின் விசில் சத்தத்தால் காதெல்லாம் அடைத்து விட்டது. அங்கெ பெரிய சத்தத்தில் ஒலிபரப்பான பாட்டுக்களைக் கேட்க முடியவில்லை.

ஒரேன்ச் பார்லி, ஐஸ் கிரீம், ஐஸ் பழம், கடலை, சாக்லேட் என்று எல்லாரும் வாங்கித் சாப்பிடுகிறார்கள். என்னிடம் காசில்லை!      

என் வெள்ளை உடுப்பெல்லாம் வேர்வை. நான் வாங்கிலிருந்து எழும்பினேன். என் வலது சேர்ட் கை சிவப்பாக மாறி இருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தவரின் சேர்டில் இருந்து வந்தது என்று ஊகிக்க எனக்குப் பல வினாடிகள் செல்லவில்லை.

அந்த சாயம் சன்லயிட் சோப் போட்டு தோய்க்கப்  போகுமா என்ற சந்தேகம்! சேர்ட் எல்லாம் சிகரெட் மணம். சகிக்க முடியவில்லை.

மாமா லண்டனிலிருந்து அனுப்பிய  மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் வாங்கிய விலைஉயர்ந்த செயின்ட் மைக்கேல்ஸ் சேர்ட் அது.

யாழ்பாணத்தில் அந்த சேர்ட் வாங்க முடியாது. 

"தம்பி குடிக்க ஏதாவது வேணுமா"?பக்கத்தில் இருந்தவர் ஒரேன்ச் பார்லி குடித்தபடி என்னைக் கேட்கிறார். நான் வேணாம் என்றேன்!

அவருக்கு எம்.ஜி.ஆர் போல தானும் ஒரு கொடை வள்ளல் என்ற நினைப்போ? 

என்னிடம் ஒரேன்ச் பார்லி வாங்கக் காசில்லை என்று அவருக்கு எப்படித் தெரியும்?

அவருடைய பெருந்தன்மையை நினைத்துப் பெருமைப்பட்டேன்.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.