(Reading time: 10 - 20 minutes)

படித்தவுடன் அழவைக்கும் ஒருபக்கக்கதை - பார்த்தி கண்ணன்

cry baby



புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்

குடிப்பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.

இந்தக் கதையில் வரும் கதை மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல. அதையும் மீறி புண்பட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

இந்தக் கதை உச்சகட்ட சோகக் காட்சிகள் நிறைந்தது. பலவீனமான இதயம் கொண்டவர்கள்,கர்ப்பிணிகள்,குழந்தைகள் படிக்கத் தகுந்ததல்ல.

 

முன்னிருக்கையில் கால் வைக்காதீர். எச்சில் துப்பாதீர்.



ண்டு 2040.

அழகர்கோயில் அருகே அக்கரைப்பட்டியில் அக்ஸார்பெய்ன்ட் அடித்த அழகான வீட்டின் அடுப்பங்கரையில் அர்னால்டை நினைத்தவாறே அலுமினிய  அண்டாவை அழுக்குப்போக அழுத்தி அழுத்தி அலசிக்கொண்டிருந்தாள் அனுஷ்கா.

அப்போது யாரோ சிலர் கதவைத் தட்டினர்.

“கதவு திறந்து தான் இருக்கு. உள்ள வாங்க" என்று வெளியே கேட்குமளவுக்கு சத்தமாகக் கத்தினாள்.

'படார்'என கதவைத் திறந்து ஓடிவந்தனர் பொன்வண்டரசியும்,குன்றின்மேல் நின்ற கோபாலனும். அவர்களைக் கண்டதும் அனுஷ்காவிற்கு இன்ப அதிர்ச்சி. அவ்விருவரும் அனுஷ்காவின் பேரன் மற்றும் பேத்தி.

“ஐஐ..அனுஷ்கா பாட்டி" என கத்திக்கொண்டே ஓடி வந்து கட்டிக்கொண்டனர் அந்த இரண்டு குழந்தைகளும்.

“அடடா வாங்க என் செல்லக்குட்டிகளா" என அவ்விருவரையும் வாரித் தூக்கி ஒரு சைடுக்கு ஒருவராக இருவரையும் இடுப்பில் போட்டுக்கொண்டாள்.

“வண்டு,,,குன்று,,எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?” எனக் கேட்டாள்.

“ஐயோ பாட்டி..அந்த பேர சொல்லி எங்களக் கூப்பிடாத. எல்லாரும் எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா?” என்றான் குன்று.

“எதுக்குப் பாட்டி எங்களுக்கு இப்படி ஒரு பேர் வச்ச?” என அலுத்துக்கொண்டாள் வண்டு. அவள் அப்படிக் கேட்டதும் லாரி டயரில் சிக்கிய காலி வாட்டர்கேன் போல் அனுஷ்காவின் மனம் நொறுங்கியது.

“என்னமா பண்ண சொல்றீங்க.  பாட்டி அந்தக் காலத்துல ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளரா இருந்தேன். அப்போ எல்லாம் இந்த மாதிரி யாருக்குமே வைக்காத, சம்பந்தமே இல்லாத தமிழ்ப் பேர்கள கதாப்பாத்திரங்களுக்கு வச்சா, “Wow! Nice name selection. Super Anushka”னு கமெண்ட் எல்லாம் போடுவாங்கப்பா. அந்த ஆர்வத்தில உங்களுக்கும் அந்த மாதிரி பேர் வச்சு விட்டுட்டேன்" என்றாள் வருத்தத்துடன்.

“நல்ல வச்ச போ" என்றான் குன்று.

“சரி..அமெரிக்காவில இருந்து தனியாவா வந்திங்க? அப்பா அம்மா வரல?”

“இல்ல பாட்டி.  அவங்க பிஸி. அதான் நாங்களே வந்துட்டோம். ரொம்ப பசிக்குது. சாப்பிட என்ன இருக்கு?” கேட்டாள் வண்டு.

“ஐயையோ. பாட்டி எல்லா சண்டேவும் ஜீசஸ்க்கு விரதம் இருக்கேன். நைட் தான் சாப்பிடுவேன். அதனால எதுவும் சமைக்கலையே செல்லங்களா. நேத்து ராத்திரி சமைச்சதுல மீதி தான் இருக்குமே" என்று மீண்டும் வருத்தப்பட்டாள் அனுஷ்கா.

“அதுவே போதும் பாட்டி. எங்கள இறக்கி விடு" என்று சொல்லி இடுப்பிலிருந்து இறங்கிக்கொண்டனர் இருவரும்.

கிட்சனில் சீலிங்கில் பழைய சாதத்தை ஊறப் போட்டு வைக்கும் சட்டியை தொங்க விட்டிருந்தாள். அதைக் கழற்றி அதிலிருந்த உப்புக்கருவாடையும், ஊற வைத்த பீட்சாவையும் சாப்பிடத் தொடங்கினர் இருவரும்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறே பாதி கழுவிய அண்டாவின் மீதியைக் கழுவத் தொடங்கினாள். அண்டா சுழலச் சுழல அவளின் பிளாஷ்பேக் கண்முன்னே சுழன்று வரத்தொடங்கியது.

ருபத்துநான்கே முக்கால் வருடங்களுக்கு முன்னால் அவளுக்கு இருபத்துநான்கு வயது.  காலேஜ் முடித்த கையோடு கல்யாணத்துக்காக காத்திருந்த சமயத்தில் கூல்டிரிங்ஸ் பாட்டிலைத் திறந்ததும் வரும் கேஸ் போல, கதை எழுத வேண்டுமென்ற ஆவல் மனதில் பொங்கி  வழிந்தது. கம்மலையும் செயினையும் சேட்டு கடையில் அடகு வைத்து ஐநூறு குயர் பேப்பர் வாங்கி கதைகளை எழுதினாள் எழுதினாள் எழுதிக்கொண்டேயிருந்தாள். வாரப் பத்திரிக்கை,மாதப் பத்திரிகை, பக்கத்துக்கு வீட்டுக்காரியின் கல்யாணப் பத்திரிக்கை வரை எல்லாவற்றிலும் முயற்சித்தாள். எதிலுமே இவள் கதை பிரசுரமாகாததால் கிரிக்கெட் பால் பட்டு உடையும் கண்ணாடி ஜன்னல் போல் மனமுடைந்து போயினாள். 

அப்போது தான் chillzee  வலைத்தளம் பற்றி அறிந்தாள். எழுதிய கதைகள் அனைத்தையும் டைப் செய்து மெயில் மழை பொழிந்தாள். வழக்கமாய் நாம் அனுப்பும் கதைகளை ஆறாவது நாளில் ஒப்பன் செய்து பார்த்துவிட்டு,அடுத்த வாரமே பிரசுரம் செய்யும் chillzee  அட்மின்கள் அரை நூற்றாண்டு தாண்டியும் இன்னும் இவளுக்கு ரிப்ளை செய்யவில்லை. ஆனாலும் "அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்" புகழ் நாஞ்சில் சம்பத் போல் தன் கதை வருமென இன்னும் காத்துக்கொண்டிருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.