(Reading time: 8 - 15 minutes)

முதலாம் வகுப்பு - வின்னி

rickshaw

ரிக்க்ஷா பரியோவான் கல்லூரியை நோக்கி மார்டின் வீதியால் பறக்கிறது.

பண்டாரி வேகும் வெயிலில், காலில் செருப்பும் இல்லாமல், தோளில் சிறு துண்டுடன் , லுங்கியை மடித்துக்கட்டிக் கொண்டு வேர்க்க வேர்க்க என்னையும்  அண்ணாவையும் ரிக்க்ஷாவில் வைத்து இழுத்துக் கொண்டு போகிறான்.

சோர்ந்து, மெலிந்து, ஈக்கில் குச்சி போல் இருக்கும் அவனது கால்கள். மாறி, மாறி  ஒரே இடைவெளியில் தெருவில் பதியும்.

அவனது பாதங்களில் இருந்து வரும் ஓசையும். அவற்றின் அசைவுகளும், கடிகாரத்தின் செகண்ட் கம்பியின் ரிதத்தைக் கூடத் தோற்றுவிடும். ரிக்க்ஷாவிலிருந்து அவற்றைப் பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தால், எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் நேரம் போறதே தெரியாது.

அப்பா அனுப்பும் ஒரு சொற்ப காசுக்காகத்தான் பண்டாரி இப்படி மாடாய்  உழைக்கிறான்!.

பதுளை அரசாங்க சரஸ்வதி பாடசாலையில் பாலர் வகுப்பில் இருந்துவிட்டு முதலாம் வகுப்புப் படிக்க, கத்தோலிக்க தனியார் பாடசாலைக்கு யாழ்ப்பாணம் வருவது என் வாழ்வில் ஒரு முக்கியமான திருப்பம்.  

அப்பா மலைநாட்டில் உள்ள பதுளையில் பெரியாஸ்பத்திரியில் வேலை. நானும் அண்ணாவும் அம்மம்மாவுடன் இருந்து படித்தோம்.

ஐந்து மாமன்மாரும் படித்தது பரியோவான் கல்லூரியில்தான். அண்ணா நாலாம் வகுப்பில் படிப்பதும் அங்கு. நிக்கோலஸ் முதலியார் பரம்பரையில் வந்த நானும் அதே கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்பது அம்மம்மாவின் ஆசை. அது எல்லாருக்கும் பெருமையும் கூட!  

அம்மாவும் அவளுடைய நாலு சகோதரிகளும் படித்தது சுன்டிக்குளி மகளிர் கல்லூரியில். இரண்டு கல்லூரிகளும் யாழ்பாணத்தில் பெயர் பெற்றவை, படிப்பிலும், விளையாட்டிலும்!   

பண்டாரியைப் பார்க்கும் போது எனக்குப் பாவமாக இருக்கும்! அவனோடு இருந்து கதைத்து அவனுடைய  வாழ்க்கை, குடும்பம், என்பனவற்றை அறியவேண்டும் என்று தோன்றும். அதற்கு ஐந்து வயதான எனக்கு என்ன தகுதி உண்டு?

அந்த ரிக்ஷாவில்,ஏறியதும் அவனுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னை அறியாமலே என்னுள்ளே தோன்றிவிடும்.

யாழ்பாண வேகும் வெக்கையில், கொதிக்கும் தார் ரோட்டில், அவன் கால்கள் படும் அவலங்கள், என் கண் முன்னே வந்தபடி இருந்தன.      

காலையில் பள்ளிக்கூடத்தில் கர்த்தரின் முன் பைபிளும், மாலையில் வீட்டில் பிள்ளையாரின் முன் தேவாரப் புத்தகமும், சமயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கு எல்லாம் ஒன்று தான்!

எல்லாக் கடவுளும் ஒன்றுதான் என்பதன் அர்த்தம் இப்போதுதான் எனக்குப் புரிகிறது! சமயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்து விட்டால் எல்லாச் சமயமும் ஒன்றுதானே?

அம்மம்மா கத்தோலிக்கராக இருந்து பாட்டவைக் கலியாணம் முடித்தவுடன் இந்துவாக மாறியவர். நத்தாரும், தைபொங்கலும், ஈஸ்டரும், தீபாவளியும், இரண்டு புது வருடங்களும் மாறி  மாறி கொண்டா டுவது வழக்கம்.      

இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறியவர்களைத் தெரியும். ஆனால் அம்மம்மா அதற்கு விதிவிலக்கு. அவ இந்து சமயத்தைத்தான் கடைசிவரை கடைப்பிடித்தா.  

பண்டிகைகள் என்றால் எனக்குக் கொண்டாட்டம்! வகை வகையான தின் பண்டங்கள், புது உடுப்புக்கள், பட்டாசுக்கள், விளையாட்டுப் பொருட்கள் உறவினர் வீடுகளுக்குப்  போவது, இவைகள் எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப்   போவதை விட சந்தோஷமான விஷயம்தானே!

பண்டாரி எல்லாப் பண்டிகைகளுக்கும் தவறாமல் வந்து விடுவான். எல்லாப்  பண்டங்களையும், புது உடுப்புகளையும் உரிமையுடன்  கேட்டு வாங்கிப் போவான். இப்படியான பண்டிகை நாட்களில் அவனுக்குத்தான் முன்னுரிமை என்று அம்மம்மா கூறுவா.

பண்டிகை நாட்களில்தான் அவனைப் பார்க்க எனக்கு சந்தோசமாக இருக்கும். அவன் என்ன சமயத்தைச் சேர்ந்தவன் என்று எனக்குத் தெரியாது. அவன் சமயத்தைப்பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை!

காசு இருப்பவர்கள்தான் பணம், பணம் என்றும் கோவில், சமயம் என்றும் திரிகிரர்களோ என்று, நான் எண்ணுவது உண்டு! தேவாரத்தை கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்பவனுக்கு இது எல்லாம் எப்படிப் புரியும்?.

பண்டாரிக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருப்பதும், அவள் பிறக்கும் போதே ஆட்டிசம் குறைபாடோடு பிறந்தவள் என்றும், அம்மம்மா எனக்கு ஆட்டிசம் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னாள்.

ஆட்டிசம் எல்லாச் சமயங்களுக்கும்அப்பாற்பட்டது, ஏழை, பணக்காரன், என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் வரக்கூடியது என்று எனக்குப்   புரிந்தது. 

எனக்கு மிகவும் பிடித்தது வருசப்பிறப்பு. அம்மம்மாவைப் பார்க்க வீ ட்டுக்கு வரும் எல்லா மாமன்மாரும், சின்னம்மாக்களும், கைவிசேசம் தருவார்கள்.

ஒவ்வொருவர் தரும் பத்துச் சதமும் அப்போது பெரிய காசுதானே!

சிலர் என்னைக் கூப்பிட்டு “இந்தா கைவிசேசம்” என்று தருவார்கள். சிலரிடம் நானாகவே கெஞ்சிக் கேட்கவேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.