(Reading time: 5 - 9 minutes)

இப்படியும் மனிதர்களா? - வின்னி

Military

தொலைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறது. குகன் கடிகாரத்தை பார்க்கிறான். காலை மூன்று மணி. யார் இந்த நேரத்தில்?

தொலைபெசியைக் கையில் எடுக்கிறான். வெளிநாட்டிலிருந்து வரும் நீளமான தொலைபெசி எண்ணாக இருக்கிறதே! யாழ்பாணத்திலிருந்து தங்கையோ? அவனல்லவா அவளை வழமையாக கூப்பிடுவது!   

"ஹலோ சார்!" ஒரு பெண் குரல. "நான் சந்திரிகா, என்னை ஞாபகமில்லையா?” 

"எந்த சந்திரிகா?", அரைத் தூக்கத்தில் கேட்கிறான். "சந்திரிகா சில்வா". அவள் கத்துகிறாள். சற்று மௌனம்! சரியான தொலைபேசி எண் என்று சந்தேகிக்கிறாளோ? 

"உங்களோடு கண்டியில் வேலை செய்தேன் ஞாபகமில்லையா?".

ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறி முப்பத்தேழு வருடங்களாகி விட்டன. ஆமாம் கடைசியாக கட்டிட  பொறியாளராக கண்டியில் வேலை செய்தான். முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னர் நடந்தவை அவனுக்கு ஞாபகம் வரத் தொடங்கின.

ஒரு மெல்லிய, கருத்த, அலங்கோலமாக கூந்தலை வாரிய ,  ஆரஞ்சு நிற நைலோன் சேலையை மடியில் சுருக்கிக் கட்டி, பழைய தேய்ந்து போன பாட்டா செருப்புக்கள் அணித்திருக்கும் அந்த சிங்கள கிராமத்துப் பெண்தான் சந்திரிகா.

எத்தனையோ நிகழ்வுகள் அவன் வாழ்க்கையில் நடந்துவிட்டன!. அவனுக்கு  கலியாணமாகி முப்பத்துமூன்ற வருடங்கள், மூன்று ஆண் பிள்ளைகள். எத்தனையோ நாடுகள் சுற்றிவிட்டு கனடாவுக்கு வந்தான். பிள்ளைகளும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள்.

"ஆம் எனக்கு உன்னை ஞாபகமிருக்கிறது, எங்கிருந்து பேசுகிறாய் சந்திரிகா?"  

"பாரிசிலிருந்து!"  இவள் என்ன செய்கிறாள் பாரிசிலில் ?

இந்த நேரத்திலா அவனைக் கூப்பிடுவது? பாரிசுக்கும் டொராண்டோவுக்கும் இடையேயுள்ள ஆறு மணி நேர வேறுபாடு அவளுக்கு தெரியாதோ?.

குகன் தன்னை மறக்கவில்லை என்பதால் அவள் குரலில் ஒரு உற்சாகம்  பிறக்கிறது .

ஐம்பது, நூறு என்று ஆயிரக்கணக்கில் அவனிடம் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்காத அவளை எப்படி அவனால் மறக்க முடியும்?    

அவன் தனது உடம்பை தலையணையின்மேல் இழுத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு "எப்படி இருக்கிறாய் சந்திரிகா?" என்கிறான்.

“நான் ஒரு பிரெஞ்ச்சுக்காரரை மணமுடித்து, இருபது வருடமாக பாரிஸில் இருக்கிறேன்”. “அவர் கண்டிக்கு உல்லாசப் பயணியாக வந்தவர். நல்ல பணக்காரர்! அவரை நான் உங்களுக்கு கண்டியில் தலதா மாளிகைக்கு எதிரில் வைத்து அறிமுகம் செய்தேன்.  அவர் பெயர் 'பிதுனே' ஞாபகம் இருக்கிறதா?  .

“அந்தக் கிழவனா?! அவனுக்கும் உனக்கும் ஒரு முப்பது வயது வித்தியாசம் இருக்குமே?” கேட்கவேணும் போல இருந்தது. கணவனைப் பற்றிக் கேட்பது அநாகரிகம் என்று பேசாமல் இருந்துவிட்டான்.  அவளுக்குச் சம்மதமென்றால் அவன் யார் அதைக் கேட்பதற்கு?

பாரிசில் வசிக்கிறேன் என்று சொல்வதில் ஒரு பெருமை அவள் பேச்சில் தேரிகிறது. பிரெஞ்சுக்காரனை மணமுடித்து இருக்கிறேன் என்பதில் அவளுக்கு அதை விடப் பெருமை.  

சிறிலங்காவில் நீ காதலித்தவர்கள் எல்லாருக்கும் என்ன நடந்தது? என்று, கேட்கவேணும் போல அவனுக்குத் தோன்றியது, முக்கியமாக அவள்மேல் உயிரையே வைத்திருந்த அந்த காமினிக்கு!

 காமினி நல்லவன், அழகானவன், படித்தவன். ஆனால் வறிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுக்கு குடும்பப் பொறுப்பு அதிகம். பத்து சகோதரர்களோடு பிறந்த மூத்த மகன்.

யாழ்பாணத்துக்கு அவர்கள் இருவரும் வந்து, தனது வீட்டில் தங்கி, நயினா  தீவு, கீரிமலை, கசூரினா கடற்கரை எல்லாம் அவர்களைக் அழைத்துக் சென்று காட்டியது ஞாபகம் வந்தது.           

அவர்கள் காதல் ஏன் தடம்புரண்டது என்பது அவனுக்குப் புரிந்ததுவிட்டது!

எல்லாம் பணம்தான்!   

சார்! எனது தம்பி பியசெனாவை உங்களுக்கு தெரியும்தானே! அவன் கடற்படையில் சேர்ந்து, புலிகளுக்கு எதிராக போராடியவன். இப்ப அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கிறான்.

படிக்காமல் சாராயம் குடித்து விட்டு ஊர் சுற்றிக் கொண்டு திரிந்த அந்தக் கழுதையா? அவனுக்கும் பெரிய பதவியா? அவன் காதலித்து கைவிட்ட தேயிலைத் தோட்டத்துப் பெண்கள் எத்தனை பேர்!

“சார் எனக்கு காங்கேசன்துறை கடற்கரையோரத்தில் ஒரு முப்பது அறை உல்லாச விடுதி சொந்தமாக இருக்கிறது”.

காங்கேசன்துறை என்றதும் அவனது அரைத்தூக்கமும் போய் விட்டது!, காதுகள் கூர்மையாகி விட்டன! ஸ்ரீ லங்காவைச் சுற்றி எத்தனையோ கடற்கரைகள் இருக்கே! அவள் ஏன் காங்கேசன்துறை போனாள்? அவன் மனதில் ஒரு சந்தேகம்.  

வடக்கின் அந்த கடலோரம் எல்லாவற்றையும், சிறிலங்காவின் கடற்படையும், தரைப்படையும் கைப்பற்றி, போருக்குப் பிறகு, பொதுமக்களுக்குச் சொந்தமான  காணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் போர் முடிந்து ஆறு வருடங்களாகியும் தமது நிலங்களை அடைய முடியாமல் உள்நாட்டில் பல ஊர்களிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள்.

அவனது தங்கையும் காங்கேசன்துறையில்தான் கலியாணம் செய்தவள். அவளுக்கும் அதே கதிதான்! கணவனையும் போரில் இழந்து விட்டாள்.  

இப்ப குகன் அனுப்பும் காசில்தான் மூன்று பிள்ளைகளுடன் சீவிக்கிறாள்.

காங்கேசன்துறை தற்போது உயர் பாதுகாப்பு வலயம். அந்த இடத்தில் ஒரு உல்லாச விடுதி   கடற்படையின் உதவி இல்லாமல் கட்ட முடியாதே!

“சார்! கனடாவிலிருந்து யாரும் அங்கு விடுமுறையில்  செல்வதாக இருந்தால் எனக்குச் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுப்பேன்” என்றாள்.

அது போதும் அவனுக்கு! அத்துடன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டான்!

தனது வியாபாரத்துக்காக, அவனை அதிகாலை நித்திரையால் எழுப்பி, அப்பாவி  மக்களிடமிருந்து பறித்த காணிகளில் கட்டிய அந்த  உல்லாச தங்குமிட அறைகளை வாடகைக்கு விட, தமிழனான அவனையே உதவி கேட்பதற்கு அவளுக்கு எவ்வளவு துணிவு வேண்டும்!

தொலைபேசி தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருக்கிறது. குகன் எடுக்கவில்லை!

அவனது பெற்றோர்கள் இராணுவத்தின் குண்டுகளால் இறந்ததை மறக்க நினைக்கும் அவன் வேதனை அவளுக்குத் தெரியுமா?

இச்சிறுகதையில் வரும் எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பதில்லை

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.