(Reading time: 4 - 7 minutes)

கல்யாண பரிசு - சுபஸ்ரீ

Kalyana parisu

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம் ஊர்வலததின் நடுவினிலே ஒருத்தி வருவாலாம்” என்ற பாடல் மைக் செட்டில் அலறிக் கொண்டு அந்த மண்டபத்தில் திருமணம் என்பதை ஜாடையாக ஊருக்கு பறைசாற்றியது. “இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்” என மனதில் இறைவனை பிராத்திதாள்  கனகம் மணப்பெண் செல்வியின் அம்மா.

கைகளில் மருதாணி, சரசரக்கும் பட்டுபுடவை, நகை அலங்காரம் என மணக்கோலத்தில் நின்றாள் செல்வி ஆனால் அவள் கண்களில் “தன்னை காப்பாற்ற இன்னுமா அவர் வரவில்லை” என்ற சோகமும் ஏக்கமும் அவளை தானாக ஜன்னல்பக்கம் திரும்பிபார்க்க செய்தது. இதை அறிந்த அவள் அம்மா “பாரு செல்வி ..... இனிமே நாங்க சொல்றததான் நீ கேட்கணும் ராசுமாமாவ கல்யாணம் கட்டிக்கிட்டு ஒழுங்க இருக்கணும் .. புரியுதா? இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசை படாத” என ஆதங்கத்துடன் அறிவுரை கூறினாள்.

“இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்தணும் .. நடக்கவிடமாட்டேன்” என கருவிக் கொண்டு கல்யாண மண்டபத்தை நோக்கி தன்  நண்பன் சிவாவுடன் கார்த்தி  காரில் வந்துக் கொண்டிருந்தான்.  காரின் வேகத்தைவிட கார்த்தி மனம் வேகமாக ஓடியது. செல்வியின் துறுதுறுப்பும், பேச்சும் கண்முன் வந்து இம்சை செய்தது. மனதில் செல்வியைப் பற்றிய நினைவுகள் கனத்தது. கையில் செல்வியின் பிறந்த நாளுக்காக வாங்கிய பரிசு கனத்தது. அடுத்த மாதம் அவளுக்கு பிறந்தநாள் எத்தனை ஆசையாக இந்த பரிசை அவளுக்கு கொடுக்க வாங்கினான். இந்த பிறந்த நாள் பரிசு கல்யாணப் பரிசாக மாறிவிடக் கூடாதே என கடவுளை கார்த்தியின் மனம் வேண்டியது. கடவுள் யார் பக்கம் செவிமடுக்க போகிறாரோ என்ற எண்ணமும் பயமும் வேறு கார்த்தியை பாடாய்படுத்தியது. கல்யாணப் பரிசாக மாறினாலும் இனி அவளுக்கு பயன்படாது என அவன் மனம் வாடியது.

“போலீசுக்கு சொல்லிட்டியாடா?” என கார்த்தி கேட்க .. காரை ஓட்டிக் கொண்டே நண்பன் சிவா “சொல்லிட்டேன் ... அவங்களும் அங்க போவாங்க“ மேலும் “ஏன் இப்படி அவசரமா கல்யாணம் பண்றாங்க? அதுவும் ரகசியமா” என்ற சிவாவின் கேள்வி குழம்பிய குட்டையை இன்னும் குழப்பியது. “தெரியல அவ படிப்பைக்கூட நிறுத்திட்டான் அவ அப்பன்”  என கார்த்தியிடமிருந்து  பதில் வந்தது.

“எனக்கு எங்க ஊர்ள அடுத்த புதன்கிழமை கல்யாணம்.- செல்வி” என்ற ஒற்றைவரி கடிதத்தை கார்த்தியின் கண்கள் மீண்டும் படித்தன “இது செல்வி கையெழுத்துனு நல்லா தெரியுமா?” என்ற சிவாவின் கேள்விக்கு. “எனக்கு நல்லா தெரியும் இது அவளோட கையெழுத்துதான்” வண்டி திண்டிவனத்தை சேர்ந்தார்போல் இருந்த பகுதிக்குள் புகுந்தது.

கார்த்தி மனது சுமார் ஒரிரு வாரத்திற்கு முன்பு தனக்கும் கனகத்துக்கும் நடந்த உரையாடல் அசைப்போட்டது. “என் மகள் வாழ்க்கைய கெடுத்துடாதீங்க ... அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுக்க அவள பெத்தவங்க நாங்க இருக்கோம். எதையோ சொல்லி அவ மனசை களைச்சிடாதீங்க ... ”

காவல்துறை செல்போனில் கார்த்தியை தொடர்புகொண்டது  “செல்வியோட அப்பா ஐய்யாதுரை சங்கம் அபார்ட்மென்ட்லதான் வாட்ச்மேன் ... ஆமா அதேதான் அவங்க விலாசம். பொண்ணுக்கு இஷ்டமில்ல ” என மணிரத்னபடம் பானியில் கார்த்தியின் பதில்கள் ஒருவரியில் முடிந்தது. காரை ஓட்டியபடி சிவா இதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

கார்த்தியும் சிவாவும் அங்கு செல்ல அவர்களுக்குமுன்பே காவல்துறை மும்முரமாக தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தது. “என்னடா எப்பவும் போலீஸ் கடைசிலதான் வருவாங்க இன்னிக்கு நமக்கு முன்னால வந்துட்டாங்க?” என கேட்ட சிவாவை கவனிக்காமல் அவசரமாக கல்யாண மண்டபத்துக்குள் கார்த்தியின் கால்கள் ஓடின. வழியில் கனகம் அழுகையுடன் எதிர்ப்பட்டாள் “என் பொண்ணு மனச கெடுத்து அவ வாழ்க்கைய இப்படி நாசம் பண்ணிட்டயே நீ நல்லாவே இருக்க மாட்டே” என சபித்தாள். அதை காதில் வாங்காமல் உள்ளே செல்ல கல்யாண மண்டபமே அமளிதுமளியாய் இருந்தது.

ஒரு ஓரத்தில் நின்று அழுதுக் கொண்டிருந்தாள் செல்வி  கார்த்தியை பார்த்ததும் ஓடி வந்து அவன் அருகில் நின்று “நீங்க எப்படியும் வருவீங்கனு தெரியும்”  என்றாள் பதினாறு வயது செல்வி. “பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வி” என அவள் கையில் புது காலேஜ்கான அட்மிஷன் பார்மை கொடுத்தான் அவளின் பள்ளி ஆசிரியரான கார்த்தி கண்கள் வேர்க்க. அவள் நன்றி கலந்த பார்வையோடு அதை பெற்றுக் கொண்டாள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.